ஸ்ரீகிருஷ்ணர் https://vama.app/blog
ஆன்மிகம்

கலியுகம் குறித்து பகவான் கிருஷ்ணர் தெரிவித்திருக்கும் செய்தி என்ன தெரியுமா?

மாலதி சந்திரசேகரன்

ரு சமயம் பஞ்சபாண்டவர்களில் யுதிஷ்டிரரைத் தவிர மற்ற நால்வரும் ஸ்ரீ கிருஷ்ணனுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, “கிருஷ்ணா, கலியுகம் வரப்போகிறதாமே. அப்படி என்றால் என்ன? எங்களுக்குக் கொஞ்சம் விரிவாகத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக எப்பொழுதும் போல் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மந்திரப் புன்னகையை உதிர்த்தார்.

“உங்கள் கேள்வி சரிதான். கலியுகம் வரப்போகிறது. அது எப்படி இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது அல்லவா? நான் ஒன்று செய்கிறேன். நான்கு திசைகளிலும் நான்கு அம்புகளைச் செலுத்துகிறேன். நீங்கள் நால்வரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று,  அந்த அம்பு விழுந்த இடத்தில் என்ன பார்த்தீர்கள் என்பதை எனக்குத் தெரிவிக்கவும். அதைப் பார்த்தவுடன் உங்களுக்கே கலியுகம் எப்படி இருக்கப் போகின்றது என்பது புரியப் போகிறது” என்று கூறினார்.

கிருஷ்ணர் எழுந்து நான்கு  திசைகளிலும் அம்புகளைச் செலுத்தினார்.  நால்வரும்  அம்புகள் சென்ற திசையில் வேகமாக சென்றார்கள். முதலில் அர்ஜுனன் சென்று பார்த்தார். அம்பு விழுந்த இடத்திற்கு அருகில் இனிமையான குயிலின் கானம், கேட்பவரை மதி மயங்கச் செய்யும் வண்ணம் இருந்தது. தலையை உயர்த்திப் பார்த்தபொழுது மரக்கிளையில் ஒரு குயில் இசைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அதன் கால்களில், வலியால் துடித்துக்கொண்டிருந்த பிறந்த முயல் குட்டி. சற்று நேரத்தில் குயிலுக்கு அது இரையாகி விடுமோ?  குழப்பத்துடன் அம்பினை எடுத்துக்கொண்டு திரும்பினார்.

பீமன் அம்பினை எடுக்கச் சென்ற இடத்தில் ஐந்து கிணறுகள் இருந்தன. நடுவில் ஒரு கிணறும் அதைச் சுற்றி நான்கு கிணறுகளும் இருந்தன. நான்கு கிணறுகளில் இருந்தும் சுவையான நீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. நடுவில் இருந்த கிணறு மட்டும் காய்ந்து போய் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு இருந்தது.

நகுலன் சென்ற இடத்தில் கன்றினை ஈன்ற பசு ஒன்று கன்றினை நாவால் நக்கி கொடுத்துக் கொண்டிருந்தது. ஈன்று பல மணி நேரம் ஆகி ஏற்கெனவே நக்கிக் கொடுத்து அதன் மேல் இருந்த திரவங்களை எல்லாம் சுத்தம் செய்த பின்னும் மேலும் மேலும் நக்கிக் கொடுக்க, அக்கன்றின் உடலில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்ததைப் பற்றி பசு கவலைப்படவில்லை. பசுவிடமிருந்து கன்றினைக்   காப்பாற்ற முயன்றும் முடியாமல் போனது.

சகாதேவன், ஒரு மலையைப் பார்த்தார். அதன் மேலிருந்து  பெரிய பாறை ஒன்று உருண்டு வந்து கொண்டிருந்தது. அதன் வழியில் இருந்த பெரிய பெரிய  மரங்களை எல்லாம் தகர்த்துவிட்டு,  கடைசியில், கீழே ஒரு சின்ன செடியின் அருகே பாறை தகர்ந்து விழுந்தது. சகாதேவன் குழம்பிய மனநிலையில் அம்பினை எடுத்துக்கொண்டார்.

நால்வரும் கிருஷ்ணரிடம் திரும்பி வந்து அம்புகளை அவரின் காலடியில் வைத்துவிட்டு, தாங்கள் கண்டதைக் கூறி வணங்கி நின்றார்கள்.

“என்ன எல்லோரும் பார்த்தீர்களா? கலியுகம் எப்படி இருக்கப்போகிறது என்று புரிந்ததா?” என்று கேட்டார்.

நால்வரும் புரியவில்லை என்கிற பாணியில் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக்கொண்டே உதட்டைப் பிதுக்கினார்கள். “கிருஷ்ணா, எங்களுக்கு எதுவுமே புரியவில்லை. நீதான் விளக்க வேண்டும்” என்றார்கள்.

“கலியுகத்தில் மக்கள் வாயில் தேன் ஒழுகப் பேசுவார்கள். ஆனால், உள் மனதில் சுயநலம்தான் வியாபித்திருக்கும். இதில் சில சாமியார்களும் விதிவிலக்கு அல்ல. அடுத்து பல பணக்காரர்களுக்கு, அவர்களின் தேவைக்கு மேல் செல்வம் மிகுந்து இருக்கும். ஆனால், ஏழையாக இருப்பவனுக்கு உதவ அவர்களுக்கு மனம் வராது. மூன்றாவதாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் அதீத அன்பு காட்டுவார்கள். ஆனால், அவர்களை நல்வழியில் செலுத்தத் தவறுவார்கள். அவர்களின் அன்பே அதற்குத் தடையாக இருக்கும். கடைசியாக,  உருண்டு வந்த பாறைதான் மனித குலம். மரங்கள்தான் உறவு, சொத்து எல்லாமுமே. தான் அழியப் போகிறோம் என்பதை அறியாமல் உறவுகளை பகைத்துக் கொண்டும்,  செல்வங்களை அழித்தும் தானே தனது அழிவைத் தேடிக் கொள்வார்கள். அவர்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்கிற வகையைத்தான் அது காட்டுகிறது. கலியுகத்தில், சத்தியம், நியாயம், நேர்மை, தர்மம், அன்பு, ஈகை எல்லாமே நலிந்து விடும்” என்று விளக்கினார் கிருஷ்ண பகவான்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT