ஆண்டாள் ரெங்கமன்னார் 
ஆன்மிகம்

ஆடிப்பூர தினத்தில் ஆண்டாளை நினைத்து விரதமிருப்பதில் இத்தனை நன்மைகளா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

கேரளாவில் ஆடி மாதத்தை, ‘ராமாயண மாதம்’ என்று அழைப்பார்கள். இந்த மாதம் முழுவதும் கேரளாவில் ராமாயண காவியத்தை எல்லோர் வீடுகளிலும் பக்தியோடு பாராயணம் செய்வார்கள். முற்காலத்தில் பிரபலமாக இருந்த இந்த ராமாயண பாராயண வழக்கம் தற்போது குறைந்து காணப்படுகிறது என்றாலும் ஆலயங்களிலும், பல வீடுகளிலும் இன்றும் தவறாமல் கடைபிடிக்கப்படுகிறது.

ஸ்ரீராமபிரான் அவதரித்தது சூரிய குலத்தில். அவருடைய ராசியும் கடக ராசி. எனவே, கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதத்தை ராமருக்கு உரிய மாதமாகக் கருதி இந்த மாதத்தில் ராமாயண பாராயணம் செய்வது இங்கு வழக்கமாக உள்ளது. வீட்டில் ஆண்டாள் படத்திற்கு அரக்கு கலர் புடவை சாத்தி, தாமரைப்பூ வைத்து, ஆண்டாள் பாடிய, ‘வாரணமாயிரம்’ பாடலைப் பாடி காப்பரிசி, கல்கண்டு சாதம் நிவேதனம் செய்து வழிபடுவர்.

ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம் என்பதால், சூடிக்கொடுத்த சுடர்கொடியாளை ஆடிப்பூர நாளில் தரிசனம் செய்ய ஆனந்தமான வாழ்வு அமையும், திருமணம் கைகூடும். பூமி பிராட்டியின் அவதாரம் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் ஆண்டாளாக அவதரித்தாள். எனவே, இந்த நாளில் ஆண்டாளையும் பெருமாளையும் வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கற்பகாம்பாளுக்கு ஆடிப்பூரத்திற்காக விசேஷமாக வளையல்களால் பந்தல்கள் போட்டு, வளையல்கள் சாத்தி ஆடிப்பூரத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். அதேபோல், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் உள்ள சுயம்புவான திரிபுரசுந்தரி அன்னைக்கு அஷ்ட கந்தகம் சாத்தி மார்பில் ஸ்ரீ சக்கர பதக்கமும் சாத்தப்பட்டுள்ளது. இத்தலத்தில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்திரி ஆகிய 3 நாட்கள் மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆடிப்பூரத்தன்று அம்மனை தரிசிக்க பலவித நன்மைகள் உண்டாகும்.

அம்மனுக்கு வளையல் அலங்காரம்

அம்மனுக்கு வளைகாப்பு: ஆடிப்பூரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் வளைகாப்பு திருவிழா கோலாகலமாக நடைபெறும். அம்மனுக்கு வளையல் மாலைகள் சாத்தி சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும். ஆடிப்பூரம் அம்மனுக்கு மிகவும் விசேஷமான நாளாகும். இந்நாளில்தான் அம்மனின் அவதாரம் நிகழ்ந்ததாகவும், உலக மக்களுக்காக சக்தியாக உருவெடுத்த நாள் இது என்றும் போற்றப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக் காப்புடன் வளையல் காப்பும் நடைபெறும் விசேஷமான நாளிது.

இந்நாளில் அம்மனுக்கு கண்ணாடி வளையல்களை வாங்கிக் கொடுத்து, அம்மனுக்கு சாத்திய பிறகு அந்த வளையல்களை பிரசாதமாகப் பெற்று அணிந்துகொள்ள, திருமணம், பிள்ளைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆடிப்பூர நாளில் திருப்பாவை 30 பாசுரங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

ஆடிப்பூரத்தன்று வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். கன்னிப்பெண்கள் இந்நாளில் விரதமிருந்து ஆண்டாளை வணங்க, அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதுடன் சந்தான பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT