deepthi jeevanji athlete 
Motivation

கேலிகளைக் கண்டு துவளாமல் திறமையைப் பெருக்கி சாதிக்கலாம் வாங்க!

சேலம் சுபா

வெற்றி என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடும் பொருள் அல்ல. திறமைகள் இருந்தாலும் புற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு   மனம் வருந்தி தனக்குள்ளேயே மடிந்து உடைந்து போவார்கள் பலர். அப்படி உடையாமல் அந்த தடைகளை தகர்த்து எறிந்து மகத்தான மனிதராக சாதனை புரிபவர்கள் வெகு சிலரே.

இதோ உருவ கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் சாதனை அவ்வளவு எளிதானது அல்ல. வெற்றி பெறத் துடிப்பவர்கள் நிச்சயம் இவரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தீப்தி ஜீவன்ஜி மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாராலிம்பிக் (ஒட்டப்பந்தயம்) போட்டியில் வெண்கலம் வென்று தன்னை புறக்கணித்தவர்களுக்கு பதிலடி தந்துள்ளார்.

"தீப்தி பிறக்கும்போதே அவருடைய தலை மிகவும் சிறியதாக இருந்தது. உதடுகள் மற்றும் மூக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. அவரைப் பார்த்த உறவினர்களும், கிராமத்தினரும் மனவளர்ச்சி குன்றியவர் என்றும், குரங்கைப் போன்ற முக அமைப்பை உடையவர் என்றும் கூறி  மனம் புண்படும்படி கேலி செய்தனர். அத்துடன், அவரை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி விடுங்கள் என்றும் சொன்னார்கள். ஆனால், நாங்கள் அந்த தவறைச் செய்யவில்லை." என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அவரின் தாய்.

ஆந்திர மாநிலம் வாரங்கலில் பிறந்த தீப்தி ஜீவன்ஜி பிறவியிலேயே அறிவுசார் குறைபாடுடையவராகவும் சீரற்ற முக அமைப்புடனும் பிறந்துள்ளார். வளரும் சதழலில் அவரது உருவத்தை வைத்து சக கிராமத்தினர் கேலியும், கிண்டலும் செய்து வந்துள்ளனர். தன் மீதான காலில் தாக்குதல்களை உணர்ந்து வேதனையுற்ற தீப்திக்கு அவரது தாயின் அரவணைப்பு ஆறுதல் தந்தது.

பள்ளி முதல்  எங்கு சென்றாலும்   உருவகேலிக்கு ஆளான தீப்தியின் வேகமாக ஓடும் திறமையை அவரது 9ம் வகுப்பில் கண்டுபிடித்தார் அவரது விளையாட்டு ஆசிரியர். அதன் பின் வந்த காலங்கள் தீப்தியின் விடாமுயற்சி மற்றும் பயிற்சிகளினால் நிறைந்தது. துரத்திய கேலிகளும் கிண்டல்களும் அவரை விட்டு ஓடின.

அதன் பலன்  கடந்தாண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் 400 மீ. டி20 பிரிவில் தங்கம் வென்றார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், பெண்களுக்கான 400 மீ. டி20 பிரிவு ஓட்டத்தின் பைனலில் இலக்கை 55.07 வினாடியில் கடந்து, புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  இதோ இப்போது பெண்களுக்கான 400 மீட்டர் டி20 இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

மாற்றுத்திறன் கொண்ட சாதனையாளர்களின் பின் நிச்சயம் ஒரு தன்னம்பிக்கை கதை இருக்கும். சற்று சிந்தியுங்கள். சிறு பிரச்னை என்றாலே துவண்டு போகும் சாதாரண மனிதர்கள் இடையில் மன ரணத்தை வென்ற சாதனைப் பெண் தீப்தி போன்றவர்கள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்கள். கேலிகளைப் புறந்தள்ளி சாதிக்கப் பழகுவோம்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT