வாரணாசி ‘கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. எண்ணற்ற கோயில்களை வாரணாசியில் தரிசித்து மகிழலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பல கோயில்களில், ‘துளசி மானஸ்’ கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கி.மு.500 முதல் கி.மு.100க்கும் இடைப்பட்ட காலத்தில் வால்மீகியால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட இராமாயணத்தை பலராலும் எளிதில் புரிந்துகொள்ள இயலவில்லை. எனவே, வால்மீகி எழுதிய இராமாயணக் காவியத்தை 16ம் நூற்றாண்டில் இந்தி மொழியின் வட்டார வழக்கு மொழியான அவதி மொழியில் கி.பி.1532 முதல் கி.பி.1623 வரை வாழ்ந்த மகான் துளசிதாசர், ‘ராமஸரிதமானஸ்’ என்ற தலைப்பில் இத்தலம் அமைந்துள்ள இந்த இடத்தில் அமர்ந்துதான் எழுதியதாகக் கூறப்படுகிறது. இந்தப் புனிதமான இடத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த இடத்தில் துளசி மானஸ் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. பிர்லா குடும்பத்தினர் 1964ல் இத்திருத்தலத்தை முழுக்க முழுக்க சலவைச் கற்களால் உருவாக்கினார்கள்.
வாரணாசியின் முக்கியமான பகுதியில் அமைந்திருக்கும் இந்த துளசி மானஸ் கோயில் சேத் ரத்தன் லால் சுரேகாவால் கட்டப்பட்டது. அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனால் 29 நவம்பர் 1964 அன்று இத்தலம் திறந்து வைக்கப்பட்டது.
பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலின் உள்ளே மூன்று சன்னிதிகள் உள்ளன. முதல் சன்னிதியில் அன்னபூரணி மற்றும் சிவபெருமான் திரு உருவங்களும் மையத்தில் அமைந்துள்ள சன்னிதியில் ஸ்ரீலட்சுமணன், ஸ்ரீஇராமபிரான், சீதாதேவி மற்றும் ஆஞ்சனேயர் முதலானோரும், அடுத்ததாக உள்ள சன்னிதியில் மகாலஷ்மியும் ஸ்ரீசத்தியநாராயணரும் காட்சி அளிக்கிறார்கள். அனைத்து மூல ரூபங்களும் பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டவை.
கோயிலின் முழு சுவர்களிலும் ராமஸரிதமானஸ், அதாவது இராமாயணம் முழுவதையும் மிக அழகான முறையில் பொறித்துள்ளார்கள். கோயிலின் மேல்தளத்தில் துளசிதாசரின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதல் தளத்தில் அனைத்து மொழிகளிலும் உள்ள இராமாயணத்தின் அரிய பிரதிகள் உள்ளடக்கிய நூலகம் உள்ளது. மேலும், முதல் தளத்தில் ஸ்ரீகண்ணன் தொடர்பான பல காட்சிகள் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வேறெங்கும் காண இயலாத பிரம்மிப்பூட்டும் அமைப்பாகும். துளசி மானஸ் கோயிலில் அன்னக்கூட் உத்ஸவம், கிருஷ்ண ஜயந்தி மற்றும் ஸ்ரீராமநவமி முதலான விழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
தரிசன நேரம்: காலை 5.30 முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 3.30 முதல் இரவு 9 மணி வரை.
அமைவிடம்: வாரணாசியின் முக்கிய ஸ்தலமான சங்கட் மோச்சன் சாலைக்கு சற்று தொலைவில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் வடக்கு திசையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. ஆட்டோவின் மூலம் இத்தலத்தை வாரணாசியின் எப்பகுதியில் இருந்தும் எளிதில் அடையலாம்.