நமக்கு பிடித்தவர்கள், உறவினர்கள், சொந்தபந்தம் ஆகியோருக்காக வாழ்வில் சில விஷயங்களை தியாகம் செய்தும், விட்டுக் கொடுத்தும் போயிருப்போம். அவ்வாறு நாம் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பது எவ்வளவு தூரம் இருக்க வேண்டும். இதைப் பற்றி புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையை பார்ப்போம்.
ஒரு ஊரில் ஒரு குருகுலம் இருந்தது. அந்த குருகுலத்தில் இருந்த ஆசிரியர் மாணவர்களை உட்கார வைத்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தலைப்பில் பாடம் நடக்கும். அன்றைக்கான தலைப்பு விட்டுக் கொடுத்துப் போவதைப் பற்றியதாகும்.
இதைக் கேட்டதும் மாணவர்களுக்கு சலிப்பாகிவிட்டது. ‘இதில் என்ன சுவாரஸ்யம் இருக்க போகிறது?’ என்று நினைத்துக்கொண்டனர். ‘நன்றாக புயல் அடித்தது. அதில் வளைந்துக் கொடுத்த நாணல் தப்பிவிட்டது. வளையாத மரம் உடைந்துவிட்டது’ போன்ற கதையைதான் சொல்லப் போகிறார் என்று நினைத்துக்கொண்டனர்.
அவர்கள் நினைத்ததுபோலவே ஆசிரியரும் நாணலைப் பற்றி பேச ஆரம்பித்தார். ‘இந்த நாணல் இருக்கிறதே காற்று எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்தப்பக்கம் அசைந்துக் கொடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. அதனால்தான் அதை விட்டுக்கொடுத்து போவதற்கு எடுத்துக்காட்டாக சொல்கிறார்கள்’ என்று சொல்லிப் பாடத்தை தொடங்கினார்.
நீங்கள் மரத்திலிருந்து விழும் காய்ந்த இலைகளை பார்த்திருக்கிறீர்களா? அதுவும் காற்றுக்கு அசைந்து செல்லக்கூடியதுதான். இருப்பினும், வளைந்து நெளிந்து செல்வதற்கு நாணலையே உதாரணமாக சொல்கிறார்கள். அது ஏனென்று தெரியுமா? என்று மாணவர்களைப் பார்த்து கேள்வியை கேட்டார். அதற்கு பதில் தெரியாமல் மாணவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
இதைப் பார்த்த குரு கூறுகிறார், ‘நாணல் எவ்வளவுதான் காற்று அடித்தாலும், எவ்வளவுதான் வளைந்துக் கொடுத்தாலும் தான் நிற்கும் இடத்தை தக்க வைத்துக்கொள்கிறது. இன்னும் சொல்லப்போனால் தான் நிற்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தான் வளைந்தே கொடுக்கும்.
ஆனால், இலைகள் அவ்வாறு செய்வதில்லை. காற்றடிக்கும் திசையிலே செல்லுமே தவிர அதற்கென்ற நிலையான இடமென்று எதுவுமேயில்லை. அதனால்தான் வளைந்து நெளிந்து செல்வதற்கு எடுத்துக்காட்டாய் இலைகளை சொல்லாமல் நாணலை சொல்கிறார்கள் என்று கூறினார்.
இந்த கதையில் வந்த நாணலைப்போல, உங்கள் வாழ்க்கையை, உங்கள் முன்னேற்றத்தை, உங்கள் உறவுகளை தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே விட்டுக்கொடுத்து போங்கள். அதுவே தலைக்கு மீறிப் போய் உங்கள் நிம்மதியை பாதிக்கிறது என்றால் அந்த இடத்தில் சுதாரித்துக் கொள்வது நல்லது. இதைப் புரிந்துக் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.