மனிதர்கள் பலரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது ஏன் என்ற கேள்வி பலரது மனதிலும் இருக்கிறது. இதற்கான காரணம் என்ன? ஜென் துறவி ஒருவர் என்ன கூறுகிறார்? விளக்குகிறது இந்தப் பதிவு.
மனித நாகரிகம் நன்றாக வளர்ந்துள்ள இன்றைய நிலையில் சண்டை சச்சரவுகள் மட்டும் குறைந்தபாடில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பதும், பொறுமையை கடைபிடிக்கத் தவறுவதுமே மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது. இருப்பினும் வீண் சண்டைகளைத் தவிர்க்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியும். மனிதர்கள் அனைவரிடத்திலும் பொறுமை குடிகொண்டால் சண்டைகள் என்பதே இருக்காது.
மிகவும் புத்திசாலியான ஜென் துறவி ஒருவர் எப்போதும் யாசகம் பெற்றுத் தான் உணவருந்துவார். இவரைப் பற்றி பலரும் அறிந்த நிலையில், ஒருநாள் இவர் ஒரு செல்வந்தர் வீட்டுக்கு உணவருந்த யாசகம் கேட்டுச் சென்றார். ஜென் துறவியைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்த செல்வந்தர், அவரை வணங்கி விருந்துணவு படைத்து நன்றாக கவனித்துக் கொண்டார். தனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள ஜென் துறவி தான் சரியான நபர் என்று உணர்ந்து கொண்டார் செல்வந்தர். விருந்து உபசரிப்பு முடிந்தவுடன், “மனிதர்கள் ஏன் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றனர்; அனைவருக்கும் அமைதியான வாழ்க்கை சாத்தியம் இல்லையா” என ஜென் துறவியிடம் அவர் கேட்டார்.
"எனது பசியை ஆற்றிக் கொள்ளவே நான் இங்கு வந்தேன். உனது கேள்விக்கு விடையளிக்க நான் இங்கு வரவில்லை" என்றார் ஜென் துறவி. இதனைக் கேட்டதும் செல்வந்தருக்கு கோபம் பெருக்கெடுத்தது. "என்ன பதில் இது. உணவளித்த என்னிடம் இப்படித் தான் பேசுவீர்களா, அனைவரும் உங்களைப் பெரிய ஞானி என்றல்லவா கூறுகின்றனர். ஆனால், நீங்களோ இப்படி என்னை அவமதித்து பேசுகிறீர்களே" எனத் திட்டினார்.
சில நிமிடங்கள் மௌனம் காத்த ஜென் துறவி, “உங்களுக்குப் பிடிக்காத பதிலை நான் சொன்னதும் உடனே கோபம் வந்துவிட்டது. என்னை மிகவும் மோசமாகப் பேசினீர்கள். பதிலுக்கு நானும் பேசியிருந்தால் சண்டை தான் வந்திருக்கும் அல்லவா! ஆக ஒருவருடைய கோபம் தான் இங்கு அனைத்துச் சண்டைகளுக்கும் காரணம். கோபத்தை கைவிட்டால் அனைவருக்குமே அமைதியான வாழ்க்கை சாத்தியம் தான்,” எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் ஜென் துறவி. இதனைக் கேட்ட செல்வந்தர் அன்றிலிருந்து எது நடந்தாலும் கோபப்படுவதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.
அடுத்தவர் நிலையில் நம்மை நினைத்துப் பார்த்தால், இங்கு பலருக்கும் கோபமும், வெறுப்புணர்வும் வராது. மனிதர்கள் சிறுசிறு விஷயங்களைக் கூட புரிந்து கொள்ளாமல் சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். சில நிமிட கோபத்தை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால், பல ஆண்டுகள் நம்மால் நிம்மதியாக மன அமைதியோடு வாழ முடியும்.