Bob Dylan... 
Motivation

வெற்றிகரமானவர் யார் தெரியுமா?

சேலம் சுபா

"What's money? A man is a success if he gets up in the morning and goes to bed at night and in between does what he wants to do.
பணம் என்பதென்ன? காலையில் படுக்கையை விட்டு எழுந்து இரவில் உறங்கச் செல்லும் வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவன் விரும்புவதைச் செய்ய முடிந்தால் அவன் வெற்றிகரமானவன்." Bob Dylan.


1941 ம் வருடம் பிறந்த பாப் டிலான் ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர், ஓவியர் மற்றும் கவிஞர் ஆவார்.  நீண்டகாலம் வெகுஜன இசையில் ஒரு பிரபலமாக திகழ்ந்து வரும் இவரது "ப்ளோயிங் இன் தி விண்ட்” மற்றும் “தி டைம்ஸ் தே ஆர் எ- சேஞ்சிங்” போன்ற ஏராளமான பாடல்கள் மனித உரிமைகள் மற்றும் போர் எதிர்ப்பு இயக்கங்களின் தேசிய கீதங்களாக ஆனது சிறப்பு. அவரது ஆரம்ப பாடல் வரிகளில் இருந்த பல்வேறு வகையான அரசியல், சமூக மற்றும் தத்துவ தாக்கங்களும் இலக்கிய தாக்கங்களும் அப்போது பிரபலமாக இருந்த பாப் இசை மரபுகளை அசைத்தது குறிப்பிடத்தக்கது.

நீண்டகால வெற்றி மனிதராக பல மனங்களை இசையால் வெற்றிகண்ட பாப் டிலான் சொன்ன கருத்தைப் பார்ப்போம். வெற்றிக்கு அடையாளமாக வீடு, கல்வி, பதவி, அந்தஸ்து போன்றவற்றைக் குறிப்பிடுவதுண்டு.

ஆசைப்பட்டு, லோன் போட்டு, கஷ்டப்பட்டு வீடு கட்டியவர்களைப் பாருங்கள். லோனை அடைக்க லோலோ என்று அலைவதிலேயே அவர்கள் பாதி வாழ்நாள் போய்விடும். அதற்குள் வீடும் பொலிவிழந்து பழைய லுக் தரும்.

வெற்றிக்கு கல்வி அவசியம் தேவைதான். ஆனால் அது மட்டும் போதுமா? அதிகம் படித்தவர்களைப் பார்த்தால் எந்நேரமும் அடுத்து அடுத்து என்ன கற்கலாம் எனும் சிந்தனையில் பிற வாழ்க்கை சந்தோஷங்களை அனுபவிக்கத் தவறுவார்கள்.

பதவியும் அப்படியே.பொறுப்புகளும் சவால்களும் மிகுந்த பதவியில் இருப்பவர்களிடம் பேசிப் பாருங்கள்.
"என்ன பெரிய பதவி. ஆசையா விரும்பிய இடத்துக்கு போக முடியுதா? நிதானமாக சாப்பிட முடியுதா? அட்லீஸ்ட் கண்ணை மூடி நிம்மதியா தூங்கவாவது முடியுதா?" என்று புலம்புவார்கள்.

இவை அனைத்தும் தரும் அந்தஸ்தை மற்றவர்களிடம் எந்நேரமும் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவர்களே அதிகம் இங்கு.

"என்னிடம் இவை அனைத்தும் இல்லை ஆனாலும் நான் வீட்டை விட்டு வெளியே சென்றால் நான் விரும்பிய அனைத்தும் செய்யமுடியும். மீண்டும் மகிழ்வுடன் வீடு திரும்பி படுத்தால் உடனே தூங்கவும் முடியும்" என்று சொல்பவரா நீங்கள்? கை கொடுங்கள். நீங்கள்தான் உண்மையிலேயே வெற்றிகரமானவர்.

இரண்டு முதியவர்கள் வாக்கிங் நண்பர்களாக இருந்தனர். ஒருவர் செல்வந்தர். மற்றவர் நடுத்தர வசதிக்காரர். வீட்டை விட்டு வெளியே வரும் செல்வந்தருக்கு பாதுகாப்பாக நாயைக் கையை பிடித்தபடி எந்நேரமும் செல்வந்தர் மேலேயே கண்களை வைத்து ஒரு பாடிகார்ட். கூடவே அடிக்கொரு போன்கால். செல்வந்தர் சிறைக்கைதி போல வாக்கிங் என்ற பெயரில் சுதந்திரத்தை sorry காற்று வாங்கிச் செல்வார்.

மற்றவரோ எந்த சுமையும் இல்லாமல் கை வீசிக்கொண்டு வாக்கிங் வந்து நினைத்தபோது கடைப் பண்டங்களை ஒரு கை பார்ப்பார். செல்வந்தருக்கு இவரைப் பார்த்தாலே சமயங்களில் பொறாமையாக இருக்கும். என்ன செய்ய?  எப்போது வேண்டுமானாலும் செல்லாத பணத்தை அதிகம் சேமித்து விட்டாரே?

இப்போது சொல்லுங்கள். இங்கு உண்மையான செல்வந்தர் அல்லது வெற்றிகரமானவர் அந்த நடுத்தர வசதிக்காரர்தானே? பாப் டிலான் கூறுவதுபோல் காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை  தாங்கள் நினைக்கும் ( நல்ல) செயல்களை எவ்வித நெருக்கடி மற்றும் நிர்பந்தமின்றி நிறைவேற்றும் சுதந்திரம் இருக்கிறதோ அவரே உண்மையான வெற்றியாளர்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT