கர்நாடக மாநிலத்தில் வரதப்பா எனும் ஒரு வணிகரின் புதல்வர் சீனிவாசர். தனது தந்தையை பின்பற்றி வாணிகத்தில் ஈடுபட்டு வந்தார். சீனிவாசரின் கடைக்கு ஒரு நாள் ஏழை பிராமணர் ஒருவர் வந்து தன் மகனுக்கு உபநயனம் செய்விக்க தமக்கு சிறிது பணத்தைத் தந்து உதவும்படி சீனிவாசரிடம் வேண்டி நின்றார். சீனிவாசரோ மகாகருமி. அவர் அந்த பிராமணருக்கு பணம் தராமல் கடுஞ்சொற்களைக் கூறி அனுப்பி விட்டார்.
சீனிவாசரிடம் அவமானப்பட்ட அந்த ஏழை பிராமணர் அங்கிருந்து புறப்பட்டு சீனிவாசரின் வீட்டிற்குச் சென்றார். அவரது மனைவி சரஸ்வதியிடம் தனது மகனுக்கு உபநயனம் செய்விக்க பணம் தந்து உதவுமாறு வேண்டி நின்றார். சரஸ்வதியோ சீனிவாசரின் குணத்திற்கு நேரெதிரானவர். மிகுந்த தாராள மனம் படைத்தவர். ஏழை பிராமணரின் ஏழ்மையைக் கண்டு மனம் இரங்கினார். தனது விலையுயர்ந்த மூக்குத்தியைக் கழற்றி அந்த பிராமணரிடம் தந்தார். அந்த மூக்குத்தியை விற்று தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சொன்னார். அந்த பிராமணரும் மனதார சரஸ்வதியை வாழ்த்திவிட்டு மூக்குத்தியை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
சரஸ்வதியிடமிருந்து பெற்ற மூக்குத்தியை கொண்டு சென்ற அந்த பிராமணர் சீனிவாசரை சந்தித்து அந்த மூக்குத்தியைத் தந்து அதற்கு ஈடாக பணம் தருமாறு கேட்டார். அந்த மூக்குத்தியைப் பார்த்ததும் அது தனது மனைவி சரஸ்வதியின் மூக்குத்தி என்பதை சீனிவாசர் புரிந்து கொண்டார். அந்த பிராமணரை தமது கடையில் இருக்கச் சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றார். மனைவி சரஸ்வதியை அழைத்து மூக்குத்தியை கொண்டு வரச் சொன்னார். அச்சமடைந்த சரஸ்வதி சட்டென ஒரு முடிவிற்கு வந்தார். தன் கணவருக்கு உண்மை தெரிந்தால் கோபப்படுவார் என்பதை உணர்ந்த அவர் ஒரு கிண்ணத்தில் விஷத்தை ஊற்றி அதை பூஜை அறைக்குள் கொண்டு சென்று சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு விஷத்தை குடிக்க ஆயத்தமானார். தனது மனைவிக்குத் தெரியாமல் இவற்றை மறைந்து நின்று கண்காணித்துக் கொண்டிருந்தார் சீனிவாசர்.
அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சரஸ்வதி விஷத்தை குடிக்க ஆயத்தமானபோது அந்தக் கிண்ணத்தில் அவரது மூக்குத்தி இருந்தது. மறைந்திருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசர் ஆச்சரியத்தில் செய்வதறியாது திகைத்து நின்றார். சரஸ்வதி கொண்டு வந்து கொடுத்த அந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு தனது கடைக்குச் சென்றார். ஆனால், அந்த பிராமணரை அங்கே காணவில்லை.
இந்த நிகழ்ச்சி சீனிவாசரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அவரது ஞானக்கண் திறந்தது. இறைவனே பிராமணர் உருவத்தில் தம்மை நாடி வந்து தமது அறியாமையை அகற்றியதாக உணர்ந்தார் சீனிவாசர்.
தம்மிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். பின்னர் தனது மனைவி சரஸ்வதி மற்றும் நான்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஒரு முனிவரின் மடத்திற்குச் சென்றார். அது வியாச தீர்த்தர் எனும் தவயோகியின் மடம். வியாச தீர்த்தர் சீனிவாசருக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார். அவரது பெயரையும் புரந்தரதாசர் என மாற்றினார். அன்றிலிருந்து சீனுவாசர் புரந்தரதாசர் என அனைவராலும் அறியப்பட்டார்.
புரந்தரதாசர் அதிகாலையில் எழுந்து தமது மனைவி குழந்தைகளுடன் தம்பூராவை மீட்டியபடி இனிய குரலில் பக்திப்பாடல்களை பாடி பஜனை செய்யும் வழக்கத்தை மேற்கொண்டார். வீடு வீடாகச் சென்று பிச்சை ஏற்றார். செல்வந்தராய் இருந்த புரந்தரதாசர் அனைத்து செல்வங்களையும் துறந்து வீடு வீடாகச் சென்று பிச்சை ஏற்பதைக் கண்ட மக்கள் அதிசயப்பட்டார்கள். தம்மிடம் இருந்த செல்வங்கள் அனைத்தையும் தானமாக தந்ததுமில்லாமல் பிச்சையில் கிடைக்கும் உணவையும் அவர் எளிய மக்களுக்கு அளித்து மிக உன்னதமான ஒரு பிறவியாய் தன்னை மாற்றிக்கொண்டார்.
புரந்தரதாசர் ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினார். எளிமையான மொழி நடையில் அவரது கீர்த்தனைகள் அமைந்திருந்தன.
ஆரம்ப காலங்களில் செல்வத்தின் மீது மிகுந்த பற்று வைத்திருந்த புரந்தரதாசர் தீட்சை பெற்ற பின்னர் எதன் மீதும் பற்று வைக்கவில்லை. அடுத்த நாளைப் பற்றி அவர் நினைப்பதேயில்லை. தம்மை நாடி வருபவர்களுக்கு தம்மிடம் இருப்பதைக் கொடுத்து விடுவார்.
‘கடன் வாங்காதே… கருமியாய் இராதே… திருப்தியுடன் வாழ்’ இதுவே புரந்தரதாசர் நமக்கு அளித்துவிட்டுச் சென்ற உன்னதமான செய்தி.