திருச்சியில் இருந்து தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் சிறிய மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில். மிருகண்டு முனிவர் புத்திரப் பேறு வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், “உனக்கு ஞானமற்ற அங்கஹீனமான நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? அல்லது அழகும் அறிவும் மிக்க பதினாறு வயது வரை மட்டுமே ஜீவித்திருக்கும் மகன் வேண்டுமா?” எனக் கேட்டார்.
குழம்பிப்போன மிருகண்டு முனிவர், ‘தனக்கு ஞான புத்திரனே வேண்டும்’ என வேண்டினார். அதன்படியே மகனும் பிறந்தான். அவனுக்கு மார்கண்டேயன் என பெயரிட்டனர். 16 வயது வந்தது. எமன் மார்கண்டேயனை துரத்தினான். மார்கண்டேயன் பல க்ஷேத்ரங்களுக்கும் சென்று ஓடி ஒளிந்தான். இறுதியாக, உய்யங்கொண்டான் திருமலைக்கு வந்து, தன்னை எமன் துரத்துவதை ஈசனிடம் முறையிட்டு வேண்டினார். இறைவன் அந்தச் சிறுவனை பாதுகாத்தார்.
மார்கண்டேயருக்கு ஜீவன் அளித்ததால் இத்தல ஈசன் உஜ்ஜீவநாதர் எனப்படுகிறார். எண்ணிய விருப்பங்களை ஈடேற்றுவதால் இவருக்கு ‘கற்பகநாதன்’ என்றும் பெயர் உண்டு. இத்தலத்தில் ஈசன் சுயம்பு லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் ஜேஷ்டா தேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது. இவரை மூதேவி என்றும் அழைப்பர். மகாலக்ஷ்மியின் சகோதரியான இவளை பார்த்தாலே எந்த காரியமும் நடக்காது என்பர். இது தவறான கருத்தாகும். இந்த தேவியை தரிசித்தால் விபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் நம்மை விழிப்புடன் இருக்கவும் செய்வாள்.
இந்த தேவி ஒரு குழந்தையை வலது கையில் ஏந்தி காட்சி தருகிறாள். அந்தக் குழந்தைக்கு மாட்டின் முகம் இருப்பதால் இவரை, ‘மாடன்’ என்று சொல்கிறார்கள். மறுபுறத்தில் அழகிய பெண்ணை ஏந்தி இருக்கிறாள் இவளை வாக்தேவதை என்கிறார்கள். இந்த மலைக்கோயில் ஓம் வடிவில் அமைந்துள்ளது. உஜ்ஜீவநாதர் மற்றும் அஞ்சனாட்சி அம்பிகை இருவரும் மேற்கு நோக்கி காட்சி தருகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க இக்கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்.
தை மாதத்தில் ஒரு நாள் மாலை வேளையில் சிவலிங்கம் மற்றும் அஞ்சனாட்சி அம்பிகையின் மீது சூரிய ஒளி விழும். அந்நாளில் இருந்து 90 நாட்களுக்கு ஒரு முறை என வருடத்தில் நான்கு முறை இங்கு சூரிய பூஜை நடைபெறுகிறது.
இந்த மலைக்கோயிலில் தீராத பிரச்னை உள்ளவர்கள் மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் அமர்ந்து சிந்தித்தால் தீராத பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.