உண்மையைத்தேடி ஒருவன் ஞானி ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தான். அவனை எப்படியாவது தடுக்க சாத்தான் முடிவு செய்தது. அதனால் அவனுக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. அழகிய பெண்ணொருத்தி அவனிடம் கொஞ்சிப் பேசினாள். தன்னோடு அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்றதுமே சட்டென அவளிடமிருந்து விடுபட்டுத் திரும்பும் வழியில் பிரபு ஒருவர் அவனை அரண்மனைக்கு அழைத்தார். சாத்தான் இப்படி பொருள், காமம் என பல அஸ்திரங்கள் மூலமாக அவனைத் தாக்கியும் அவன் உறுதியை அசைக்க முடியவில்லை.
ஞானியிடம் வந்த இவன் அவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க சீடர்கள் தரையில் அமர்ந்திருந்ததைப் பார்த்து ஒரு குருவுக்கு இருக்க வேண்டிய அடக்கம் இவரிடம் இல்லையே என நினைத்தான். ஞானி இவனை கவனிக்கவில்லை. மற்றவர்களும் இவரை பொருட் படுத்தவிலலை. வந்தவரை வரவேற்பது இன்சொல் கூறுவது என்ற எந்த நல்லபழக்கமும் இல்லை என நினைத்தான். சற்று நேரம் அங்கு நடப்பதை கவனித்தான்
ஞானியின் தத்துவங்கள், கோட்பாடோ எதுவும் காணப்படவில்லை. ஒரு படிப்பறிவற்ற கிராமவாசி கூட இதைவிட சிறப்பாகவே பேசுவான். எப்படி இவரை ஞானி என்று கூறுகிறார்கள்?. அவனுக்குள் மெல்லிய ஏளனம் புன்னகை எழுந்தது "மக்கள் மடையர்கள். எந்த பரதேசியையாவது பிடித்துத் தொடங்குவார்கள்" என்று எண்ணி மௌனமாக வெளியே வந்துவிட்டான். அவன் வெளியேறியதும் குரு அந்த இடத்தின் மூலையில் உற்றுப் பார்த்தார். "நீ இவ்வளவு ச்ரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. அவன் தொடக்கத்திலிருந்தே உன்னுடையவன்தான்" எனறார் சாத்தானிடம்.
இறைவனைத் தேடும்போது பொருள், புகழ், ஆசை எல்லாவற்றையும் உதறித் துணிந்தவர்கள் கூட இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தங்கள் மனத்தில் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துக்களில் இருந்து விடுபட மாட்டார்கள் என்பதை விளக்கும் அற்புதக்கதை இது. இறைவன் இப்படித்தான் இருப்பான். அவரது பேச்சு இப்படித்தான் இருக்கும்.
என்று பலவித உருவங்களை மனதில் வைத்துக் கோட்பாடு வைத்திருக்கும் நாம் நிஜமான இறைவனைக் காணும்போது அது இறைவன் அல்ல என்று ஓடிவிடச் செய்வது இந்த எண்ணங்கள்தான்.
மகிழ்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட பொருளிலோ செய்கையிலோ ஒளிந்திருக்கவில்லை. ஒருவனுக்கு ஒரு செயலால் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்த செயல் முடிந்த பிறகு மகிழ்ச்சியும் காணாமல் போய்விடும். மனிதன் பகுத்தறிவு பெற்றவன் என்று விஞ்ஞானமும் அறிவியலும் போற்றுகின்றன. பகுத்தறிவு என்பது ஒரு மலரை பாகம் பாகமாகப் பிரித்து அல்லி வட்டம், மகரந்த சேகரங்கள், சூற்பை, காம்பு என்று ஆராய்கிறது.
எப்போது ஒரு பொருளை பாகம் பாகமாக பிரிக்கிறோமோ அப்போதே அதன் உயிர்ப்பு காணாமல் போகிறது. பாகம் பாகமாக பிரியாமல் சேர்ந்திருக்கும் போதுதான் அது ஒரு அழகிய மலராக இருக்கிறது. ஞானிகள், மகான்கள் மற்றும் சித்தர்களின் வாழ்க்கையே நமக்கு. போதனையாக உள்ளது என்பதை உணர்ந்தால் எல்லாம் பிரம்மானந்தம்தான்.