நம் வாழ்க்கையில் நம்முடன் நெருக்கமாக இருப்பவர்களிடம் இருந்து வரும் எதிர்மறையான பேச்சுகளை கேட்கும்போது, அது நம் மனதில் இருக்கும் நம்பிக்கையை உடைத்துவிடும். அது நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அத்தகைய எதிர்மறை பேச்சுகளை நாம் எவ்வாறு கையாள்வது என்பதைப் பற்றி ஒரு குட்டி கதையின் மூலம் காண்போம்.
ஒரு ஊரில் முகுந்தன் என்ற இளைஞன் இருந்தான். அவன் வழக்கமாக விடுமுறைக்கு அவனுடைய பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம். அவனுடைய பாட்டி வீட்டிற்கு எதிரே ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது. அம்மா, அப்பா, மகன், மகள் என்று அழகான சிறிய குடும்பம். இருப்பினும், அந்த குடும்பத்தில் இருக்கும் தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களோடு சண்டைப் போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அச்சமயம் அந்த தந்தை அவருடைய மகனிடம், ‘நீ உருப்படவே மாட்டாய். நீயெல்லாம் வாழ்க்கையில் எங்கே ஜெயிக்க போகிறாய்?’ என்பது போன்ற எதிர்மறையான வார்த்தைகளையே பயன்படுத்துவார். இதை முகுந்தன் அடிக்கடி கேட்டிருக்கிறான். இது அவனுக்கு மனவருத்தத்தை தரும்.
முகுந்தன் சில வருடங்கள் தன் வேலையின் காரணமாக பாட்டி வீட்டிற்கு வருவதில்லை. நல்ல வேலை கிடைத்து, நல்ல நிலமைக்கு வந்த பிறகு ஒருநாள் தன் பாட்டி வீட்டிற்கு போகவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
வருடங்கள் ஓடியிருந்ததால், பாட்டி வீட்டிற்கு செல்லும் வழியில் தெருவிளக்குகள் போடப்பட்டிருந்தது, அங்கிருந்த ஓட்டு வீடுகள் மாடி வீடுகளாக மாறியிருந்தது. இதில் என்ன ஆர்ச்சயம் என்றால், பாட்டி வீட்டின் எதிரிலே இருக்கும் அந்த குடிகார தந்தையின் வீடும் மாடி வீடாக மாறியிருந்தது.
இதை கவனித்த முகுந்தன் தன் பாட்டியிடம், ‘எதிர்வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விற்று விட்டார்களா? எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டப்பட்டிருக்கிறது?’ என்று கேட்டான்.
அதற்கு அவனுடைய பாட்டி, ‘அந்த வீட்டில் உள்ள பையன் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று அவனே இந்த வீட்டை கட்டினான்’ என்றுக் கூறினார்.
இதைக்கேட்ட முகுந்தனுக்கு சந்தோஷம்தான் என்றாலும், ‘தினமும் வாழ்க்கையில் எதிர்மறை வார்த்தைகளையே கேட்டுக்கொண்டிருந்த நபரால் எப்படி வெற்றிபெற முடிந்தது?’ என்ற ஐயமும் எழுந்தது. அதை அந்த பையனிடமே கேட்டான். அதற்கு அவன் கூறியது என்ன தெரியுமா?
ஒவ்வொருமுறை என்னுடைய தந்தை நான் உருப்பட மாட்டேன் என்று சொல்லும் போதெல்லாம், ‘நான் நன்றாக வந்துவிடுவேன். என் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என்று எனக்கு நானே நேர்மறையான எண்ணங்களை என் மனதில் விதைத்துக் கொண்டேன். அந்த சிந்தனைதான் என்னை இந்த அளவிற்கு உயர்த்திக் கொண்டு வந்துள்ளது’ என்று கூறினான்.
ஒருவர் நமக்கு வரம் கொடுத்தாலோ அல்லது சாபம் கொடுத்தாலோ அது அப்படியே பலிப்பதற்கு அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லை. எனினும், நம்மிடம் மற்றவர்கள் எதிர்மறையாக பேசும்போது, ‘நான் நன்றாகத்தான் இருப்பேன். நான் செய்யும் காரியம் நல்லதாகவே நடக்கும்’ என்று நினைப்பதுதான் நம்மிடம் எதிர்மறையாக பேசுபவர்களை கையாளும் வழியாகும். இதை புரிந்துக் கொண்டு செயல்பட்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.