நம் வாழ்வில் பல சமயங்களில் எவ்வளவுதான் உழைப்பை போட்டிருந்தாலும் ஜோதிடம், காலநேரம் போன்றவற்றின் மீது ஒரு சிறு நம்பிக்கை வைத்திருப்போம். இது உண்மையிலேயே இருக்கிறதா? இதற்கு நம் கடும் உழைப்பைக் காட்டிலும் சக்தி அதிகமா? இதைப்பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையை பார்ப்போம்.
ஒருமுறை கிருஷ்ணதேவராயர் எதிரி நாட்டு மன்னனை தாக்குவதற்காக படையெடுத்து செல்கிறார். அப்படி அவர் போகும் வழியில் ஒரு பெரிய ஆற்றங்கரையை கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது அரசவை ஜோதிடர், ‘அரசரே! இன்று நாள் சரியாக இல்லை. அடுத்த திங்கட்கிழமை போருக்கு சென்றால் வெற்றி நிச்சயம்’ என்று கூறுகிறார்.
இதைக்கேட்ட கிருஷ்ணதேவராயருக்கு வருத்தம் ஏற்படுகிறது. ‘அவ்வளவு நாள் தள்ளிச் சென்றால் எதிரி நாட்டு மன்னன் உஷாராகிவிடுவானே? ஆனால், ஜோசியரோ இப்படி சொல்கிறாரே?’ என்று கிருஷ்ணதேவராயருக்கு மேற்கொண்டு செல்ல தயக்கம் ஏற்படுகிறது.
இததைப் பார்த்த தெனாலிராமன் ஜோசியரை அழைத்து, ‘எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே? நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்பதை சொல்ல முடியுமா?’ என்று கேட்கிறார். அதற்கு ஜோசியரோ, ‘நான் இன்னும் இருபது வருடம் உயிரோடு இருப்பேன்’ என்று பெருமையாக சொல்கிறார்.
இதைக்கேட்ட தெனாலி ராமன் திடீரென்று தன் வாளை எடுத்து ஜோசியர் கழுத்தில் ஆழமாக பதித்து, ‘இந்த விநாடியே அந்த ஆருடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா முடியாதா?’ என்று கேட்கிறார். இதை சற்றும் எதிர்ப்பாராத ஜோசியர், ‘கண்டிப்பாக முடியும்’ என்று சொல்லி பதறுகிறார். ‘அவ்வளவுதான் மன்னரே ஜோசியம். உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் பொய்யாக முடியும்’ என்று தெனாலி சொல்ல, கிருஷ்ணதேவராயர் ஆற்றைக் கடக்கிறார். அந்த போரில் வெற்றியும் பெறுகிறார்.
இந்தக் கதையில் வந்தது போலத்தான் நம் வாழ்வில் ஜோதிடத்தை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம் தான் என்றாலுமே முக்கியமான நேரத்தில் ஜோதிடத்தை மட்டுமே நம்பி நமக்கு கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்களைக் கோட்டை விடுவது முட்டாள் தனமாகும். இதைப் புரிந்துக்கொண்டு கடும் உழைப்பு, விடாமுயற்சியின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள் வெற்றி நிச்சயம். முயற்சித்துதான் பாருங்களேன்.