ஆன்மிகம்

கண்டபேருண்டப் பட்சி பற்றி தெரியுமா உங்களுக்கு!

ஆர்.வி.பதி

ரண்டு தலைகளைக் கொண்ட ஒரு பறவை. ‘கண்டபேருண்டப் பட்சி’ என்று அழைக்கப்படுகிறது. இப்பறவை இருதலைப்புள் மற்றும் சிம்புள் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. இப்பறவையின் அலகுகள் யானையின் துதிக்கையைப் பிடித்து யானையைத் தூக்கிக் கொண்டுள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பறவை யானையையே தூக்கும் அளவிற்கு வலிமையானது.  இதனால் இப்பறவை வலிமையின் அடையாளமாகவும், அழிவு சக்திகளை எதிர்த்துப் போராடும் உருவமாகவும் கருதப்படுகிறது. கண்டபேருண்டப் பட்சி மைசூரு ராஜ்ஜியத்தில் உடையார் ஆட்சியாளர்களின் அதிகாரப்பூர்வமானச் சின்னமாகவும் திகழ்ந்துள்ளது.

ஆன்மிகத்திலும் இப்பறவை இடம்பெற்றுள்ளது. இப்பறவை மகாவிஷ்ணுவின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. நரசிம்மர் இரணியனை வதம் செய்தபிறகு மிகவும் உக்கிரமாகக் காட்சியளித்தார். அவருடைய உக்கிரத்தைத் தணித்து சாந்தப்படுத்த சிவபெருமான் சரபேஸ்வரரைத் தோற்றுவித்தார். அச்சமயத்தில் நரசிம்மருக்கும் சரபேஸ்வரருக்கும் பதினெட்டு நாட்கள் உக்கிரமான போர் நடைபெற்றது. நரசிம்மர் சரபேஸ்வரரை எதிர்ப்பதற்காக கண்டபேருண்டப் பறவையின் சக்தி வடிவத்தை வெளிப்படுத்தி சரபேஸ்வரருடன் போரிட்டார். இதனால் சரபேஸ்வரரின் கோபம் அதிகரிக்க, தனது நெற்றிக் கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவியைத் தோற்றுவித்தார்.

இப்படி உருவான பிரத்யங்கிரா தேவி ஆயிரம் சிங்க முகம், இரண்டாயிரம் கைகள், புலியின் நகங்கள், கரிய நிறம், யானையைப் போன்ற பத்து மடங்கு பெரிய உருவம் என விஸ்வரூபம் எடுத்தாள். அன்னை பிரத்யங்கிரா தேவி கண்டபேருண்டத்தின் சக்தியை விழுங்கினாள். இதன் பின்னர் நரசிம்மர் சாந்தமானார் என்பது ஐதீகம். பிரத்யங்கிரா தேவியின் பிரம்மாண்டமான வடிவத்தினை பக்தர்கள் வழிபட இயலாது என்பதற்காக சிங்க முகம், மனித உடல், எட்டு கரங்களுடன் கூடிய வடிவத்திற்கு அன்னை தன்னை மாற்றிக் கொண்டார்.

சில கோயில்களில் கண்டபேருண்டப் பட்சியின் வாகனங்களைக் காணலாம். பல கோயில்களில் இவ்வடிவம் புடைப்புச் சிற்பமாகத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளதையும் காணலாம். கர்நாடக மாநிலத்தின் அரசுச் சின்னத்திலும் இந்தப் பறவை காணப்படுகிறது.

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

SCROLL FOR NEXT