இதற்குக் காசு பணம் தேவையில்லை! நண்பனே, அன்பனே! கண்ணே, மணியே! அப்பனே! ஐயனே! இவை போன்ற கனிவான, இனிய சொற்களால் அழைக்கும்போது, எதிரே இருப்பவன் உள்ளத்தில் இடம் பிடித்து விடுகிறீர்கள்.
ரஷ்ய ஞானி டால்ஸ்டாய் ஒருமுறை வீதி வழியே சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் ஒரு பிச்சைக்காரன், அவரைப் பார்த்துக் கையேந்தினான். "காசு கொடுங்கள்" என்று கேட்டான்.
அவன் தோற்றமும் சொல்லும் டால்ஸ்டாய் மனத்தை உருக்கின. அவனுக்கு ஏதாவது கொடுத்து உதவவேண்டும் என்று அவர் விரும்பினார்.
இந்த உலகியல் விஷயங்கள் அவருக்குத் தெரியாது. என்றாலும் தம்மிடம் காசு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தார்.
அவர் கோட்டு அணிந்திருந்தார். அதில் பல பாக்கெட்டுகள்.அவர் ஒவ்வொரு பாக்கெட்டிலும் கைவிட்டுப் பார்த்தார். வெளி பாக்கெட்டுகளில் பணம் இல்லை. கோட்டுக்கு உள் பாக்கெட்டுகள் உண்டு. அவற்றிலும் கைவிட்டுத் தேடினார். காசே இல்லை. டால்ஸ்டாஸ் மிகவும் வருந்தினார். அந்த வருத்தத்தோடு பிச்சைக்காரனைப் பார்த்தார்.
''நண்பா! என்னை மன்னித்துவிடு. உன்னிடம் தருவதற்கு என்னிடம் காசு இல்லை." என்றார்.
அவர் பாக்கெட்டில் கைவிட்டபோது நமக்கு ஏதோ காசு கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருந்த பிச்சைக்காரன் கோபம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அவன் கோபம் கொள்ளவில்லை.
"ஐயா, காசில்லாவிட்டால் போகட்டும், ஆனால் நீங்கள் இந்தப் பிச்சைக்காரனை நண்பா என்று அன்போடு அழைத்தீர்களே, அது போதும், அதுவே பொன்னும் பொருளும் தருவதிலும் சிறந்த வெகுமதி." என்று கூறினான் பிச்சைக்காரன்.
"நண்பா!" என்ற இனிய சொல் அவனது ஏமாற்றத்தைப் போக்கி ஒரு வகை இன்பத்தையும் தந்தது.
கோபம் கொண்டால் கண்கள் சிவக்கும். உதடுகள் துடிக்கும். பற்கள் நெறிக்கும். நரம்புகள் புடைக்கும். இரத்தம் கொதிக்கும்.
இவற்றால் கோபம் கொள்கிறவர்களே பாதிக்கப் படுவார்கள். கோபத்தால் கடுஞ்சொற்கள் சொல்லாமல், இனிய சொற்களைச் சொன்னால், சொல்பவனுக்கும் பாதகம் இல்லை. கேட்பவனுக்கும் பாதகம் இல்லை.
"புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்." என்பது உலக நீதி தரும் உபதேசம். புண்படப் பேசாதே! புன்னகைக்கப் பேசு!