இந்தியாவின் புகழ் பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்று கேதார்தாத். இது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், மந்தாகினி ஆற்றின் ஓரமாக கார்வால் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இக்கோயில் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தற்போதுள்ள கேதார்நாத் கோயிலை, 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கராச்சாரியார் புரனமைத்ததாக நம்பப்படுகிறது.
இக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள அதிகப்படியான வானிலை மாற்றத்தால், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலேயே இத்தல ஈசனை தரிசிக்க மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குளிர்காலங்களில் இக்கோயிலில் உள்ள விக்ரகத்தை ‘உக்கிமாத்’ என்னும் இடத்தில் வைத்து, அடுத்த ஆறு மாதகளுக்கு வழிபாடு செய்வார்கள்.
இக்கோயிலுக்குச் செல்ல சரியான சாலை வசதி கிடையாது. மலையேற்றம் செய்தே பக்தர்கள் போக வேண்டியிருக்கும். இக்கோயிலை பாண்டவர்கள் கட்டியதாகக் கூறப்படுகிறது. இது பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று என்பதால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மேலும், இக்கோயில் 275 பாடல் பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தைப் பற்றி அப்பர், சேக்கிழார், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2013ம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில், கேதார்நாத் பகுதி மிகவும் சேதமடைந்தாலும், இந்த ஆலயத்துக்குப் பெரிதாக பாதிப்புகள் ஏற்படவில்லை. கோயிலுக்கு முன் அடித்து வரப்பட்ட ஒரு பெரிய பாறையினால் இந்தக் கோயிலுக்கு பெரிதாக எந்த சேதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
கேதார்நாத் கோயிலை ஆதியில் கட்டியவர்கள் யார், எப்பொழுது என்பது தெரியவில்லை. கேதார்நாத் என்றால், ‘வயல் நிலங்களின் கடவுள்’ என்று பொருள். பாண்டவர்கள் குருக்ஷேத்ர போரில் தங்களுக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்குவதற்காக சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரி ஆசி பெற வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், சிவபெருமான் அவர்களைக் காண விரும்பாமல் எருது வடிவம் எடுக்கிறார். அதனை பீமன் கவனித்து விடுகிறான். எருது வடிவில் இருப்பது சிவபெருமான்தான் என்பதை உணர்ந்து அந்த எருதின் கால்களைப் பிடிக்கிறார். அதனையடுத்து, சிவபெருமான் எருதின் ரூபத்தில் ஐந்து இடங்களில் காட்சி தருகிறார்.
எருதின் திமில் கேதர்நாத்தில் தோன்றியது, கைகள் துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், வயிறுப் பகுதி மத்தியமஹேஸ்வரிலும், முடி கல்பேஸ்வரிலும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து பாண்டவர்கள் இந்த ஐந்து இடங்களிலும் ஈசனுக்குக் கோயிலை கட்டுகிறார்கள். அந்த ஐந்து இடங்கள், ‘பஞ்ச கேதார்’ என்று அழைக்கப்படுகின்றன.
பஞ்ச கேதார் கோயில்களைக் கட்டிய பிறகு பாண்டவர்கள் சிவனை வழிபட்டு முக்தி பெற்றனர் என்பது புராணம். பஞ்ச கேதார் கோயில்கள் வட இந்தியக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. பஞ்ச கேதார் கோயில்களில் சிவ தரிசனம் முடித்த பிறகு விஷ்ணு கோயிலான பத்ரிநாத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அப்போதுதான் சிவபெருமானின் ஆசி முழுமையாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மகாபாரதத்தில் கேதார்நாத் பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லை. ஸ்கந்த புராணத்தில் கங்கை தோன்றிய கதையில் சிவபெருமான் அவரது ஜடா முடியிலிருந்து கங்கையை கேதார் என்னும் இடத்திலே விடுவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள 12 அடி உயர சிவலிங்கமானது முக்கோண வடிவில் உள்ளது. இந்த லிங்கம் இயற்கையாகவே உருவாகியிருக்கும் என்று நம்பப்படுகிறது. இத்தல ஈசனை வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்கி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை. இக்கோயில் சிவலிங்கத்தை பக்தர்கள் தங்கள் கைகளால் தொட்டு பூஜிக்கலாம், நெய்யால் அபிஷேகம் செய்யலாம். இந்தியாவிலுள்ள மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களில் கேதார்நாத்தும் ஒன்றாகும். வருடா வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தியா முழுவதும் இருந்து இங்கே வந்து சிவபெருமானை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.