ஊக்கத்தைப் பற்றி வள்ளுவர் கூறும்போது;
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்' என்று குறிப்பிடுகிறார்.
நம்மிடம் இருக்கும் ஊக்கம் அதிகரிக்குமானால், நாம் எவ்வளவு பெரிய சவாலையும் எதிர்கொண்டு வெல்ல முடியும். நாம் எவ்வளவு பெரிய எதிரியையும் வீழ்த்த முடியும் என்பதுதான் பொருள்.
யானை உருவத்தினால் பெரியதாக இருக்கலாம். ஆனால் புலி ஊக்கத்தினால் பெரிதாக இருக்கிறது. தன்னால் யானையை வீழ்த்தமுடியும் என்கின்ற தன்னம்பிக்கை இருக்கிறது. அது புலிக்கு அசுர பலத்தைக் கொடுக்கிறது. அளப்பரிய உந்து சக்தியால் புலி யானையை எளிதில் வென்றுவிடுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தீப்பொறியை ஏற்படுத்தினால்போதும், அது பெரும் நெருப்பாகப் பொங்கிப் பிரவாகமெடுத்து வெப்பத்தை ஏற்படுத்தும் - தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் ஊக்கத்தின் பின்னணி.
நாம் பிரச்னையைக் கண்டு பயந்தால் நம்மைப் பிரச்னை வென்றுவிடுகிறது. நாம் துணிந்து நின்றால் பிரச்னையைக் கிள்ளி எறிந்துவிடலாம்.
எண்ணிக்கை முக்கியமல்ல ஊக்கம்தான் முக்கியம் என்பதற்கு அழகான ஒரு ஜென் கதை உண்டு.
நோபிநாகா என்கிற ஜப்பானிய போர் வீரன் தன், எதிரி ஒருவரைத் தாக்க முற்பட்டார். ஆனால் தன் எதிரியிடம் இருப்பதுபோல பத்தில் ஒரு பங்குதான் போர் வீரர்கள் இருந்தார்கள். அவனுக்கு, தான் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தெரியும். ஆனால் அவனுடைய சிப்பாய்களுக்கு மிகுந்த சந்தேகம் இருந்தது. போருக்குப் போகிற வழியில் நோபிநாகா ஒரு shindu கோயிலுக்கு முன் தன் படையை நிறுத்தி தன் படை வீரர்களிடம் சொன்னான.
"நான் கோயிலிருந்து திரும்பியதும் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுவேன் தலை வந்தால் நாம் வெற்றி பெறுவோம், பூ விழுந்தால் நாம் தோற்போம் விதியின்படி நாம் நடப்போம்."
நோபிநாகா கோயிலுக்குச் சென்று மௌனமாய்ப் பிரார்த்தனை செய்தான். திரும்ப வந்து நாணயத்தைச் சுண்டினான். தலை விழுந்தது. அவன் வீரர்களுக் கெல்லாம் உற்சாகம் வந்தது. அவன் வீரர்கள் எல்லாம் தீவிரமாக வாள் வீசினார்கள். நோபிநாகா வெற்றி பெற்றான்.
யாரும் விதியின் கையை மாற்றி எழுதமுடியாது என்று அவன் பணியாள் சொன்னான்.
"ஆம்" என்று நோபிநாகா தான் சுண்டிய நாணயத்தைக் காட்டினான் அதில் இரண்டு நாணயங்களை ஒட்டியிருந்தான் இரண்டு பக்கமும் தலைகளே இருந்தன!
அதே வீரர்களின் எண்ணிக்கைதான். அதே வீரர்கள்தான் அதே நோபிநாகாதான்!
ஆனால் நாணயத்தைச் சுண்டியவுடன் அவர்கள் வேறு மனிதர்களாக மாறிப்போயிருந்தார்கள். மாற்றும் அவர்களுடைய உற்சாகம், தன்னம்பிக்கை ஊக்கம். வெற்றி பெறுவோம் என்று எண்ணியவுடன் அவர்களிடமிருந்த ஆற்றல் வெளிப்பட்டது. ஊக்கம் அதைத்தான் செய்யும்.