Monsoon maintenance 
வீடு / குடும்பம்

மழைக்காலத்தில் அனைவரும் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ழைக்காலம் வந்துவிட்டாலே விஷ பூச்சிகள், பாம்புகள், தேள் போன்ற உயிரினங்கள் நம் வீட்டு கார் போன்ற வாகனங்களுக்குள் நுழைய வாய்ப்புகள் அதிகம். எனவே, டூ வீலர், கார் போன்றவற்றை எடுப்பதற்கு முன் ஒரு முறை சரிபார்த்து விடுவது நல்லது.

ஈரமான வழுக்கும் தரைப் பகுதிகளில் நடக்கும்பொழுது அதிக கவனம் தேவை. விழுந்து அடிபடாமல் இருக்க இருண்ட இடங்களில் விளக்குகளை எப்போதும் எரிய விடுவது நல்லது. படிக்கட்டுகளில் ஏறும்பொழுதும், இறங்கும்பொழுதும் தடுமாறாமல் இருக்க கைப்பிடிச் சுவர்களை பிடித்துக் கொண்டு இறங்குவது பாதுகாப்பானது.

மழைக்காலங்களில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இரவு பயணத்தை தவிர்த்து விடுவதும், சாகச மற்றும் அபாயகரமான செயல்களை தவிர்ப்பதும், சாலைகளில் வெள்ளம் காரணமாக இடர் ஏற்படின் மாற்று வழிகளை தெரிந்து வைத்திருப்பதும் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கும்.

பயணத்தின்போது மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கேமராக்கள் போன்ற மின்னணு சாதனங்கள் ஈரமாகாமல் பாதுகாப்பது நல்லது. கூடவே பவர் பேங்கை உடன் எடுத்துச் செல்வதும் நல்லது. தொடர் மழையால் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்களில் மொபைல் போன்கள் மற்றும் கேமராக்களை சார்ஜ் செய்ய கூடுதல் பேட்டரிகள் மற்றும் பவர் பேங்க்களை எடுத்துச் செல்வது உதவியாக இருக்கும்.

தண்ணீர் மற்றும் பூச்சிகளால் பரவும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் மழைக்காலத்தில் அதிகரிக்கும். இதனை தடுப்பதற்கு சுகாதாரமற்ற நீரில் வாய் கொப்பளிப்பதைத் தவிர்க்கலாம். நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்த நீரைப் பருகலாம். குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது சீரகம் அல்லது ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க, வயிறு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகாது. வீட்டு தண்ணீர் தொட்டியில் குளோரினை பயன்படுத்த வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வருவதைத் தடுக்க முடியும்.

வீட்டைச் சுற்றி தேவையற்ற குப்பைகளோ, தண்ணீரோ தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன், வீட்டை சுற்றி மண்ணெண்ணெய் சிறிது தெளித்து வைக்க கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்காது. இதன் மூலம் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

மழைக் காலங்களில் தொற்று நோய்களை தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவதும், வெளியில் இருந்து வந்ததும் கால்களை நன்கு கழுவி ஈரம் போகத் துடைப்பதும் பூஞ்சை தொற்று, நோய் தொற்று போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கூடியமட்டும் வெளி உணவுகளைத் தவிர்த்து, எளிய உணவானாலும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நோய்கள் உண்டாவதைத் தடுக்கும். பச்சையாகவோ அல்லது சமைக்காத உணவுகளையோ உண்பதைத் தவிப்பது நல்லது. மழைக்காலங்களில் நாம் உண்ணும் தினசரி உணவில் சிறிது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இஞ்சி, மிளகு, சீரகம், சுக்கு, மஞ்சள் தூள், தனியா, பூண்டு போன்றவற்றை சமையலில் சேர்த்துக் கொள்வது ஜீரணத்திற்கு நல்லது.

ஹெர்பல் டீ எனப்படும் மூலிகை தேநீரை குடிப்பது இருமல், சளி தொல்லையை வர விடாமல் செய்யும். தேநீரில் இஞ்சி, கிராம்பு, துளசி, பட்டை, மிளகு, புதினா போன்ற பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் சாலையோரக் கடைகளில் உண்பதையும், குளிர்ந்த காற்றூட்டப்பட்ட பானங்களை அருந்துவதையும், சமைக்காத பச்சை காய்கறிகளையும், கடல் உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT