Swamy Ayyappa's incarnations 
ஆன்மிகம்

கலியுக வரதன் ஐயப்பனின் 10 அருள் அவதாரங்கள்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

சுவாமி ஐயப்பன் சபரிகிரிவாசனாக பிரம்மச்சரிய விரதம் பூண்டு இருந்தாலும், அவர் அநேக அவதாரங்கள் எடுத்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிறப்பான பத்து வடிவங்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஆதி பூதநாதர்: இவர் பொதுவாக ஐயனார் என்று அழைக்கப்படுவார். கிராமங்களில் எல்லைத் தெய்வமாக அமர்ந்து காத்தருள்பவர். காலத்தே மழை பெய்விக்கச் செய்து பயிர்கள் செழிக்க அருள்பவர். பஞ்சம் நீங்கி பசுமை நிலவ இவரே காரணம்.

சம்மோஹன சாஸ்தா: பக்தர்களின் இல்லத்தை காப்பவர். இல்லத்தில் ஒற்றுமையை ஓங்கச் செய்பவர். குடும்ப அமைதிக்குக் காரணமாக விளங்குபவர்.

கல்யாண வரத சாஸ்தா: தடைப்பட்ட திருமணங்கள் நடைபெற அருள்புரிபவர். செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் உபாதைகளை நீங்கச் செய்பவர். இவரை வழிபட்டால் மங்கலங்கள் யாவும் வசப்படும்.

வேத சாஸ்தா: கலைகளில் ஞானம் பெற உதவுபவர். புத தேவன் போல, சாஸ்திர ஞானம் அருளி வேதம் தழைக்க வழிவகுத்து, வேதத்தின் சொற்படி நம்மை வழிநடத்தி செல்பவர்.

ஞான சாஸ்தா: கல்லால மரத்தின் கீழ் சீடர்களுடன் எழுந்தருளியிருப்பவர். மாணிக்க வீணையை கையில் ஏந்தி மேதா தட்சிணாமூர்த்தியாய் குரு பகவான் ஸ்தானத்தில் அமர்ந்து வணங்குவோருக்கு கல்வி அறிவை அருள் செய்பவர்.

பிரம்ம சாஸ்தா: சந்தான பாக்கியம் பெற அருளும் நாயகனாய் பிரம்ம சாஸ்தாவாய் சுக்கிரன் போல, சுடர்மிகு தேஜஸுடன் காட்சி தந்து அருள்புரிபவர்.

ஸ்ரீ தர்ம சாஸ்தா: பக்தர் தம் தவறுகளைக் களைந்து, பிழைகள் பல பொறுத்து ஞானமும், மவுனமும் உபதேசித்து, ஜாதி, மத பேதமின்றி தடுத்தாட்‌கொண்டு முக்தி நிலை அருள்பவர். சனி பகவானின் உபாதைகளை நீங்கச் செய்பவர்.

மஹா சாஸ்தா: இவரை வணங்கினால் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். ராகுவினால் ஏற்படும் கிரக தோஷம் நீங்கும். மிகுந்த வல்லமை படைத்தவர்.

வீர சாஸ்தா: கேது தோஷம் தீர்ப்பார். கைகளில் ஆயுதம் தாங்கியும், புலி மீதேறித் தீயவர்களை அழித்தும், பக்தர்களைக் காக்கும் மாவீரன். ருத்ர குமாரன்.

கலியுக வரதன்: நான்கு யுகங்களிலும் தொடரும் தெய்வ அவதாரம்தான் சுவாமி ஐயப்பனின் அவதாரம் எனப் புராணங்கள் போற்றுகின்றன. இந்த கலியுகத்தில் விரதம் இருந்து, இரு முடி கட்டி வரும் பக்தர்களைக் காக்கும் கடவுளாக கலியுக வரதனாக விளங்கும் வடிவமே சபரிகிரிவாசனின் இந்த எழில் வடிவம்.

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் பாடம் புகட்டிய சிவபெருமான்!

தனிமையில் வாழும் ஹெர்ட்ஸ் திமிங்கலங்கள்… என்ன காரணம்?

ஐந்து நிலை கோபுரங்களை கொண்ட கந்தகோட்டம் கந்தசாமி கோவில்!

குழு பயணம் அல்லது தனிப் பயணம் எது சிறந்தது!

இந்தக் கோவிலுள் ஊர்ந்துதான் வலம் வரவேண்டும்!

SCROLL FOR NEXT