இந்த உலகத்தில் நல்லது செய்தாலும் சரி, கெட்டது செய்தாலும் சரி அதை குறைக் கூறுவதற்காகவே சிலபேர் இருக்கத்தான் செய்வார்கள். அதை புரிந்துக்கொண்டால், அடுத்தவர்கள் பேசுவதை பெரிதும் நினைத்து வருத்தப்பட மாட்டோம். நம்முடைய குறிக்கோளை நோக்கி முழுமையான கவனத்தை செலுத்தலாம். இதை உணர்ந்து கொள்ள ஒரு அருமையான கதையைப் பார்ப்போம்.
ஒரு கிராமத்தில் இருக்கும் அப்பா, மகன் குடும்ப கஷ்டத்திற்காக தான் வளர்த்த கழுதையை டவுனில் விற்கலாம் என்று அழைத்து செல்கிறார்கள். அப்படி போகும் வழியில் சிலர், ‘கழுதை சும்மா போறதுக்கு யாராவது மேலே உட்கார்ந்து செல்லலாமே! கழுதையை கூட இவர்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை’ என்று சொல்லி சிரிக்கிறார்கள்.
இதைக் கேட்டதும் அப்பா தன் பையனை கழுதை மீது அமர வைத்து கூட்டிச் செல்கிறார். சிறிது தூரம் சென்றதும் ஒரு பெண்மணி, ‘இந்த வயதில் கூட நடக்க முடியாதா? பாவம்! வயசான உன் அப்பா நடந்து வருகிறார். ஆனால், நீ சொகுசாக கழுதை மீது அமர்ந்து வருகிறாய்!' என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
இதைக் கேட்டுவிட்டு இப்போது அப்பா கழுதை மீது ஏறி அமர்ந்துக் கொள்கிறார். சிறிது தூரம் பயணித்து சென்றதும் ஒரு வயதானவர் வருகிறார், ‘இவ்வளவு வயசாகுது ஒரு சின்ன பையனை நடக்க வைத்துவிட்டு நீ சொகுசாக கழுதை மேலே அமர்ந்து வருகிறாயே? எப்படி உனக்கு மனசு வருது’ என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
இப்போது இருவருமே கழுதை மீது ஏறி அமர்ந்து செல்கிறார்கள். இதை பார்த்த ஒரு கூட்டம், ‘பாவம் அந்த வாயில்ல ஜீவனை எப்படியெல்லாம் கொடுமை படுதுகிறார்கள் பாருங்கள்’ என்று கூறிவிட்டு செல்கிறார்கள்.
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், நாம என்ன செஞ்சாலுமே அதைக் குறை சொல்ல ஆயிரம் பேர் வருவாங்க. அப்படி வருகிற எல்லோரிடமும் விளக்கம் சொல்லவும் முடியாது, அவர்களை திருப்திப்படுத்திக் கொண்டிருக்கவும் முடியாது. நாம் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு இதுபோல குறை சொல்பவர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். முயற்சித்துப் பாருங்கள்.