சிவபெருமான் கோபியர் பெண்ணாக மாறி ஸ்ரீ கிருஷ்ணரை காண வந்ததால் அவருக்கு ‘கோபேஸ்வர்’ என்ற பெயர் உண்டு. அப்படி ஸ்ரீ கிருஷ்ணரும், சிவபெருமானும் சந்தித்துக்கொண்ட இடம்தான், கோபேஸ்வர மஹாதேவ் கோயில். இந்நிகழ்வு குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கோபேஸ்வர மஹாதேவ் கோயில் பிருந்தாவனத்தில் உள்ள பழைமையான கோயில்களில் ஒன்றாகும். இது 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் யமுனை நதிக்கரையோரம் வன்ஸிவாட்டில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தை கோபேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு வணங்குகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணருடைய கொள்ளுப் பெயரனான விரஜனபா என்பவரே இந்தக் கோயிலில் உள்ள கோபேஸ்வரர் லிங்கத்தை நிறுவினார் என்று சொல்லப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் ஆதிக்கம் உள்ள பிருந்தாவனத்தில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
ஒரு நாள் பௌர்ணமி இரவன்று ஸ்ரீ கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்தார். அந்த இசை இமயமலையில் ஆழ்ந்த தியானதில் இருந்த சிவபெருமானை சென்றடைந்தது. அந்த இசையின் இனிமையில் மயங்கிய சிவபெருமான் அந்த இசையைத் தேடி வந்தார். அப்போது பிருந்தாவனத்திற்கு வரும்போது ஒரு கோபியர் சிவபெருமானை தடுத்து நிறுத்தி,
‘உள்ளே ஸ்ரீ கிருஷ்ணரின் ராசாலீலா நடைபெறுகிறது. கோபியர் ஸ்ரீ கிருஷ்ணருடைய புல்லாங்குழல் இசைக்கு நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறுகிறார். சிவபெருமானே ஒரு தாண்டவமூர்த்தியல்லவா? இதைக் கேட்டதும் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது. ‘நானும் இதில் கலந்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார். ‘இங்கு வேறு எந்த ஆணுக்கும் இடமில்லை. இங்கு ஒரே ஒரு ஆண் மட்டுமே இருக்க முடியும், அது ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவர்தான். நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரை உணர வேண்டும் என்றால் பெண்ணாக இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி’ என்று கூறிவிடுகிறாள் அந்த கோபி.
சிவபெருமான் அங்கிருந்த யமுனை நதியிலே மூழ்கி எழ, அழகிய பெண்ணுருவம் எடுத்து ராசலீலாவில் கலந்துக் கொள்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் தீவிர சிவபக்தர் என்பதால், அங்கு வந்திருப்பது சிவபெருமான்தான் என்பதை உணர்ந்துக்கொண்டு, அவரை வரவேற்று அவருக்கு ‘கோபேஸ்வர்’ என்ற பெயரும் வைப்பார். பிறகென்ன, ஸ்ரீ கிருஷ்ணருடைய புல்லாங்குழல் இசைக்கு தன்னை மறந்து ஆடி மகிழ்கிறார் பெண்ணுருவில் இருக்கும் சிவபெருமான். இத்தகைய அதிசய வரலாற்றைக் கொண்ட கோயிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.