வாழ்க்கையில் வெற்றி பெற எல்லோருமே விரும்புகின்றோம். அதற்கு என்ன வழி? சாதித்துக் காட்ட வேண்டும். சாதிக்க முடியுமா? நிச்சயம் முடியும். நினைத்ததை நடத்திக் காட்டும் வல்லமை உழைப்புக்கு உண்டு.
நாம் வியர்வை சிந்தி உழைக்க வேண்டும். அதற்காகத்தான் இயற்கை நமக்குத் தேவையானவற்றை மறைத்தே வைத்து இருக்கிறது. உண்பதற்கான உணவை மண்ணுக்குள் மறைத்து வைத்து இருக்கிறது. உடுப்பதற்கு ஆடையாக கொடுக்காமல் நெய்து தயாரிக்கப் பஞ்சு கொடுத்து இருக்கிறது. வசிப்பதற்கு அப்படியே வீடாகப் படைக்காமல் கட்டிக் கொள்ள கல்லையும், மண்ணையும் படைத்து இருக்கிறது. பிற செல்வங்களை சேமிக்கலாம். ஆனால் உழைப்புச் செல்வத்தை சேமிக்க முடியாது. இன்றைய வருமானத்தை நாளை செலவழித்துக் கொள்ளலாம்.
ஆனால், இன்றைக்குப் பயன்படுத்த வேண்டிய உழைப்பை நாளைக்குப் பயன்படுத்த முடியாது. அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது. சேமிக்க முடியாத உழைப்பை சிறந்த வழியில் மூலதனமாக்க வேண்டும். உழைப்பில் ஒரு சுகம் உண்டு. ஈடுபாட்டோடு உழைத்தால் அதில் சுகம் இருக்கும்.
கடனே என்று உழைத்தால் சுமை மட்டும்தான் தெரியும். எழுத்தாளர் கல்கியிடம் நண்பர் ஒருவர், ‘உங்கள் பெயருக்கு ஜாதகம் பார்ப்பது தானே…?’ என்று சொன்னாராம்.
அதற்கு கல்கி, ‘தம்பி, ஜாதகம் பார்க்கிற பைத்தியம் எனக்குக் கட்டோடு பிடிக்காது' காலில் நகம் முளைத்த காலத்தில் இருந்து எத்தனையோ இடத்தில் அடிபட்டு மிதிபட்டு கஷ்டப்பட்டு நான் ஒவ்வொரு படியாக முன்னேறியது என் சொந்த உழைப்பினால்தான்.
ஆனால் ஜோசியரிடம் போய் கேட்டால், ஏதோ செவ்வாய், சுக்கிரன், சூரியன்தான் காரணம் என்று சொல்வார். இதை எப்படி சகித்துக் கொள்வது’ என்றாராம்.
ஆசையோடு குழந்தையை அள்ளி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்துப் பாருங்கள். அதில் சுமை தெரியாது. ஆனால் விருப்பம் இல்லாமல் வேண்டா வெறுப்பாக ஒரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடந்து பாருங்கள். சுமை தெரியும். சுகமும், சுமையும் உழைப்பின் கடினத்தில் இல்லை. ஈடுபாட்டில் இருக்கிறது.
உழைப்புதான் உண்மையான அதிர்ஷ்டம்.காலையில் கண் விழித்ததும் ராசிபலன் பார்த்து அதன்படி செயல்படக்கூடாது.
வெற்றி பெற முடியாமல் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் வெற்றி பெறுவதற்கு நிச்சயமாக ஒரு காரணம் உண்டு. அதுதான் உழைப்பு.