‘நாவடக்கம் வேண்டும்’ என்று சொல்வதுண்டு. அதற்காக எல்லா இடங்களிலுமே வாயை மூடிக்கொண்டிருக்க முடியாது. சில இடங்களில் நம் பேச்சு திறமையை பயன்படுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். அதில் தவறு ஏதும் இல்லை. அதை பற்றித்தான் விரிவாக இந்த பதிவில் காண உள்ளோம்.
ஒருவர் பணம் எடுப்பதற்காக பேங்கிற்கு செல்கிறார். அங்கே செல்லானை நிரப்பி கேஷியரிடம் கொடுத்து பணத்தை வாங்கி விடுகிறார். ஆனால் பணத்தை எண்ணிப் பார்த்தபோது ஒரு நோட்டு கம்மியாக இருப்பது போலத் தோன்றுகிறது.
இப்போது அந்த நபர் கேஷியரிடம், எனக்கு இன்னொரு முறை மிஷினில் பணத்தை போட்டு எண்ணி தரமுடியுமா? என்று கேட்கிறார். இந்த நபர் பணத்தை எண்ணியதை ஏற்கனவே கவனித்திருந்த கேஷியர் சற்று திமிராக, என்ன பணம் கம்மியாக இருக்கிறதா? நன்றாக எண்ணிப் பாருங்கள். எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்கிறார். நான் ரொம்ப பிசியா இருக்கேன். இதையெல்லாம் பார்க்க எனக்கு நேரமில்லை என்று அலட்சியமாக சொல்கிறார்.
இப்போது இந்த நபர், ‘எனக்கு என்னமோ ஒரு நோட்டு அதிகமாக இருப்பதுபோல தோன்றுகிறது?’ என்று சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் அந்த கேஷியர் பணத்தை அந்த நபரிடமிருந்து வாங்கி கையில் நான்கு தடவை, மிஷினில் நான்கு தடவை என்று எண்ணிக் கொடுத்தாராம்.
இப்போது இந்த கதையிருந்து என்ன புரிகிறது. இந்த உலகம் எப்போதும் நமக்கு ஏற்றவாறு செயல்படாது. நாம் தான் அதை செயல்பட வைக்க வேண்டும். அதற்கு கண்டிப்பாக நேரத்திற்கு ஏற்றவாறு பேசும் சாமர்த்தியம் இருக்க வேண்டியது அவசியம்.
பேசவேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் தவறு, அதேபோல பேசக்கூடாத இடத்தில் பேசுவதும் தவறு. ஆனால், எங்கே எப்போது பேச வேண்டுமோ அங்கே அப்போது சரியாக பேசி நம் காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அறிவுக்கூர்மையுடன், பேச்சுத்திறமையும் சேர்ந்தால், வாழ்வில் எப்பேற்பட்ட இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்க்கொண்டு வெளிவர முடியும். நீங்களும் இதை உங்கள் வாழ்க்கையில் முயற்சித்துப் பாருங்கள் நிச்சயமாக வெற்றியடையலாம்.