விமர்சனம்: 'பஹீரா' - மூக்கைத் துளைக்கும் நெடியுடன் மற்றுமொரு லாஜிக்கில்லா மசாலா படம்!

Bagheera movie review
Bagheera movie review
Published on

அந்தக் கால தெலுங்கு படங்களுக்கென்று ஒரு டெம்பிளேட் இருந்தது. சண்டை, பாடல், சென்டிமென்ட், பாரின் லொகேஷன் என ஒரே மாதிரி இருக்கும். கே ஜி எப், காந்தாரா, சலார் வெற்றிகளுக்குப் பிறகு கன்னடப் படவுலகிற்கு என்று ஒரு டெம்பிளேட் உருவாக்கி வருகிறது. அந்தக் கே ஜி எப், சலார்  படங்களின் இயக்குனரான பிரசாந்த் நீலின் கதை என்றால் வேறு எப்படி இருக்கும்?! அதுவும் இதில் ஹீரோ அவரது மைத்துனர். அது மட்டுமல்லாது அவர் முதல் பட ஹீரோ வேறு. கேட்கவே வேண்டாம். பார்த்தார். பேட்மேன் படக்கதையை தூசு தட்டி பட்டி டிங்கரிங் பார்த்தார். கோதாம் நகரத்தை மங்களூரு என மாற்றினார். மற்றபடி அதே முகமூடி, கவச உடை, சண்டைகள் என மாற்றிப் 'பஹீரா' என்று பெயர் மாற்றி... ஒரு படம் தயார். 

கதை இருக்கிறதோ இல்லையோ, ஹொம்பாலே நிறுவனம் காசு நிறைய செலவு செய்யத் தயாராக இருக்கிறது. இதுவும் அந்த நிறுவனத்தின் தயாரிப்புத் தான். ஹீரோ - ரோரிங் ஸ்டார் ஸ்ரீ முரளி. கதை என்று எதாவது சொல்ல வேண்டுமல்லவா. சிறு வயதிலிருந்தே சூப்பர் மேன் போல ஒரு சாகசவீரனாக மாறி நாட்டைக் காக்க வேண்டும் என்பது வேதாந்த்தின் (ஸ்ரீ முரளி) கனவு. தனது தந்தை காவல் அதிகாரியாய் (அச்யுத்குமார்) இருப்பதால் நாட்டைக் காக்க போலீசில் சேர்ந்தால் போதும். நீயும் சூப்பர் மேன் தான் என்று சொல்லி வளர்க்கிறார் அவரது தாய் சுதா ராணி.

ஒரு கட்டத்தில், லஞ்ச லாவண்யம் தாண்டவமாடும் முக்கிய துறை போலீஸ்; தனது போஸ்டிங்கும் லஞ்சத்தால் வந்ததுதான் என்பதை உணர்கிறார். மனமுடைந்து போகும் அவருக்குத் தன் மேலே வெறுப்பு வந்து தவறான பாதையில் செல்லத் துவங்குகிறார். இந்தச் சூழ்நிலையில் அவரது அலுவலகத்தில் நடக்கும் ஒரு சம்பவம் அவர் மனநிலையை மாற்றுகிறது. சாதாரண போலீசாக இருந்தால் எதையும் சாதிக்க முடியாது. யாருக்கும் தெரியாத சூப்பர் மேனாக மாறினால் கெட்ட சக்திகளை அழிக்க முடியும் என்று புது அவதாரமெடுக்கிறார். அவன் தான் பஹீரா. 

நாடு முழுதும் அப்பாவி மக்களைக் கடத்தி உடலுறுப்புகளை விற்கும் மிகப் பெரிய தாதா ராணா (கருடராம்). ஒரு கட்டத்தில் இவர் பஹீராவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். கடைசியில் என்ன நடந்தது. பஹீரா ஜெயித்தாரா இல்லையா என்பது தான் கதை. (அவர் தோற்பாரா என்ன?)

ஹீரோ என்று ஒருவர் இருந்தால் ஹீரோயின் இருக்க வேண்டுமல்லவா. அதற்காக ருக்மிணி வசந்த். (சுத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கும் ஒரு பாத்திரம்)

சண்டைக்காட்சிகளை மட்டும் நம்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் சூரி. வகை வகையாக எதிரிகளைக் கொல்வதற்கென்றே அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள். அதுவும் இடைவேளைக்குப் பிறகு ஒரு ஹேக்கர், ஒரு பளிச் சிறுவன், ஒரு குடிகார பட்டாசு ஊழியர் என அவர் ஒரு அணி அமைக்கிறார் பாருங்கள். அடேங்கப்பா! 

ஒரு சின்னக் கைக்குட்டை மட்டும் முகத்தில் கட்டிக் கொண்டால் இன்னொரு அவதாரமாக மாறிவிடலாம் என்று இன்றும் நம்ப வைக்கப் பார்க்கிறார்கள் பாருங்கள்... அந்தத் தைரியத்திற்கே பாராட்டலாம்.

கன்னட டெம்பிளேட் என்று சொன்னது எதற்குத் தெரியுமா. படம் முழுதும் ஒரு கும்பல் யாரையாவது பார்த்து நடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அடித் தொண்டையில் பேசுகிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் பஹீரா என்று அவன் புகழ் படுகிறார்கள். இதில் பிரகாஷ் ராஜ் இடையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார். கதையில் ட்விஸ்ட் என்ற போர்வையில் ஒரு காரியத்தைச் செய்கிறார். சிறு குழந்தை கூட அதை ட்விஸ்ட் என்று ஏற்றுக் கொள்ளாது. கடைசியில் ஒரு பொட்டை பாலைவனத்தில் ரயில் நிலையம் ஒன்றைக் காட்டி அதற்குக் காரியாபட்டி என்று பெயர் வைத்தார்கள் பாருங்கள், அங்கே தெரிந்தது இந்தப் படத்தின் ப்ரொடக்ஷன் டிசைன் குழுவின் அர்ப்பணிப்பு!

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஜீப்ரா (தெலுங்கு) - அக்கடதேசத்து அசத்தல் படம்!
Bagheera movie review

ஹீரோ ஸ்ரீமுரளி சண்டை மட்டும் நன்றாகக் போடுகிறார். முகத்தில் உணர்ச்சிகள் வருவேனா என்று அடம் பிடிக்கிறது. கடைசி வரை ஊஹூம். 

ரயிலில் நடக்கும் அந்தக் கிளைமாக்ஸும் அந்த ரயிலுக்குப் பஹீரா எப்படி வருகிறார் என்பதும் தான் உச்சக்கட்ட சஸ்பென்சான நகைச்சுவை. லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று ஒவ்வொரு காட்சியிலும் நம்மைக் கேட்க வைக்கிறார்கள்.

மிரட்ட வைக்கும் பின்னணி இசை, நம்பவே முடியாத சண்டைக் காட்சிகள், பரட்டைத் தலை வில்லன்கள், இருளான காட்சிகள், நாயகனின் துதி பாடல்கள் போன்றவை இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் இது போன்ற இரண்டரை மணி நேர அவஸ்தைகளை ரசிகர்கள் நிர்தாட்சண்யமாக நிராகரித்து விடுவார்கள்.

ஓ டி டி தளங்களில் பார்ப்பதில் உள்ள ஒரு வசதி இது போன்றவற்றை தவணை முறையில் அனுபவிக்கலாம் அல்லது அணைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம். பார்த்து முடித்தபின் நமக்குள் எழுந்த மிகப்பெரிய நிம்மதி நல்ல வேளை இதைத் திரையரங்கிற்குச் சென்று பார்க்கவில்லை என்பதே! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com