Do you know about the history of Veeramangai Vettudaiyar Kaliamman? 
ஆன்மிகம்

வீரமங்கை வெட்டுடையார் காளியான வரலாறு தெரியுமா?

நான்சி மலர்

வீரமங்கையான வேலு நாச்சியாரை பிரிட்டீஷ் படை துரத்திக்கொண்டு வந்தது. சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி அருகேயிருக்கும் அரியாக்குறிச்சியிலிருக்கும் காட்டுப்பகுதிக்குள் தன்னுடைய படைகளுடன் தப்பித்து சென்றுவிடுகிறார் வேலு நாச்சியார்.

அந்த இடத்தில் 12 வயது உடையாள் என்ற சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பக்கமாக பிரிட்டீஷ் படைகள் வந்தது. படை தளபதி அந்த சிறுமியை கூப்பிட்டு, ‘நீ வேலு நாச்சியாரை பார்த்தாயா? அவர்கள் எந்தப் பக்கமாகப் போனார்கள்’ என்று கேட்கிறார்.

அதற்கு அந்தச் சிறுமி, ‘நான் வேலு நாச்சியாரைப் பார்த்தேன். ஆனால், அவர் எந்தப் பக்கமாக போனார் என்பதை உங்களிடம் சொல்ல முடியாது’ என்று கூறினாள். இதைக்கேட்ட படைத் தளபதிக்கு பயங்கர கோபம் வருகிறது. ‘இப்போது நீ சொல்லவில்லை என்றால் உன்னை இரண்டு கூறாக வெட்டிப் போட்டு விடுவேன்’ என்று கூறுகிறார்.

‘நீ என்னை இரண்டு கூறு இல்லை எட்டு கூறாகக்கூட வெட்டிப்போட்டுக்கொள். ஆனால், எங்கள் நாட்டு ராணி எங்கே போனார்கள் என்று உன்னிடம் சொல்ல முடியாது’ என்று கூறுகிறாள். இதைக்கேட்ட பிரிட்டீஷ் தளபதிக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. அந்த இடத்திலேயே சிறுமியான உடையாளை இரண்டு துண்டாக வெட்டிப் போட்டுவிட்டு சென்று விடுகிறான்.

இந்தச் செய்தியைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்த வேலு நாச்சியார் அந்தப் பெண் வெட்டுப்பட்டுக் கிடந்த இடத்தில் ஒரு காளியம்மன் கோயிலை நிறுவுகிறார். அங்கே வெட்டுடையார் காளியம்மனாக உடையாள் இன்றளவும் வணங்கப்பட்டு வருகிறாள்.

சிவகங்கை மாவட்டம், காளையர்கோவில் வட்டம், அரியாக்குறிச்சி கிராமம் மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொல்லங்குடி கிராமத்திற்கு தெற்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் வெட்டுடையார் காளி திருக்கோயில் அமைந்திருக்கிறது.

இக்கோயிலில் அருளும் அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து எட்டுக்கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண் பழி,  அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தோர் தங்களுக்கு நீதி கிடைக்க இந்த அம்பாள் சன்னிதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் மாங்கல்யத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிச் செல்கின்றனர். வெகு நாட்களாக பிரிந்திருக்கும் உறவுகள் ஒன்று சேரும் இடமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த கோயிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.

சிறுகதை: களிமண் பிள்யைாரும் மூணு யூனிட் இரத்தமும்!

சருமத்தில் இந்த அறிகுறிகளா? ஜாக்கிரதை! 

சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!

மதங்க முனிவர் காட்சி கொடுத்த திருநாங்கூர் மாதங்கீஸ்வரர்!

சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!

SCROLL FOR NEXT