Madurai Sri Meenakshi https://mahizhmathi.blogspot.com
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் தோளில் கிளி இருப்பது ஏன் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

துரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன்தான். மக்களைக் காத்தருள அன்னை மீனாட்சி எடுத்த அவதாரம் மிகவும் வித்தியாசமானது, தனித்துவம் நிறைந்தது. மானிட உருவில் ஒரு குடும்பத் தலைவியாக பொறுப்பேற்று, அதேசமயம் ஒரு பேரரசியாக இருந்து தம் மக்கள் அனைவருடைய உள்ளத்தையும் தனது கருணை கடாட்சத்தால் ஆண்டு வழிகாட்டியவள் மதுரை மீனாட்சி.

மீன் போன்ற அழகியக் கண்களை உடைய தெய்வப்பெண் நின்று நிகழ்த்திய ஆட்சி என அவளுடைய ஆளுமையை முன்வைத்தே மீனாட்சி என்ற பெயர் அன்னைக்கு ஏற்பட்டது. தான் இடும் முட்டைகளை எட்ட நின்று தனது கண் பார்வை திறத்தினாலேயே குஞ்சுகளை தோன்றச் செய்து, தனது பார்வை ஆற்றலினாலேயே  அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பது மீன்களின் இயல்பு. அதேபோன்று மீனாட்சி அம்மன் தனது அருட்கருணை திருக்கண் பார்வையினாலே தமது பக்தர்கள் அனைவரையும் தோற்றுவித்து, வளர்த்து, காத்து வருகிறாள். அன்னையின் இந்த அருட்செயல் காரணமாகவும் மீனாட்சி என்ற பெயர் ஏற்பட்டது.

மதுரையிலே அம்மையும் அப்பனும் குடி கொண்டிருக்கும் திருக்கோயிலை, சுந்தரேசுவரர் மீனாட்சி ஆலயம் என்று யாரும் கூறுவதில்லை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் எனத்தான் பக்தி பரவசத்துடன் அழைக்கின்றனர். சக்தியின் அருள் இயக்கத்தை வைத்துத்தான் சிவத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும். இந்த ஆன்மிகத் தத்துவத்தைத்தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிணைப்பிலே காண முடிகிறது.

கருவறையிலே அன்னை மீனாட்சி இரண்டு திருக்கரங்களுடன் கருணை பொங்கும் அருட்பார்வையுடன் காணப்படுகிறாள். சாதாரணமாக சிவாலயங்களில் அப்பனின் திருவுருவத்தை வழிபட்ட பிறகுதான் அம்மையை தரிசிக்கச் செல்வது வழக்கம். இங்கே மீனாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு அருளாசியை பெற்ற பிறகுதான் சுந்தரேசுவரர் சன்னிதி சென்று அவரை வழிபடுவது வழக்கத்தில் இருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கோலத்தை நினைத்தாலே அவரது வலது தோளில் இருக்கும் கிளியின் நினைவு நமக்கு வந்துவிடும். அன்னை மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம். அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக் கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்கிறது.

அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொண்டு இந்தக் கிளிதான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்குமாம். அதனால்தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்த கிளியின் மீதும் பக்தி கொண்டு இருக்கிறார்கள். உங்கள் வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி வையுங்கள். அந்தக் கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்துச் சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும். இனி மதுரை சென்றால் அன்னை மீனாட்சி தோளில் அமர்ந்திருக்கும் கிளியையும் தரிசிக்க மறந்து விடாதீர்கள்.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT