நாம் வாழும் இந்த உலகம் எல்லையற்றது. பல அதிசயங்கள் நிறைந்தது. உலகத்தில் நாம் கண்களால் காண்பவை மட்டும்தான் இருப்பதாக யாரும் நினைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் ஒன்பது விலங்குகளின் கலவையே நவகுஞ்சரம் என்பதாகும்.
ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் இயற்றிய மகாபாரதத்தில் வரும் ஒருவிநோதமான ஒன்பது விலங்குகள் கலந்த கலவையே நவகுஞ்சரம் என்று அழைக்கப்படுகிறது. நவ என்பது ஒன்பது என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கை இவை அனைத்தும் இணைந்து ஒரு உயிரினமானால், அது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த விநோதமான கற்பனை உயிரினமே நவகுஞ்சரம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
அர்ஜுனன் மலை ஒன்றின் மீது தவமியற்றிக் கொண்டிருந்த வேளையில், ஸ்ரீகிருஷ்ணர் நவகுஞ்சரமாக உருவெடுத்து அர்ஜுனனின் முன்னால் தோன்றினார். உள்ளுணர்வு ஏதோ சொல்ல அர்ஜுனன் தவம் கலைந்த கண் விழித்துப் பார்த்தபோது எதிரில் நின்றிருந்த நவகுஞ்சரத்தைப் பார்த்துத் திகைத்தான். அடுத்ததாக, நவகுஞ்சரத்தின் கையில் இருந்த தாமரைப் பூவினைப் பார்த்தான்.
அக்கணமே, ‘மனிதர்களின் எண்ணமானது ஒரு வரையறைக்கு உட்பட்டது. ஆனால், இந்த உலகமோ எல்லையற்றது’ என்று முன்னர் ஒருசமயம் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னிடம் கூறிய வார்த்தைகள் அவனுக்கு இப்போது ஞாபகத்திற்கு வந்தன. தான் இதுவரை பார்த்திராத இந்த உயிரினமானது இந்த உலகத்தில் எங்காவது இருக்கலாம் என்றும், தன்னை சோதிப்பதற்காகவே ஸ்ரீ கிருஷ்ணர் இத்தகைய விநோத உருவம் தாங்கி காட்சி தருகிறார் என்பதை உணர்ந்து கொண்ட அர்ஜுனன், தான் கையில் எடுத்த வில்லை கீழே போட்டு நவகுஞ்சரத்தை வணங்கினான்.
நவகுஞ்சரம் கிருஷ்ண பகவானின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறது. ஒடிசாவில் விளையாடப்படும், ‘கஞ்சிபா’ என்ற சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும், அர்ஜுனன் மந்திரியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் பாரம்பரிய ஓவிய பாணியான, ‘படா சித்ரா’ ஓவிய முறையில் நவகுஞ்சரமானது ஓவியமாக பல வகைகளில் வரையப்படுகிறது.