உழைப்பின் மேன்மையை வலியுறுத்துவதற்காக வந்த பொன்மொழி இது. இன்னும் சொல்லப்போனால் தான் உழைத்து தன் கையால் சம்பாதித்து சாப்பிடாமல், தந்தை, தாத்தா, பாட்டன் காலத்தில் சம்பாதித்ததை வைத்து உணவு உண்பவர்களை 'பழையது சாப்பிடுவதற்கு சமம்' என்பார்கள். காரணம் மூதாதையர்கள் சொத்தில் அவர்களின் உழைப்பை எடுத்து வாழ்வதால், அப்படிச் சொல்லி சொந்த காலில் நிற்க செய்வதற்காக அறிவுறுத்துவதற்கு அப்படிச் சொல்வார்கள்.
இன்னும் சொல்லப்போனால் 'குந்தித் தின்றால் குன்றும் மாளும்' என்ற பழமொழியை எடுத்துரைத்து வீட்டில் யாராவது உழைக்காமல் இருந்தால் அவர்களை உழைத்து சம்பாதிக்க எடுத்துரைப்பார்கள். இதிலிருந்து உழைப்பின் உன்னதத்தைப் புரிந்து கொள்ளலாம்.
காந்தியடிகளின் உழைப்பைப் பற்றி நாம் அறியாதது அல்ல. ஒரு முறை சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளின் குடிலில் அவருக்கு சேவை செய்யும் பெண், காந்தியடிகள் குடிப்பதற்கு ஒரு சொம்பு நிறைய மாம்பழச்சாறு கொண்டுவந்து கொடுத்தார்கள். காந்தி அந்தப் பெண்ணிடம் எத்தனை மாம்பழத்தின் சாறு ? என்று கேட்டார். மனு பெண் "இரண்டு மாம்பழம்" என்றார்.
"இரண்டு மாம்பழங்கள் அரையணா, அவ்வளவு மாம்பழச் சாறு சாப்பிடுவதற்கான உடல் உழைப்பு எதையும் நான் செய்யவில்லையே, அப்படி இருக்கையில் நான் இதை அருந்துவது தேசத்ரோகம் அல்லவா, அதனால் இந்த சாற்றை ஆசிரமத்தில் இருக்கும் சிறுவர்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்றார்.
உழைக்காமல் உண்ணக்கூடாது என்பது எவ்வளவு சீரான சிந்தனை! என்பதை எவ்வளவு நாசூக்காக புரிய வைத்திருக்கிறார் நமது மகாத்மா என்பதை நாம் உணர வேண்டும். அவரை நினைவு கூர்ந்து அவர் கூறிச் சென்றதை பின்பற்றுவோம்! இதுவே நாம் அவருக்கு செய்யும் கடமையாகும். நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டிய முக்கியமான அறிவுரையும் இதுவே ஆகும்.