motivation article Image credit - pixabay
Motivation

எல்லாவற்றிலும் உள்ள நல்லவற்றைப் பாருங்கள்!

ம.வசந்தி

வாழ்க்கை மகிழ்ச்சியாக நிலைக்க வேண்டுமெனில் எல்லா நாட்களும் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும். அதற்கு ஒரே வழி நாம் எதிர்கொள்ளும் எல்லாவற்றிலும் உள்ள நல்லவற்றை பார்க்க வேண்டும்.

தீயவற்றால் பொறாமையால் எதிர்மறை எண்ணங்களால் நம் கண்கள் கட்டப்படக்கூடாது. கட்டுப்படவும் கூடாது. வாழ்க்கையின் போராட்டங்களில் வெற்றிகள் மட்டுமே வருவதில்லை. வெற்றிகளுடன் தோல்விகளையும் நிறையவே எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு முறை தோற்கும்போதும், அதில் உள்ள நல்லவற்றைக் கண்டு, அவற்றை படிப்பினையாக மாற்ற முயன்றால் தோல்விகளும் வெற்றிக்கான பாதையாகவே மாறிவிடும். எந்த கண்ணோட்டத்தில் வாழ்வின் சவால்களை எதிர்கொள்கிறோம், என்பதே நாம் மகிழ்வுடன் இருக்கின்றோமா, இல்லையா என்பதை தீர்மானித்துவிடும்.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள நல்லதை பார்ப்பதோ தீயதைப் பார்ப்பதோ, நம் கையிலே உள்ளது. தகுந்த தேர்வு செய்யும் மனம் எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பார்க்கும். சமூகத்தை நம்பும் போதும், மற்றவர்களை நம்பும் போதும் நம்மை நாம் நம்பும் போதும் நல்லவைகளே நம் கண்ணில் தென்படும். மற்றவர்களிடம் உள்ள தீயவற்றை மறந்து நல்லவற்றை உயர்வாக கருதி பார்க்கும்போது அவர்களும் அந்த நற்குணங்களாலேயே பரஸ்பரமாக உரையாடுவர். செயல்களில் ஈடுபடுவர். மற்றவர்களை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் பழக்கம் பரஸ்பர நம்பிக்கையை குலைக்கும். உறவுகள் சீர்கெடும். எதிர்மறை தாக்கத்தையே உறவுகளில் ஏற்படுத்தும்.

சமூகத்தில் எல்லாரும் எல்லா சூழ்நிலையிலும் நல்லவற்றையே செய்வதில்லை. குற்றங்கள் குறைகள், தவறுகள் மனிதர்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு குற்றவாளியை மாற்றவும், திருத்தி அமைக்கவும் சமூகத்திற்கு உகந்த மனிதனாக மாற்றவும் குணத்தில் உள்ள நல்லவற்றைக் கண்டு அவற்றை மேம்படுத்த முயற்சி செய்கின்றனர் குற்றவியல் அறிஞர்கள். உலகில் ஒரு தீயதிற்கு ஓர் ஆயிரம் நல்லவை உள்ளது. ஏன் தீயவற்றை குறித்து சிந்தித்து அந்த எண்ணங்களால் நல்லனவற்றைக்காண மறந்து விடுகிறோம்? நல்லவற்றை காணும் பழக்கம் நல்லவை தொடர்ந்து உங்கள் வாழ்விலும் நடைபெற காரணமாக செயல்படும்.

ஒரு செயலை நல்லது என்றோ, நல்லது அல்ல என்றோ எண்ணுவது மனதின் எண்ணங்களால்தான். ஒரே செயல் கூட ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் நல்லதாகத் தெரியும். இன்னொரு கோணத்தில் அந்த செயல் நல்லது அல்லதாகக் கூடத் தோன்றலாம். பார்க்கும் நபரை பொருத்தும் பார்க்கும் கோணத்தை பொருத்தும் பார்க்கும் நோக்கத்தை பொறுத்தும் நல்லதும் அல்லதும் வேறுபடுகிறது. இன்று நல்லது அல்ல என்று கருதுவது பிரிதொரு தருணத்தில் நல்லதாக தோன்றும் வாய்ப்புகள் உள்ளது. எனவே மொத்த சூழலையும் கணக்கில் எடுத்து எது நிகழ்ந்தாலும் அவற்றில் உள்ள நல்லதையே பார்க்க எண்ணங்களை தேர்வு செய்யுங்கள்.

வானம் அடர்ந்த மழை மேகங்களால் சூழப்பட்டுள்ளபோது சூரிய வெளிச்சத்தை காண்பது கடினம்தான். ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அந்தச் சூழலிலும் உள்ள ஒளியை காணமுடியும். தாக்கங்களால் பாதிக்கப் பட்டவர்கள் கூட தங்கள் வாழ்க்கையின் அழகு குறித்தும், தங்களுக்கு கிடைத்த நல்லன குறித்தும் எண்ணி மகிழ்ச்சியால் இருப்பதை நாம் காணத்தான் செய்கிறோம். மனம் எல்லாவற்றிலும் உள்ள நல்லவற்றை பார்க்க பழகும் போது மனதின் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் நேர்மறையாக தோன்றும் கடின சூழலிலும் மனம் இதமாக நிலைக்கும் மன அமைதி தொடரும். 

எனவே ஒவ்வொரு செயலிலும் உள்ள நல்லனவற்றையே பார்த்து அதை மட்டுமே மனதில் நிறுத்தி வேலையில் ஈடுபட முயற்சி செய்யவேண்டும்.

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சிறுகதை – பிறவிக்குணம்!

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT