வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எல்லாம் நன்மைக்கே என்ற நேர்மறையான கண்ணோட்டத்தில் அணுகும்பொழுது நேர்மறையான கண்ணோட்டத்தில் வாழ்க்கையை வாழ முடிகிறது.
நிகழ்ச்சிகளில் எதிர்மறையோ, நேர்மறையோ கிடையாது. நமது கண்ணோட்டத்தில்தான் அந்த நிகழ்ச்சி நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ அமைகிறது.
ஒரு கதையைப் பார்ப்போம்.
ஒரு அரசரிடம் ஒரு அமைச்சர் இருந்தார். அவர் எப்பொழுதும் நடக்கும் விஷயங்களை எல்லாம் நன்மைக்கே என்று கூறி வருவார். அதைக் கேட்டு அரசரும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.
ஒருமுறை அரசர் தனக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களை கத்தியை கொண்டு நறுக்கிக் கொண்டிருந்தபோது தெரியாமல் அவரது சுண்டு விரலில் ஒரு பாகம் வெட்டுப்பட்டுவிட்டது. அரசர் துடித்து போனார். உடனே அரண்மனை வைத்தியர் வந்து சிகிச்சை கொடுத்த பின்பு இழந்த சுண்டு விரலின் பாகத்தை எண்ணி அரசர் வருந்தி கொண்டிருந்தார். அப்பொழுது அரசனைக் காண வந்த அமைச்சர் எல்லாம் நன்மைக்கே என்று கூறினார். அதைக் கேட்டு அரசருக்கு கோபம் வந்துவிட்டது. அமைச்சரை கைது செய்ய காவலாளிகளுக்கு உத்தரவிட்டார். காவலாளிகள் அமைச்சரைக் கைது செய்த போது அமைச்சர் எல்லாம் நன்மைக்கே என்று கூறினார். அரசன் இதைக் கண்டு திகைத்தார்.
அரசன் வழக்கமாக செல்வதுபோல் வேட்டையாடக் கிளம்பினார். எப்பொழுதும் வேட்டையாட உடன் வரும் அமைச்சர் அன்று கைதானபடியால் வர முடியவில்லை. அரசர் தனியாக தனது பரிவாரங்களுடன் கிளம்பினார். அரசர் காட்டில் வழி தவறி பரிவாரங்களை விட்டு பிரிந்து விட்டார். அப்போது அங்கு மனிதர்களை உண்ணும் காபாலிகர்கள் அவரைப் பிடித்துக் கொண்டு சென்றனர். அவரை காளியிடம் படைத்துவிட்டு பின்னர் உண்பதற்காக அவரை ஒரு பெரிய அண்டாவில் கைகளைக் கட்டி நிறுத்தி தண்ணீர் ஊற்றினர். அரசர் தனது இறுதி காலம் நெருங்குவது எண்ணி வருந்தினார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அரசர் கையில் இருந்த சுண்டு விரலின் காயம் கண்டு, காயத்தின் கட்டுகளை விலக்கியபோது அங்கு சுண்டுவிரல் பின்னப்பட்டிருந்தது. அதைக் கண்ட கபாலிகர்களின் தலைவன் பின்னப்பட்ட மனிதனை காளிக்கு படைக்கக்கூடாது என்று அரசரை விடுதலை செய்தான். அரசர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று குதிரை ஏறி அரண்மனை வந்தார்.
அமைச்சர் எல்லாம் நன்மைக்கே என்று கூறியது சரிதான். கையில் சுண்டு விரல் பின்னப்படாவிட்டால் தான் உயிரிழந்திருப்போம் என்று அரசர் புரிந்து கொண்டார். உடனே அமைச்சரை விடுதலை செய்தார்.
அப்போது அமைச்சரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். அமைச்சர் கைது செய்யப்பட்ட போதும் எல்லாம் நன்மைக்கே என்று ஏன் கூறினார் என்பதைக் குறித்து அரசர் அமைச்சரிடம் வினவினார். தான் கைது செய்யப்படாவிட்டால் அரசருடன் வேட்டைக்கு வந்திருந்திருப்பேன் என்றும் கபாலிகர்களுக்கு உணவாகி இருப்பேன் என்றும் அமைச்சர் கூறி, கைது செய்யப்பட்டதால்தான் பிழைத்ததைக் கூறி எல்லாம் நன்மைக்கே என்று அமைச்சர் கூறினார்.
அரசரும் எல்லாம் நன்மைக்கே என்று புரிந்து கொண்டார்.
எனவே, வாழ்க்கையில் நடக்கும் செயல்களை எல்லாம் நன்மைக்கே என்ற நேர்மறையுடன் அணுகி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.
இறைவன் ஒரு கதவை அடைத்து மற்றொரு கதவை திறப்பதில்லை.
மற்றொரு கதவை திறந்த பின்புதான் ஒரு கதவை அடைக்கிறார்
- வேதாத்திரி மகரிஷி
எனவே, நமது வாழ்க்கையில் ஒரு கதவு அடைக்கப்படும் பொழுது மற்றொரு கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து வாழ்க்கையை நேர்மறையாக அணுகுவோம்.