motivation article Image credit pixabay.com
Motivation

ஜெயிக்கும் வரை தோற்கலாம் தவறில்லை!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தவர்களே! அதிலிருந்து பாடம் கற்றதால்தான் வெற்றி பெற்றார்கள். வெற்றியாளர்களுடன் பழகினால் நாமும் நிச்சயம் வெற்றி பெறலாம். இது என்ன புது கதையாக இருக்கிறது என்று எண்ணாதீர்கள். அவர்களுடன் பழகப் பழக அவர்களது குணங்கள் நம்மிடம் பரிமளிக்க தொடங்கும். நம் சிந்தனை மாறுபடும். அவர்களது குழாமில் இணைந்து விட வெற்றிக்கு தேவையான உதவிகளை அவர்கள் வழங்குவார்கள்.

ஒன்றைப் பற்றி தொடர்ந்து இடையராது சிந்திப்பதன் மூலம் அதற்கான வழிகள் நமக்கு தெளிவாக புலப்படும். தோல்வியில் மனம் துவளாமல் வெற்றியைப் பற்றி சிந்தித்து அதற்காக போராடுவது நிச்சயம் நம்மை ஜெயிக்க வைக்கும்.

வெற்றிக்கும் தோல்விக்கும் சில சமயங்களில் மயிரிழை அளவுக்கு தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் ஒருவர் தோற்றுவிட்டால் அவர் அந்த காரியத்திற்காக எடுத்த முயற்சிகளை யாரும் ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தோல்வி அடைந்தவர்களை சுற்றி இருப்பவர்கள் அவருக்கு அறிவுரைதான் கூற தயாராக இருப்பார்களே தவிர அவரின் பேச்சை காது கொடுத்து கேட்க கூட மாட்டார்கள். இதற்காக மனம் தளர்ந்து போகாமல் ஜெயிக்கும் வரை போராடிக் கொண்டே இருப்பதுதான் சரி. ஜெயிக்கும்வரை தோற்கலாம் தவறில்லை. 

வெற்றி பெற விடா முயற்சி, கடைசி வரை போராடும் குணம், இலக்கை அடைய வேண்டும்  என்கின்ற வெறி இருந்தால் நிச்சயம் நாம் எண்ணியதை அடையலாம். வெற்றி பெற வேண்டுமென்றால் எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நிற்பதே வெற்றிக்கான முதல் படி. 

வெற்றிக்கு பலர் உரிமை கொண்டாடி வருவார்கள். ஆனால் தோல்விக்கு? 

தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி மாதிரி தனக்குள் சொல்லிக்கொண்டு நகர்ந்து முன்னேறப் பாருங்கள். 

ஜெயிக்கும் வரை தோற்கலாம் தவறில்லை. 

மனம் தளராமல் மனதிடத்துடன் ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் படியாக (steps) நினைத்து முயற்சிப்பது சிறந்தது. வெற்றிக்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கி பதட்டமில்லாமல் பயணிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை அடைய வேண்டும் என்று நமக்குள் ஒரு தீர்மானம் ஏற்படுத்திக் கொண்டு அதற்கான தேடுதலில் இறங்கி ஆர்வமுடன் செயலாற்ற வேண்டும்.

தனக்கான இலக்கை தானே நிர்ணயித்துக் கொள்வது அவசியம். மாறாக மற்றவர் நமக்கான இலக்கை தீர்மானிக்கும்போது பதட்டத்துடன் செயல்பட்டு வீழ்ச்சி அடைவோம். நமக்கான பயணத்தில் நம்முடைய நலம் விரும்பிகளையும் நம்முடன் சேர்த்துக் கொண்டு பயணிப்பதும்,

நம்முடைய வெற்றியை கொண்டாடுவதற்கும் நம் நலனில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கும் சில நல்ல நண்பர்களை அமைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

செய்வோமா?

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT