Anumanum Azhagiya Singamum https://nimaipandit.ning.com/
ஆன்மிகம்

அனுமனும் அழகிய சிங்கமும்!

நளினி சம்பத்குமார்

ன்னும் ஒருசில நாட்களில் கார்த்திகை மாதம் முடியப் போகிறது. கார்த்திகை மாதத்திற்கு எத்தனை எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும், முக்கியமான ஒரு சிறப்பு என்பது இந்த மாதத்தில்தான் அதிகமாக லட்சுமி நரசிம்மர் கோயில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபடுவார்கள். அதிலும் குறிப்பாக கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பாக போற்றப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் மட்டும்தான் சோளிங்கர் எனும் ஊரில் எழுந்தருளி இருக்கும் யோக நரசிம்மர் கண் திறந்து பார்ப்பதாக ஒரு நம்பிக்கை. அதனாலேயே இந்த கார்த்திகை மாதம் முழுவதுமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியோடு சோளிங்கருக்கு சென்று 1305 படிகள் ஏறி அங்கே அழகாய் கொலு வீற்றிருக்கும் யோக நரசிம்மரை வழிபடுவர். யோக நரசிம்மர் அருள்பாலித்து கொண்டிருக்கும் அந்த மலைக்கு பெரிய மலை என்று பெயர். அதன் அருகிலேயே சின்ன மலை என்ற ஒரு மலை இருக்கிறது. அந்த மலையில் யோக ஹனுன் கையில் சங்கோடும் சக்கரத்தோடும் காட்சி கொடுத்து கொண்டிருக்கிறார்.

வருடத்தின் 11 மாதங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கும் இந்த யோக நரசிம்ம பெருமாள், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறந்து பார்க்கிறார் என்பது ஒரு சிறப்பு என்றால், இந்த திவ்ய தேசத்தில் 24 நிமிடங்கள் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் மோட்சம் என்பது நிச்சயம். லட்சுமி நரசிம்மர் கோயில் கொண்டிருக்கும் பல தலங்களில் அவருக்கு எதிரிலேயோ அல்லது அருகிலேயோ ஆஞ்சனேயரும் சன்னிதி கொண்டிருப்பார்.

நாமக்கல்லில் அப்படித்தான் அங்கே இருக்கும் நரசிம்மரின் திருவடி நோக்கி தனது பார்வை படும்படி இருப்பார் ஹனுமன். சோளிங்கரில் பெரிய மலையை நோக்கி நடப்பவர்களுக்கு துணையாக ஹனுமன், வானரர்கள் (குரங்குகள்) ரூபத்தில் மலை நெடுகிலும் இருப்பதை கண்கூடாக அங்கே செல்லும் பக்தர்கள் அனைவருமே பார்த்திருப்பார்கள். நடங்கள்... நடங்கள் நரசிம்மரை சேவிக்க சீக்கிரம் செல்லுங்கள் என்று மலை மீது இருக்கும் நரசிம்மரை வழிபட வழிகாட்டியபடியே நிற்கும் பல வானரங்கள்.

தம்மை நோக்கி தவம் புரிந்த தேவர்களையும், முனிவர்களையும், காலகேய அசுரர்களும், கும்போதர அசுரர்களும் துன்புறுத்தி வருவதை அறிந்த அழகிய சிம்மமான நரசிம்ம பெருமாள் அவர்களை காக்கும் பொருட்டு சோளிங்கரில் அனுமனிடம் சங்கையும் சக்கரத்தையும் கொடுத்ததாகப் புராணக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன. மேல்கோட்டையில் இருக்கும் யோக நரசிம்மரை நோக்கி மலை ஏறி செல்லும்போதும் அப்படித்தான் அங்கேயும் நிறைய வானரங்களைப் பார்க்கலாம்.

ராமாயணத்தில் சீதைக்கு ஆறுதல் சொல்லும்போது ஹனுமன் என்ன சொன்னார் தெரியுமா? “அம்மா! எதற்காக இவ்வாறு கண்ணீர் விடுகிறீர்கள்? என் முதுகில் ஏறி வரப்போகிறான்... நரசிம்மன் வரப்போகிறான், உங்கள் துயர் துடைக்க” என்றார். நரசிம்மரை ராமராகவும், ராமரை நரசிம்மராகவும் அல்லவா தம் பக்தி மிகுதியால் பார்த்தார், பார்த்து கொண்டே இருக்கிறார் ஹனுமன்? இதற்கு இன்றும் அத்தாட்சியாய் அஹோபிலம் எனும் நவ நரசிம்ம க்ஷேத்திரத்தில் காட்சி கொடுத்து கொண்டிருக்கிறார் காரஞ்ச நரசிம்மர்.

ஆஞ்சனேயர் நவ நரசிம்மரும் எழுந்தருளி இருக்கும் அஹோபிலத்தில் தன் நாதனான ஸ்ரீ ராமரை நோக்கி கடும் தவம் புரிந்து கொண்டிருந்தார். அவரின் அந்தத் தவத்தை பார்த்து மகிழ்வுற்ற நரசிம்மர் ஹனுமனின் முன்னே காட்சி கொடுக்க, ஹனுமனோ, “எனக்கு ராம தரிசனம்தான் வேண்டும்” என வேண்டி நிற்க, தன் கையில் தனுசை (வில்லை) ஏந்தி, ‘இதோ நானேதான் ராமர்’ என்று இன்றளவும் ராகவ நரசிம்மமாகவே காட்சி கொடுத்து கொண்டிருக்கிறார் நரசிம்மர். நரசிம்மரை பல திருக்கோலத்தில் பார்த்திருப்போம். ஆனால், அகோபிலத்தில் மட்டுமேதான் ஹனுமனுக்காக ஸ்ரீ ராமரை போலவே கையில் தனுசோடு காட்சி தரும் நரசிம்மரை நாம் தரிசிக்க முடியும். ராமாயணத்தில், சுக்ரீவன் கூட ராமரை பார்த்து, “நீ வெறும் ராகவன் இல்லை. நீ ந்ருசிம்ஹ ராகவன்” என்பான்.

பகவத் கீதையில் க்ருஷ்ண பரமாத்மா, “என்னுடைய பக்தர்கள் எப்படி பிரார்த்தனை செய்கிறார்களோ அவ்வண்ணமே நான் வருவேன்” என்றாரல்லவா கூறுகிறான்? அப்படித்தான் ஆஞ்சனேயர் முன்பும் ராமரை போலவே காட்சி கொடுத்து கொண்டிருக்கிறார் போலும் அந்த காரஞ்ச நரசிம்மர்.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT