பொதுவாக, ஒரு மனிதன் தனக்கு மிக மிகப் பிடித்த நபர்களின் மீது அதிக அளவு பிரியத்தையும் அன்பையும் செலுத்துவது வழக்கம். சிலருக்கு மனிதர்களை விட தான் வளர்க்கும் நாய், பூனை இவற்றின் மீதும் அதிகம் பிரியம் வைப்பார்கள். சிலருக்கு பணம், பொருள் இவற்றில் பற்றும் பாசமும் அதிகமாக இருக்கும. ஆனால், இவை எல்லாவற்றையும் விட எல்லா மனிதர்களும் நேசிக்க வேண்டிய ஒரு நபர் யார் என்பதை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க போகிறோம்.
ஒரு மனிதரைப் பார்த்து உங்களுக்கு மிகப் பிடித்தமான ஐந்து நபர்களின் பெயர்களை சொல்லுங்கள் என்றால் அவர் தன் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலமானவர்களின் பெயரை சொல்லக்கூடும். ஆனால், தன் பெயரை சொல்ல மாட்டார். உண்மையில் ஒரு நபர் அதிகமாக நேசிக்க வேண்டிய நபர் அவரேதான். தன்னைத்தானே ஒருவர் நேசிப்பது மிக அவசியம்.
துரதிஷ்டவசமாக நமது சிறு வயதில் இருந்து பிறரையும் பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்று பயிற்றுவிக்கப்படுகிறோம், அறிவுறுத்தப்படுகிறோம். ஆனால், யாரும் உன்னையே நீ நேசி என்று சொல்வது இல்லை. சுய நேசிப்பு என்பது சுயநலத்தின் அடையாளம் அல்ல.
ஒருவர் தன்னைத்தானே நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதை தன் வாழ்வில பிரயோகிக்க வேண்டும் தன்னை பற்றிய சிந்தனை ஒரு மனிதனுக்கு அவசியம் இருக்க வேண்டும். அதற்கு தன்னை தானே நேசித்தால்தான் தன் முன்னேற்றத்தைப் பற்றி அவனால் சிந்திக்கவே முடியும். தன்னையே ஒருவன் அன்பாக நேசித்தால்தான் பிறரின் மேலும் இயல்பாக கருணையும் அன்பும் எழும். தன்னைத்தான் நேசிக்காத ஒரு மனிதன் பெரும்பாலும் தீவிரவாதியாகவோ பயங்கரவாதியாகவோதான் இருக்கிறான். தன் உயிரைப் பற்றி கவலைப்படாத மனிதன் பிற உயிர்களின் அழிவு பற்றியும் கவலைப்படுவதில்லை.
தன்னை நேசிக்கும் ஒரு மனிதன் தன் உடலையும் உள்ளத்தையும் போற்றிப் பாதுகாப்பான். சத்தான உணவுகளை உண்டு உடற்பயிற்சிகள் செய்து தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வான். நன்றாக உடை உடுத்தி பார்வைக்கும் நன்றாக தோற்றமளிப்பான். அதேபோல தன் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவான். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதன் சமூகத்தின் மீது அக்கறை கொள்ள ஆரம்பிப்பான்.
பகவத் கீதையில் கிருஷ்ணர், ‘மனிதன் தன் உடலை பட்டினி போட்டு வதைப்பதோ மனதை காயப்படுத்தும் செயல்களையோ செய்யக்கூடாது’ என்கிறார். சுய நேசிப்பு என்பது தன்னை பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது. ''எதற்காக இந்த பூமிக்கு வந்திருக்கிறோம்? கடவுள் எதற்காக நம்மைப் படைத்தார் என்று அவன் மனம் கேட்கும் கேள்விகளுக்கு விடை காண முயல்வான். பிறருக்கு உபயோகமாகவும் வாழ வேண்டும் என்கிற படிப்பினையை அவனுக்கு கொடுக்கும். தானும் வாழ்வில் முன்னேறி, தனது சக மனிதனையும் கை தூக்கி விடவே தான் படைக்கப்பட்டதன் நோக்கம் என்று அவன் அறிந்து கொள்வான். இது அனைத்தும் சுய நேசிப்பின் மூலமாக மட்டுமே நிகழும். அனைவரும் தன்னைத்தானே சுய நேசிப்பு செய்ய வேண்டும்.