Love vs Marriage  
வீடு / குடும்பம்

காதலுக்கும் திருமணத்திற்கும் என்ன வித்தியாசம்? ஞானியின் விளக்கம் இதோ!

ரா.வ.பாலகிருஷ்ணன்

காதலுக்கும், திருமணத்திற்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்று அறிய முற்படுவோருக்கு, இந்தப் பதிவில் தரப்பட்டிருக்கும் ஒரு ஞானியின் விளக்கம் தெளிவுபடுத்தும்.

நாகரிகம் தொன்றுதொட்டு வளர காதல் தான் அடிப்படை என்பது நம்மில் பலரது எண்ணமாகும். ஆண் பெண் இருபாலருக்குமான உன்னத உறவை வெளிப்படுத்தும் காதல் மற்றும் காதலுக்கு அடுத்த கட்ட நகர்வான திருமணம் ஆகிய இரண்டுக்குமான வித்தியாசங்கள் நம்மிடையே வேறுபட்டு இருக்கிறது. இருப்பினும் காதலுக்கும் திருமணத்திற்கும் என்ன தான் வித்தியாசம் என அறிய முயன்ற ஒரு சீடன், தனது ஞானியிடம் இதுபற்றி வினவினான். இதற்கான விடையை தனது சீடனுக்கு மிகவும் புத்திசாலித்தனமாக புரிய வைக்க முயற்சி செய்தார் இந்த ஞானி.

ஞானி சீடனிடம், "இப்போது நீ ஒரு ரோஜா தோட்டத்திற்குச் செல். அங்கே பெரியதாக இருக்கும் ஒரு ரோஜா செடியைப் பிடிங்கி வா" என்றார். "ஆனால் நீ போன பாதையில் மீண்டும் திரும்பி வரக் கூடாது" என்று ஒரு நிபந்தனையையும் விதித்தார். உடனே சென்ற சீடன், சிறிது நேரம் கழித்து வெறுங்கையுடன் திரும்பினான். சீடனைப் பார்த்த ஞானி, "எந்தச் செடியும் உயரமாக இல்லையா? ஏன் வெறுங்கையை வீசிக் கொண்டு வந்தாய்?" எனக் கேட்டார்.

"நான் ரோஜா தோட்டத்திற்குள் செல்ல செல்ல உயரமான செடிகளைக் கண்டேன். ஆனால் இன்னும் உள்ளே சென்று பார்த்தால் இதை விடப் பெரிய செடி கிடைக்கும் எனச் சென்று கொண்டே இருந்தேன். முடிவில் செடிகள் ஏதுமின்றி தோட்டமே முடிந்து விட்டது. வந்த பாதையில் திரும்ப வரக் கூடதல்லவா, ஆகையால் வெறுங்கையுடன் வந்து விட்டேன்" என்றான் சீடன்.

"சரி, இப்போது நீ சூரியகாந்தி தோட்டத்திற்குச் செல். இங்கேயும் அதே நிபந்தனை தான். பெரிய சூரியகாந்திச் செடியை பிடிங்கி வா" என்றார் ஞானி.

உடனே சென்ற சீடன், சிறிது நேரத்திலேயே ஒரு சூரியகாந்திச் செடியுடன் வந்தான். இதனைக் கண்ட ஞானி, இதை விட பெரிய செடி தோட்டத்தில் இல்லையா?" எனக் கேட்டார்.

"பெரிய செடிகள் இருந்தன; ஆனால் ரோஜா தோட்டத்தில் செய்த தவறை இங்கேயும் செய்ய நான் விரும்பவில்லை. ஆதலால் முதலில் இருந்த செடியையே பிடிங்கி கொண்டு வந்து விட்டேன்" என்றான் சீடன்.

இதனைக் கேட்ட ஞானி, "ஆக நீ முன் கற்ற அனுபவத்தால் இப்போது கிடைத்தவரை போதும் என்ற பக்குவத்திற்கு வந்துவிட்டாய் அல்லவா! நீ முதலில் சென்ற ரோஜா தோட்டத்தில் ஏற்பட்ட அனுபவம் தான் காதல்; அதன்பிறகு சென்ற சூரியகாந்தி தோட்டத்தில் அனுபவத்தால் நிகழ்ந்த உனது செயல் தான் திருமணம்," என்று இரண்டிற்குமான வித்தியாசத்தை தெளிவுப்படுத்தினார்.

காதலில் தோல்வி கண்டால் நமது வாழ்க்கை முடிவுக்கு வருவதில்லை; அந்த அனுபவம் நமக்கு திருமணத்தில் கைகொடுக்கும். இரண்டுமே உன்னதமான உறவுகள். இரண்டையும் சரியான முறையில் கையாளக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT