வாழ்க்கை என்பது நாம் செய்யும் செயல்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் கிடைக்கும் அனுபவங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிக்கலான ஒன்றாகும். எனவே எது நம் வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக 3 ஆற்றல்கள் நமது வாழ்க்கையை வடிவமைக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
நேரம்: நேரம் என்பது நம்மிடம் இருக்கும் மிகவும் மதிப்புமிக்க வளமாகும். கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் நம்மால் மீட்க முடியாத ஒன்று. எனவே நேரத்தை நாம் எப்படி தேர்வு செய்து பயன்படுத்துகிறோம் என்பது நம் வாழ்க்கையை கட்டமைக்கிறது. தினசரி முடிவுகளில் இருந்து, வாழ்க்கையில் மிக முக்கியமான தேர்வுகள் வரை நேரத்தை பயன்படுத்துவது நமது அனுபவங்கள், சாதனைகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்வதும், அதைத் திறம்பட நிர்வகிக்க கற்றுக் கொள்வதும் நம் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பணம்: பணம் என்பது நம் வாழ்வில் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். இது நமக்கு வளங்கள், வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. நமது அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யவும், நமது உணர்வுகளை வெளிப்படுத்தவும், நாம் விரும்பும் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவும் பணம் பெரிதளவில் உதவுகிறது. எனவே பணம் வெறும் காகிதம் என்பதைத் தாண்டி அதற்கான அங்கீகாரத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் சம்பாதிப்பது, செலவு செய்வது மற்றும் நமது நிதிகளை நிர்வகிப்பது ஆகியவை நமது வாழ்க்கையில் பல தருணங்களை வடிவமைக்கிறது.
நீங்கள்: ஆம் நீங்களே உங்கள் வாழ்க்கையின் மூன்றாவது மிகப்பெரிய ஆற்றல். நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையை எந்த திசையில் வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும். உங்கள் எண்ணங்கள், நம்பிக்கைகள், அணுகுமுறைகள் மற்றும் செயல்களே உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கின்றன. எனவே இதைப் புரிந்துகொண்டு சுய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும்.
இந்த மூன்று ஆற்றல்களே உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் கட்டமைக்கிறது. இதைப் புரிந்து கொண்டு இந்த மூன்று விஷயங்களில், உங்களது கவனத்தை செலுத்தி வாழ்க்கையை மேலும் சிறப்பாக மாற்றிக் கொண்டால் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை நீங்களும் வாழலாம்.