அந்த தத்துவஞானியிடம் கூடியிருந்தவர்களில் ஒரு இளைஞர் கேட்ட கேள்வி இது "என்னிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுக்கிறது வெற்றிபெற முடியாமல் தவிக்கிறேன் இதற்கு என்ன காரணம்? இதற்கான தீர்வை நீங்கள்தான் இதை கூற வேண்டும்."
"விட்டு விலகு முன் முயற்சி செய்யுங்கள். பேசுவதற்கு முன் காது கொடுத்துக் கேளுங்கள். எதிர் வினையாற்று முன் சிந்தியுங்கள். விமர்சிக்குமுன், காத்திருங்கள். முன்னேறுமுன், மன்னித்து மறந்து விடுங்கள்" இதுதான் அவர் சொன்ன பதில்.
மேலும் அவர் "உங்களுக்கெல்லாம் புரிவதுபோல் சின்ன கதை ஒன்று சொல்கிறேன். ஒரு வீட்டில் இரண்டு எலிகளும் ஒரு பூனையும் மிகவும் நட்பாக இருந்தன. ஒருமுறை வீட்டின் முதலாளி வைத்த மர கூண்டுக்குள் பூனை மாட்டியது. அந்த வழியாக வந்த எலிகளை கூப்பிட்டு பூனை தன்னை காப்பாற்றும்படி சொன்னது. அந்த இரண்டு எலிகளில் ஒன்று வயதில் மூத்தது. மற்றதோ சிறியது. வயதில் மூத்த எலியும் சரி மற்றொரு எலியுடன் சென்று அதை அறுத்தன.
நேரமாக ஆக ஆக பூனையால் இரூப்புக் கொள்ள முடியவில்லை. என்ன எலி நண்பர்களே. ஏன் இவ்வளவு நேரம் செய்கிறீர்கள்? என்று கேட்க "பொறு நண்பா நிச்சயம் நாங்கள் உன்னை விடுதலை செய்து விடுவோம்" என்று சொல்லி அந்த பெரிய எலி சிறிய எலியிடம் கண் காட்டியபடி மெதுவாக அறுத்தது. அப்போது அந்த வழியே அந்த வீட்டின் முதலாளி வரும் சப்தம் கேட்டது. உடனே பெரிய எலி கிடுகிடுவென்று தனது பற்களால் அந்த கூண்டின் கைப்பிடியால் அகற்றி பூனையை விடுவித்தது.
அந்த இரண்டு எலிகளும் வேகமாக ஓடிப்போய் பொந்துக்குள் அடைந்து கொண்டது. பூனையும் தப்பித்தது. இப்போது அந்த சிறிய எலி பெரிய எலியை பார்த்து "நண்பரே எனக்கு ஒரு கேள்வி? நம்மால் அந்த மரத் தாழ்ப்பாளை மிக எளிதில் அறுத்திருக்க முடியும். ஆனால் நீங்கள் ஏன் தாமதத்தீர்கள்?" என்று கேட்டது.
அந்த பெரிய எலி சொன்னது "அட சிறியவனே அந்தப் பூனை நெடு நேரமாக அதற்குள் மாட்டியிருந்ததால் அதற்கு ஏகப்பட்ட பசி இருந்திருக்கும். இந்த நேரம் பார்த்து நாம் அங்கே சென்றோம். என்னதான் நண்பர் என்றாலும் பூனையின் பசிக்கு விருந்துதானே. வேகமாக அறுத்து அதை விடுவித்து இருந்தால் இருந்த பசிக்கு இருவரையும் இந்நேரம் கொன்று இருக்கும் அதனால் நமது நட்புக்கும் களங்கம் வரக்கூடாது. எனவேதான் முதலாளி வரும் சமயம் வரை உன்னை கைக்காட்டி மெதுவாக அறுக்க சொன்னேன். இப்போது பூனையும் தப்பித்துவிட்டது நாமும் தப்பித்து விட்டோம்" என்றது.
இப்படித்தான் எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் முன் நன்றாக சிந்தித்து செயலாற்ற வேண்டும். இதையேதான் நான் மற்ற விஷயங்களுக்கும் சொல்லி இருக்கிறேன். இதை கடைபிடித்து பாருங்கள் நிச்சயம் வெற்றி உங்களுக்குத்தான்.
அவர் சொன்ன அந்த வார்த்தைகள் அங்கிருந்த இளைஞர்களின் சிந்தனையை தூண்டியது. அவர்கள் மனதில் தெளிவுடன் தங்கள் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கத் துவங்கினர்.