ஆன்மிகத்தில் உள்ள சில பழக்க வழக்கங்கள் நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த வரம். ஆனால், அதை நாம் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. சில சமயங்களில் நல்ல விஷயங்களைக் கூட செய்ய தவறுகிறோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் கோயிலுக்குச் சென்றால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டும் என்ற வழக்கம். ஏன் அப்படிச் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தினமும் கோயிலுக்குச் செல்வது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்குச் சென்று விட்டு வருவது என்பது பலரது வழக்கம். ஆனால், கோயிலுக்குச் சென்றால் என்ன செய்ய வேண்டும், எதற்காக கோயிலுக்குச் செல்கிறோம் என்பது பற்றி தெரியாமல் பலரும் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். சுவாமி தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்த விட்டு, சுவாமி அருகில் சென்றதும் இறைவனை கண் குளிர தரிசனம் செய்யாமல், கண்களை மூடிக்கொண்டு தியான நிலைக்கு பலர் சென்று விடுகின்றனர். இது மிகவும் தவறு.
இதேபோல் கோயிலில், குறிப்பாக பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, உட்கார்ந்தால் மகாலட்சுமி அங்கேயே தங்கி விடுவாள். நமக்கு அதிர்ஷ்டம் வராது என பலரும் தவறாக நினைத்து, கோயிலில் அமராமல் நேராக வீட்டுக்கு வந்து விடுவார்கள். இது முறையான பிரார்த்தனை கிடையாது. இப்படி வந்து விடுவதால் நம்முடைய பிரார்த்தனையும் பலனற்றுப் போகும்.
உலகம் முழுவதும் ஏராளமான கோயில்கள் உள்ளன. இவற்றிற்கு தினமும் ஆயிரம் முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்காக சென்று வருகிறார்கள். அப்படி கோயிலுக்குச் செல்பவர்கள் சுவாமி தரிசனம் முடித்த பிறகு, சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து விட்டு புறப்படும் வழக்கம் உள்ளது. காலம் காலமாக இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. கோயிலுக்குச் சென்றால் சிறிது நேரம் உட்காந்து விட்டுதான் வர வேண்டும் என பெரியோர்களும் சொல்வார்கள்.
கோயிலுக்குச் செல்வது சுவாமி தரிசனம் செய்வதற்கு. அதை முடித்த பிறகு அப்படியே வீட்டிற்குத் திரும்பி வராமல், எதற்காக சிறிது நேரமாவது அங்குள்ள தரையிலோ அல்லது படிக்கட்டுகளிலோ உட்கார வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால், வெகு சிலருக்கு மட்டுமே இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றித் தெரியும். இந்தக் காரணம் தெரியாத பலர், சுவாமி தரிசனம் செய்த பிறகு கோயிலில் அமர்ந்து வீண் கதைகள் பேசி பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர்.
தரிசனம் செய்யும் முறை: கோயிலுக்குச் சென்றால் அமைதியை கடைபிடித்து, இறை சிந்தனையுடன் மட்டும் இருக்க வேண்டும். சுவாமி தரிசனம் முடித்த பிறகு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு, அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர வேண்டும். நாம் ஏதாவது குழப்பம் மற்றும் பிரச்னையிலிருந்து நிவாரணம் கிடைக்க கோயிலுக்குச் சென்றிருப்போம். அப்படி நினைத்துச் சென்ற பிரச்னை தொடர்பாக ஏதாவது கேள்வி உங்கள் மனதில் இருந்தால் ஸ்லோகத்தை சொல்லி விட்டு நீங்கள் உட்காந்திருக்கும்போது அதற்கான பதில் தானாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இனியாவது, கோயிலுக்குச் சென்றால் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சிறிது நேரம் கோயிலில் அமைதியாக அமர்ந்து பின் வீட்டுக்குச் செல்வோம்.