motivatiion article Image credit - pixabay
Motivation

பாராட்டுங்கள்! சீராட்டுங்கள்!

கல்கி டெஸ்க்

-ம. வசந்தி

ற்றவர்களிடம் நமக்கு ஏற்படும் மதிப்பு அன்பு, காதல் போன்றவற்றை நம் மனதிலேயே போட்டு பூட்டி வைக்காமல் அவற்றை சரியான தருணத்தில் உரியவரிடம் வெளியிட வேண்டியது அவசியம்.அப்படி பரிமாறினால்தான் ஓர் அரிய உறவு உருவாகி தழைத்து ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும். அதற்கு நாம் நேசிப்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அது நேயத்தை வளர்க்கும். பாராட்ட வேண்டும். அது பகைமையை ஒழிக்கும். சீராட்ட வேண்டும் அது செம்மையான உறவை ஓங்கச் செய்யும். சாதனைகள் பலவும் சிறு துளிகளாக சிலரது சிந்தனையில் உருவானவைதான். வெளிப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் அவை சிந்தனையிலேயே மடிந்து மண்ணாகி போயிருக்கும் .

ஏதோ ஒரு வகையில் வெளிவந்ததால்தான் அவை செயல் வடிவம் அடைந்து பெரும் கண்டுபிடிப்புகளாக மாறியிருக்கின்றன. மனிதகுலம் பயன்பெறும் சாதனைகளாக வளர்ந்தன. எழுத்துக்களாக வெளிப்பட்டவை காவியங்களாக போற்றப்பட்டன. அன்பின் வெளிப்பாடே துன்பம் நீக்கும் சேவையாக மலர்ந்து மனித குலத்தை அரவணைக்கும். ஆதலால் யாரையும் பாராட்டப்பட வேண்டிய நேரத்தில் பாராட்டுங்கள்.

ஒரு நாள் ஆசிரியை வழக்கமான பாடம் நடத்துவதை விட ஒரு வினோதமான காரியம் செய்தார். மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்த வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களது பெயர்களை சொல்லி அந்த மாணவனைப் பற்றிய சிறந்த விஷயங்களை நினைவு கூறி ஒரு தாளில் எழுதுங்கள் எனக் கூறினார். எதிர்பாராத இந்த அறிவிப்பால் சற்று தயங்கிய மாணவர்கள் பிறகு சமாளித்து மற்ற மாணவர்களுடன் தனக்கு இருந்த நட்பு, அவர்களுடன் பேசி பழகி விளையாடிய அனுபவம், போன்றவற்றை நினைவு கூர்ந்து மற்றவர்களிடம் இருப்பதாக தான் நினைக்கும் நல்ல குணங்களை குறிப்பிட்டு அந்த தாள்களை ஆசிரியரிடம் அளித்தனர்.

வார விடுமுறையின்போது ஆசிரியை ஒவ்வொரு மாணவன் பெயரிலும் தயார் செய்யப்பட்ட தாள்களை மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அளித்தார். அதை படித்த மாணவர்கள் எங்களிடம் இவ்வளவு நற்குணங்கள் இருக்கின்றனவா! சாதாரணமானது என்று நாங்கள் நினைக்கும் விஷயங்கள் பலவற்றை மற்றவர்கள் இவ்வளவு உயர்வாக கருதுகிறார்களா! என் தோழர்கள் என் மீது இவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்களா! என்று ஆச்சரியப்பட்டு மிகவும் பெருமிதத்துடன் காணப்பட்டனர்.  பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அவர்களுக்கு படிப்பு முடிந்ததும் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பணிகளில் அமர்ந்தனர். ஒரு நாள் அந்த வகுப்பில் படித்த மாணவன் ராணுவத்தால் நடத்தப்பட்ட போர் ஒன்றில் கொல்லப்பட்டான். அவனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவன் வகுப்பு நண்பர்கள் பலரும், ஆசிரியையும் வந்திருந்தனர். அஞ்சலி செலுத்தி விட்டு நகர்ந்த ஆசிரியையை ராணுவ வீரன் ஒருவன் அணுகினான்.மேடம்!நான் இந்த  வீரனின் தோழன் .உங்களைப் பற்றி என்னிடம் பலமுறை இவன் பேசியிருக்கிறான்.எங்களுக்கு பெருமை தேடித்தந்த இவனது உடமைகளிலிருந்து கிடைத்த ஒரு பொருளை உங்களுக்கு காட்ட விரும்புகிறோம், என்று கூறி கைப்பை ஒன்றிலிருந்து கசங்கிய காகிதங்கள் சிலவற்றை வெளியே எடுத்தனர். பலமுறை படித்து மடித்து ஆங்காங்கே கிழிந்து ஒட்டப்பட்டிருந்த அவற்றைப் பார்த்ததும் பல ஆண்டுகளுக்கு முன் வகுப்பறையில் தோழர்கள் குறிப்பிட்டிருந்த அவனது நல்ல குணங்கள் பலவற்றை எடுத்து எழுதி அவனிடம் அளித்த காகிதங்கள் என்று ஆசிரியைக்கு விளங்கி விட்டது. கண்களில் நீர் திரையிட்டது.

அவன் வகுப்புத் தோழர்கள் பலரும் இப்போது அவர்களை சூழ்ந்து கொண்டனர்  தாங்களும் அந்த காகிதங்களை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அடிக்கடி அவற்றை எடுத்து படித்து ஆனந்தம் அடைவதாகவும் கூறினர். பாராட்டுக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பை வெளிப்படுத்தி நட்பை ஆழமாக்கி அதை என்றென்றும் நிலைத்து நிற்க செய்யும். இது போன்ற சிறு செயல்கள் பெரிய காரியங்களுக்கு வித்திடுகின்றன என்பதை அன்று ஆசிரியர்களும் மாணவர்களும் தெளிவாக உணர்ந்திருந்தனர். ஆகையால் பாராட்ட நேரம் காலம் பார்க்காமல் மனதில் நினைக்கும்போதே செம்மையான உறவு வளர பாராட்டுங்கள்! சீராட்டுங்கள்!

மகிழ்ச்சியான குடும்பத்திற்கு பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

A Day in History: The Great Balloon Race!

காசிக்கு நிகரான ஆலயம் தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

SCROLL FOR NEXT