ஸ்ரீராமர் அயோத்தியில் பட்டாபிஷேகம் செய்துக் கொள்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கோயிலில்தான் முதலில் பட்டாபிஷேகம் செய்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கோயில் சேலத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அயோத்தியப்பட்டிணம் என்கிற ஊரில் அமைந்திருக்கும் அருள்மிக கோதண்டராம சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலை, ‘பட்டாபிராமர் கோயில்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கோயில் 108 அபிமான க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும். இந்தக் கோயிலைக் கட்டியவர் பரத்வாஜ முனிவர் என்றும், கோயிலின் மூலஸ்தானத்தை அதியமான் கட்டினார் என்றும் இக்கோயிலின் ராஜகோபுரத்தை திருமலை நாயக்கர் கட்டினார் என்றும் கூறப்படுகிறது.
இலங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு ஸ்ரீராமர் அயோத்திக்கு புறப்பட்டு செல்வதற்கு முன்பு பரத்வாஜ முனிவரை காணச் செல்கிறார். பரத்வாஜ முனிவருக்கு ஸ்ரீராமரின் பட்டாபிஷேகத்தைக் காண வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதை ராமபிரானிடம் அவர் தெரிவிக்கிறார். இங்கே ஸ்ரீராமரின் பட்டாபிஷேகத்தைத் தொடங்கி அயோத்தியில் சென்று முடிக்கும்படி கேட்டுக்கொள்கிறார்.
அவரது வேண்டுதலுக்கு இணங்கி ஸ்ரீராமர் இங்கே பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சித் தருவதாகச் சொல்கிறார்கள். அதனாலேதான் இந்த ஊரின் பெயர் அயோத்தியப்பட்டிணம் என்று சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு பரத்வாஜ முனிவர் இவ்விடத்தில் ஸ்ரீராமபிரானுக்கு ஒரு கோயிலைக் கட்டியிருக்கிறார்.
இக்கோயிலை பரத்வாஜ முனிவர் மட்டுமின்றி, வசிஷ்டர், வால்மீகி ஆகியோரும் சென்று வணங்கியிருக்கிறார்கள். இந்தக் கோயிலில் ஸ்ரீராமரின் பாதச்சுவடுகள் இன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வடக்கே எவ்வாறு அயோத்தி புனிதமாகக் கருதப்படுகிறதோ அதேபோல, இக்கோயில் தென்னகத்தில் புனிதமாகக் கருதப்படுகிறது. அதனாலேயே இக்கோயிலை ‘தென்னகத்து அயோத்தி’ என்று அழைக்கிறார்கள். இக்கோயிலின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்ரீராமர் இங்கே அமர்ந்த நிலையில் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தருகிறார்.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, ஆடிப்பூரம் ஆகிய விசேஷங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் பிரம்மோத்ஸவ விழா சித்திரை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமிக்க இக்கோயிலுக்குச் சென்று ஸ்ரீராமரை தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.