செல்வந்தர் ஒருவர் மிகவும் தாராளமான மனம் படைத்தவர்!
பலருக்கும் உதவி செய்தார். அவருடைய நண்பர் ஒருவர் "யார் கேட்டாலும் பணம் கொடுக்கிறாயே. உண்மையான காரணத்துக்குத்தான் செலவிடுகிறார்களா என்று உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டார்.
பிறகு செல்வந்தர் யார் வந்தாலும் அவர்களை விசாரித்து, சந்தேகம் வருபவற்றை நிராகரிக்க ஆரம்பித்தார். அவர் செய்யும் உதவிகள் குறைய ஆரம்பித்தன. அதே நேரத்தில் அவருக்கு வந்த வர்த்தக ஒப்பந்தங்களும் குறையத் தொடங்கின. அப்போது ஒரு உண்மை அவருக்கு உதயமானது.
நான் துருவித் துருவி ஆராயாதபோது, இறைவன் எனக்குச் சகல நலன்களையும் வாரி வழங்கினான் . உண்மையா என யோசிக்கத் தொடங்கியபோது இறைவனும் என் மெய்த் தன்மையைப் பரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டான். இனி, பழையபடி வழங்கத் தொடங்குவேன் என முடிவு செய்தார்.
அதற்குப் பிறகு வர்த்தகம் செழிக்கத் தொடங்கியது.
உயர்ந்த எண்ணங்களுடன் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் திகழ்பவர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிர்மறை சிந்தனைகள் நம்மை அறியாமல் ஏற்படும்போது துயரம் தோளில் அமர்ந்துவிடும். எல்லாவற்றையும் விமர்சனக் கண்ணோட்டத்துடனும்
குதர்க்கத்துடனும் பார்க்கும் மனப்பான்மை நம் ஆக்கப்பூர்வமான சக்திகளை அடியோடு உறிஞ்சிவிடுகிறது.
நாய் எப்போதும் குரைத்துக்கொண்டிருப்பதுபோல் மற்றவர்களைக் குறை சொல்லும் மனநிலையும் ஒன்று. குறை சொல்வது புத்திசாலித்தனம் என்று எண்ணம் மனப்பான்மையும் உள்ளது.
நாளிதழ்களைப் படிக்கும்போது அவற்றில் வெளியாகும் கொலை, குற்றம், திருட்டு போன்ற செய்திகளை மும்முரமாகப் படிக்கும் வாசகர்கள், சாதனையாளர்கள் பற்றிப் படிப்பதில்லை.
திருமணத்திற்குச் சென்றால்கூட நம்மைப் பற்றி விசாரிக்காமல், வராதவர்களை விசாரிக்கும் மனப்பான்மை உண்டு. குறை காணும் மனப்பான்மையுடன் அனுசரித்துப்போக மறுக்கும் பிடிவாதத்தாலும் ‘நானே சரி’ என்ற தன்முனைப்பும் இன்று திருமண வாழ்வை நீர்த்துப்போகச் செய்கின்றன. அதனால் விவாகரத்துக்களின் விகிதம் கூடியிருக்கிறது. தம்பதிக்குள் குறை காணும் மனப்பான்மை குடும்பம் என்ற அமைப்பையே குலையச் செய்துவிடும்.
அடுத்தவர்களை அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் செருப்புக்கேத்த காலைச் செதுக்கும் சிரமத்தில் சிக்கிக்கொள்வதில்லை.
குறை காண்பவர்கள் வீட்டையே சிறையாக்கிக் கொள்கிறார்கள். குறை கூறும்போது நம் உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. கல்லீரல் பொத்தலாகிறது. குடல் புண்ணாகிறது. அட்ரினலீன் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. உடல் தளர்ந்து இளமையிலேயே கிழடு தட்டிப் போய்விடுகிறது. எப்போதும் சிரித்து, மகிழ்ச்சியாக நடமாடுபவர்கள் இளமையுடன் இருக்கிறார்கள். அவர்கள் எருக்கம் பூவில் இருக்கும் மருத்துவத்தையும் தர்ப்பைப் புல்லின் மகத்துவத்தையும் ஒரு சேர உணர்வார்கள்.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்ற மனநிலைதான் இன்பம் ஏற்படக் காரணமாகும். மகிழ்ச்சி உதிரிப்பொருளாக இருப்பதில்லை. அதுவே மூலப் பொருளாக இருக்கிறது. நல்லவற்றைப் போற்றும் சமூகத்தில் தீயவை அனைத்தும் மறையத் தொடங்கிவிடும். நாமும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர்க்கும் ஏற்படும். பசியையும் தாகத்தையும்கூட அனுபவங்களாகவும் படிப்பினையாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிற திட உள்ளம் இருந்தால், மகிழ்ச்சியும் இன்பமும் நம்மைவிட்டுப் பிரிந்து ஒரு நொடிகூடத் தனிக்குடித்தனம் நடத்தாது.