Old age and youth 
வீடு / குடும்பம்

முதுமையும் இளமையும் இணைந்தால் கிடைப்பது அனுபவமும் புதுமையும்!

எஸ்.விஜயலட்சுமி

வ்வொரு வீட்டிலும் இருக்கும் முதியவர்கள் அந்தக் குடும்பத்தின் மதிப்புமிக்க பொக்கிஷங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான வாழ்க்கைப் பாடங்களும் அனுபவங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அதேபோல இளையோரிடமிருந்து புதுமையான யோசனைகளையும் உற்சாகத்தையும் மூத்தோர் பெற முடியும்.

அனுபவப் பாடங்கள்: தங்கள் நீண்ட வாழ்நாளில் எத்தனையோ அனுபவங்களுக்கு ஆளாகி இருக்கும் முதியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு நிகழ்வையும் தாமே அனுபவித்துத் தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணாமல் பெரியவர்களின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அதற்கேற்றாற்போல தங்கள் வாழ்க்கையை இளையோர் அமைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.

வழிகாட்டிகள்: ஞானம், அறிவு போன்றவற்றில் சிறந்து விளங்கும் பெரியவர்கள் இளைஞர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல வழிகாட்டிகளாக விளங்குவார்கள். சிறிய விஷயங்களுக்குக் கூட மனமுடைந்து போகும் இளையோருக்கு, எத்தனை சிக்கல்கள் வந்தாலும் வாழ்க்கை என்பது ஒரு அற்புதமான பயணம். அதில் இடர்ப்பாடுகளும் போராட்டங்களும் வந்தாலும் கடைசி வரை பயணித்து இலக்கை சென்றடைய வேண்டும் என்கிற அருமையான வழிகாட்டுதலை பெரியவர்கள் அவர்களுக்கு வழங்கலாம்.

கலாசாரக் காவலர்கள்: முதியவர்கள் தங்கள் கலாசாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் மதிப்புகளை இளையர்வர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். பண்பாடுகளைக் காப்பாற்றி கலாசாரத்தை வளர்ப்பது அவசியம் என்கிற கோட்பாடை பெரியவர்கள் குடும்பத்தினருக்கு உணர்த்தி வழி நடத்துவார்கள்.

முன்மாதிரிகள்: இலக்குகளை நிர்ணயித்து அவற்றை ஆர்வத்துடன் பின்பற்றி அவற்றை அடைய வேண்டிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெரியவர்கள் இளையோருக்கு வழங்கலாம். அவர்களுடன் தொடர்ந்து பழகுவது இளைஞர்களுக்கு பச்சாதாபம், புரிதல், பொறுமை, நிதானம், விடாமுயற்சி போன்றவற்றை கற்றுத் தரும்.

உறவுப்பாலம்: வயதான நபர்களுடன் பழகுவது அருமையான உறவுப்பாலத்தை ஏற்படுத்த உதவும். குடும்பம், உறவுகள், சமூகம் மற்றும் தலைமுறைகள் போன்றவற்றுடனான ஒரு பலமான தொடர்பை வளர்க்கும். மூத்தோர்கள் தங்கள் கடந்த காலத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இளையோருக்கு வழங்குவார்கள்.

நிதானமான அணுகுமுறை: எதிலும் அவசரம், வேண்டுவன அனைத்தும் உடனே கிடைக்க வேண்டும் என்கிற மனப்போக்கு இளைஞர்களிடத்தில் இருக்கும். ஆனால், நிதானமும் பொறுமையும்தான் ஒருவருக்கு வேண்டியவற்றை கிடைக்கச் செய்யும் ஆயுதங்கள். வாழ்க்கையில் தாங்கள் கடந்து வந்த சிரமமான பாதையில் பொறுமையையும் நம்பிக்கையையும் முன்வைத்து நடைபோட்ட காலகட்டங்களை இளையவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

இளையோருடன் கூடியிருப்பதால் பெரியவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:

உற்சாகம்: இளைய நபர்களுடன் நேரத்தை செலவிடுவது தனிமை என்னும் உணர்வை உதறித்தள்ள பெரியவர்களுக்கு உதவுகிறது. அவர்கள் மூலமாக நல்லதொரு சமூகத் தொடர்பை அவர்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியும். உற்சாகத்தின் ஊற்றுகளாக விளங்கும் இளையவர்களின் மனப்பாங்கு பெரியவர்களுக்கும் கிடைத்து அவர்களும் சோகமான மனநிலையை விட்டு வெளியேறி மகிழ்ச்சி அடைவார்கள்.

ஈடுபாடும் சுறுசுறுப்பும்: இயல்பாகவே சுறுசுறுப்பாக இருக்கும் இளையவர்களின் மனநிலை பெரியவர்களையும் தொற்றிக் கொள்ளலாம். அவர்களைப் போலவே சுறுசுறுப்போடும் எடுத்த வேலையை ஈடுபாட்டோடும் செய்ய பெரியவர்களை ஊக்குவிக்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்களுக்கு அது மிகுந்த நன்மையைத் தரும்.

செவிமெடுத்தல்: பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய மன உணர்வுகளை, கவலைகளை, சோகங்களை உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் நிறைய இளம் வயதினர் தடுமாறுகின்றனர். அதுபோல பல பெரியவர்களும் தம் உணர்வுகளை வெளிபடுத்த முடியாமல் தவிக்கின்றனர். இருபாலரும், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கலாம். தங்களுடைய உணர்ச்சிகளை வெளியே கொட்டி ஆறுதல் தேடும் இளைய தலைமுறைக்கு மூத்தவர்கள் கை கொடுக்கலாம். தேவையான நேரத்தில் அறிவுரையும் ஆலோசனையும் வழங்கலாம்.

ஆரோக்கிய சிந்தனை: வயதான காலத்திலும் ஆரோக்கியமாக வாழலாம் என்ற நம்பிக்கையை மூத்தோர் மனதில் ஆழமாக பதிய வைக்கலாம். முன்னேறியுள்ள மருத்துவமும், உடற்பயிற்சி முறைகளும் ஆரோக்கிய வாழ்வைத் தக்க வைக்கும் என்கிற உண்மையை பெரியவர்களுக்கு எடுத்துச் சொல்லி நல்வாழ்விற்கு வித்திடலாம்.

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT