பூக்கள் மிகவும் அதிகமாக திருமணங்கள், பூஜைகள் போன்ற மங்கல காரியங்களுக்குப் பயன்படுகிறது. நாம் சந்தையில் உதிரி பூக்களை வாங்கி வந்து கட்டிவைத்து தினமும் பூஜைக்கும், தலையில் சூடிக் கொள்வதற்கும் பயன்படுத்துவது உண்டு. பொதுவாக விழாக்கள், பண்டிகைகள் வரும்போது மொத்தமாக வாங்கிக் கட்டி வைத்துக் கொள்வோம்.
சில சமயங்களில் நிறைய பூ மலிவாகக் கிடைத்து விடும். தேவைக்குப் போக மீதி பூவை சில பேர் பிரிட்ஜில் வைத்து விட்டு சிறிது சிறிதாக எடுக்கலாம் என்று நினைப்பார்கள். அப்படி பிரிட்ஜில் ஸ்டோர் செய்யும் பூக்கள் 2 நாட்களில் பழுப்பு நிறத்தில் வாடிப் போக ஆரம்பித்து விடும். ஒரு வாரம் வரை பூக்கள் வாடாமல் இருக்க அவற்றை பிரிட்ஜில் ஸ்டோர் செய்வது எப்படி? பிரிட்ஜ் இல்லாமல் ஸ்டோர் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
கடைக்குச் சென்று நல்ல மொட்டாக இருக்கும் பூவை வாங்கி வைத்துக் கொள்ளவும். பிறகு பூக்களை கவரைப் பிரித்து ஒரு பேப்பரில் கொட்டி 10 நிமிடம் நிழலில் உலர விடவும். ஃபேன் காற்றில் உலர விடக் கூடாது. ஒரு வாரம் வரை நாம் கட்டி வைத்தப் பூக்கள் வாடாமல் இருக்க செய்ய வேண்டிய மூன்று வழிகளை இந்தப் பதிவில் காணலாம்.
1. பூக்கள் மொட்டாக இருக்கும்போதே கட்டி விட வேண்டும். பூக்களைக் கட்டும்போது பூக்கள் கசங்கி காம்புகளை உடைத்து விடாமல் கவனமாகக் கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பெரிய சில்வர் டப்பா எடுத்துக்கொண்டு அதன் அடியில் ஒரு பேப்பரை போட்டு கட்டியப் பூக்களை அதில் வைக்கலாம் பூக்களுக்கு இடையிடையே சிறு சிறு பேப்பர் துண்டுகளை வைத்து விடவும். அதாவது, பூக்களைச் சுற்றும்போது ஒவ்வொரு அடுக்கிற்கும் இடையில் பேப்பர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பிறகு பூக்களுக்கு மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து விட்டு டப்பாவை மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து விடவும். இப்படி வைக்கும்போது ஒரு வாரம் வரை பூக்கள் வாடாமல் இருக்கும்.
2. கட்டிய பூவை எடுத்து அழகாக சுருட்டி வாழை இலையில் வைத்து முழுமையாக மடித்து பூவை லேசாகக் கூட அழுத்தம் கொடுக்காமல் பேக் செய்து கொள்ளவும். இதை அப்படியே ஒரு சில்வர் டப்பாவில் வைத்து மூடி போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை பூ மொட்டாக ஃபிரஷ்ஷாக இருக்கும். பூவை ஒருசில இடங்களில் வாழை இலையில் வைத்து சுருட்டித்தான் கட்டித் தருவார்கள். இதற்குக் காரணம் வாழை இலையில் சுருட்டி கொடுத்தால் பூ சீக்கிரத்தில் வாடாமல் இருக்கும் என்பதால்தான். தற்காலத்தில்தான் பூ கட்ட நூலைப் பயன்படுத்துகிறார்கள். அந்தக் காலத்தில் பூவை வாழை நாரில்தான் கட்டுவார்கள். பூ வாடாமல் இருக்க முன்னோர்கள் இந்தப் பழக்கத்தை வைத்திருந்தார்கள்.
3. உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இல்லாவிட்டால் அல்லது பிரிட்ஜ் இருந்தும் அதில் ஸ்டோர் பண்ணப் பிடிக்காவிட்டால் ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். அதன் மேலே வாழை இலையை மிதக்க வைத்து அதன் மேலே கட்டிய பூவை வைத்து பூவுக்கு மேலே மெல்லிய ஈர காட்டன் துணியை நனைத்துப் பிழிந்து பூக்களை மூடி அதன் மேல் ஒரு சில்வர் தட்டை கவிழ்த்து வைத்தால் இந்தப் பூவும் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும். (வாழை இலையை தண்ணீரில் மிதக்க வைக்கும்போது இலைக்கு மேலே தண்ணீர் வந்து விடக் கூடாது) ஈரத் துணி காய்ந்து விடாமல் மீண்டும் தண்ணீர் நனைத்து விடலாம்.
இதுபோன்ற சிறு சிறு விஷயங்களை தேவைப்படும்போது நாமும் உபயோகப்படுத்தி பார்க்கலாம்.