Motivation Image Image credit - padmagrahadurai.com
Motivation

“வீழ்ச்சி அடைவது அவமானம் அல்ல; மீண்டு எழுவது வரலாறு!” - யார், யாரிடம் சொன்னது?

கல்கி டெஸ்க்

-தா சரவணா

மகாபாரதத்தில், கர்ணன், கிருஷ்ணரைப் பார்த்து, கேட்டான்:

“என் தாயார் நான் பிறந்தவுடன்  என்னை ஆற்றில் விட்டுவிட்டார். அதற்குக் காரணம், நான் முறைதவறிப் பிறந்தக் குழந்தை என்றார்கள். இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி, துரோணாச்சாரியார் எனக்குக் கல்வியைக் கற்றுத் தரவில்லை இது என் தவறா?,

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால், சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்கும்படி, எனக்கு சாபம் கொடுத்தார். இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது. அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னைச் சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டேன். குந்திகூட இறுதியாக, தன் மற்ற மகன்களைக் காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.

இப்படிச் சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்டபோது, துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது. ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும்?”

கர்ணனுக்கு, கிருஷ்ணர் உபதேசம்:

"கர்ணா, நீயாவது பரவாயில்லை. ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன். என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். நீ சிறுவயதிலிருந்து, வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலைக் கேள்விப் பட்டிருப்பாய். ஆனால் . நானோ மாடு, கொட்டில், சாணம், வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன். நான் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன.

நல்ல கல்வி இல்லை, போர்ப் பயிற்சி இல்லை. ஆனால், எல்லோரும் நான்தான், நடக்கும் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது,  நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில்தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன். நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டீர்கள். எனக்கு அந்தக் கொடுப்பினையும் இல்லை. ஜராசந்தனிடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்தும், கடலிலிருந்து தூரத்திலும் என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை.

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள், நாடு, சேனை, கௌரவம் கிடைக்கும். ஆனால், பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்தப் போருக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும். கர்ணா ஒன்றை நினைவில் கொள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன. வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.

ஆனால், மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானதல்ல. அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை. எப்போதும் நினைவில் கொள். வாழ்க்கை என்பது ஒரு பாதை. சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம். அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல. நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே. அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை. இங்கு எல்லாம் சரியாக அமைந்த வாழ்க்கை யாருக்கும் இல்லை. நல்லதே நடக்கும். கவலைக் கொள்ளாதே!”

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT