எல்லோரும் கோயிலுக்குச் செல்வதற்கான முக்கியமான காரணம் மனநிம்மதியை தேடுவதற்காக இருக்கும். இன்னும் சிலரோ, தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடியும், எதிரிகளிடமிருந்து தன்னை காக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொள்ளவும் செல்வார்கள். அப்படி எதிரிகளை அழித்து, மக்களைக் காப்பதற்காகவே அவதரித்து இருக்கும் தெய்வம்தான், பிரத்தியங்கிரா தேவி.
கும்பகோணத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த ஐயாவாடி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில். இக்கோயில்தான் பிரத்தியங்கிரா கோயில்களிலேயே மிகவும் பழைமையான கோயிலாகும்.
பஞ்சபாண்டவர்கள் இத்தலம் வந்து பிரதியங்கிராவை தரிசித்ததால், ‘ஐவர்பாடி’ என்று வழங்கப்பட்ட இந்த ஊர் நாளடைவில் திரிந்து, ஐயாவாடி என்று ஆனதாகக் கூறப்படுகிறது. பிரத்தியங்கிரா தேவியை தரிசிப்பதால், நம்மைச் சுற்றியுள்ள தீய சக்திகளும், எதிரிகளும் அழிந்துபோவார்கள் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு பௌர்ணமி இரவும் இக்கோயிலில் வரமிளகாய் யாகம் நடத்தப்படுகிறது. இதுபோன்று அன்னை பிரத்தியங்கிராவுக்கு வரமிளகாய் யாகம் செய்பவர்களின் எதிரிகள் அழிவதைக் கண்கூடாகப் பார்க்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. பில்லி, சூன்யம், ஏவல் போன்றவையும் பிரத்தியங்கிராவை வழிபட்டால் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
அரக்கன் ஹிரண்யகசிபுவை அழிக்க விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அவர் மிகவும் உக்ரமாக இருந்தார். ஹிரண்யகசிபுவை அழித்த பிறகும் அவர் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதனால் சிவபெருமானே சரபேஸ்வரராக அவதரித்தார். சக்தி தேவி மகாபிரத்தியங்கிராவாக அவதரித்தார்.
கஷ்டங்கள் எல்லாம் பனிப் போல விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக பிரத்தியங்கிரா தேவியை ஒருமுறை தரிசித்து வாருங்கள்!