மகர சங்கராந்தி தினத்தன்று பந்தள ராஜனின் காணிக்கையாக மூன்று பெட்டிகளில் திருவாபரணங்கள் சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுவது வழக்கம். இந்தத் திருவாபரணப் பெட்டியை கொண்டுவரும் சமயம், வானில் கருடன் தொடர்ந்து பறந்து வருவது விசேஷம்.
ஐயப்பனின் சன்னிதானத்தை அந்தப் பெட்டிகள் அடைந்ததும் கருடன் மூன்று முறை வலம் வந்து பின் பறந்து மறைந்து விடுவது வழக்கம். இந்த மூன்று பெட்டிகளில் ஒன்று ஆபரணப் பெட்டி, இன்னொன்று வெள்ளிப் பெட்டி, மூன்றாவது கொடிப் பெட்டி. ஆபரணப் பெட்டியில்தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.
முதல் ஆபரணப் பெட்டியில் இருக்கும் திருவாபரணங்கள்: திருமுக மண்டலம் எனப்படும் முகக் கவசம், பூரண, புஷ்கலா தேவியருடைய உருவங்கள், பெரிய வாள், சிறிய வாள். இரண்டு யானை உருவங்கள், கடுவா எனப்படும் புலி உருவம், வில்வ மாலை, சரப்பொளி மாலை, நவரத்தின மாலை, வெள்ளி கட்டிய வலம்புரிச் சங்கு ஆகியவை.
இரண்டாவது வெள்ளி பெட்டியில் தங்கக் குடம், பூஜை பாத்திரங்கள்.
மூன்றாவது கொடிப் பெட்டியில் யானைப் பட்டம், தலப்பாறை மலை, மலையின் கொடிகள் ஆகியவை இருக்கும்.
ஆபரணப் பெட்டி தவிர்த்து, மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைபுறத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, எழுந்தளிப்பு எனும் நிகழ்ச்சியில் யானைக்கு அந்த பட்டத்தை சாத்தி ஊர்வலங்கள் நடைபெறும்.
இந்தத் திருவாபரணப் பெட்டி பம்பை, நீலிமலை வழியாக சன்னிதானத்தை மகர சங்கராந்தி அன்று அடையும். திருவாபரணத்தை சுமந்து சென்று 18 படிகளில் ஏறி சுவாமிக்கு அணிவிப்பார்கள். ஐயப்பன் இன்று ராஜ கோலத்தில் காட்சி தருவார். அந்தக் கோலத்தில் ஐயனுக்கு தீபாராதனை முடிந்ததும் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.
வாழ்வில் விலை மதிக்க முடியாத ஜோதி தரிசனம், திருவாபரண தரிசனத்தை காணக் கண்கோடி வேண்டும். மகர சங்கராந்தி தினத்தன்று ஜோதி தரிசனம் கண்டு ஐயனின் அருளைப் பெறுவோம்.