ஆன்மிகம்

பகவான் பலத்தின் முன் அனைத்தும் சாதாரணம்!

ஆர்.ஜெயலட்சுமி

ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் இருந்தபோது சவுகந்தி மலரின் நறுமணம் அவரது நாசியை தழுவியது. ‘இந்த மலர் துவாரகையில் கிடையாதே. இது குபேரனின் பட்டணமான அழகாபுரியில் அல்லவா இருக்கிறது? அங்குள்ள மலரின் மணம் பூலோகம் வரை வருகிறது என்றால், இங்கே அந்த மலர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இவற்றைப் பறித்து வர வேண்டும்’ என்று எண்ணத்தில் கருடனை அழைத்தார்.

இந்த சமயத்தில் கருடனுக்கும் சக்கரத்துக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘நீ பகவானை சுமப்பவன். பகவானே என்னை சுமக்கிறார்’ என்று பெருமை பேசியது சக்கரம். ‘என்னைப் போல விரைவாக செல்பவர் யார் உண்டு? ஆதிமூலமே என கதறிய யானையை முதலையிடம் இருந்து காக்க பரமாத்மா என் மீது ஏறிதான் வந்தார். நான் மின்னல் வேகத்தில் பறந்து சென்று அந்த இடத்தை அடைந்ததால்தான் அந்த யானையை மீட்க முடிந்தது. இன்னும் எத்தனையோ சாகசங்கள் புரிந்துள்ளேன்’ என்றது கருடன்.

இவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார் ஸ்ரீகிருஷ்ணர். கருடனிடம், ‘நீ குபேர பட்டணம் சென்று சவுகந்தி மலர்களைப் பறித்து வா’ என்றார். ‘இவ்வளவுதானே விரைவில் சென்று வருகிறேன்’ என்ற கருடன், குபேர லோகம் சென்று, அம்மலர்களை பறித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தத் தோட்டத்தைப் பாதுகாத்து வந்த அனுமன், ‘ஏய் நீ யார்? அனுமதி இன்றி மலர் பறிக்கிறாயே’ என்றதும், கருடன் ஆணவமாக, ‘பரமாத்மா சொல்லித்தான் நான் வந்துள்ளேன். ஒழுங்காக போய்விடு. உலகில் பூக்கும் எல்லா பூக்களும் பரமாத்மாவுக்கே சொந்தம்’ என்றது.

அதைக் கேட்ட அனுமன், ‘ஸ்ரீராமன் மட்டுமே பரமாத்மா. அவரை தவிர வேறு யாரையும் எனக்குத் தெரியாது. பூவை கீழே போட்டுவிட்டு ஓடிவிடு. இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன்’ என மிரட்டினார் அனுமன். கருடன் அவரைக் கண்டுகொள்ளாமல் பூப்பறிக்க, கருடனைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்தார் அனுமன். இது ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியாதா என்ன? இந்த லீலையை நிகழ்த்துபவரே அவர்தானே.

அதைத் தொடர்ந்து சக்கரத்தை அழைத்து, ‘நீ போய் அந்த மலர்களைப் பறித்து வா’ என்றார்.

‘நொடியில் வருகிறேன்’ என்ற சக்கரம், மின்னல் வேகத்தில் குபேர லோகத்தை அடைந்து, அங்கிருந்த அனுமனை மிரட்டியது. ‘கருடனை விடுகிறாயா? இல்லை உன் தலையை சீவட்டுமா’ என்று ஆணவத்துடன் பேசியது. அனுமன் சக்கரத்தையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்தார். இரண்டு பேரும் இறுக்கம் தாங்காமல் கதறினர். ‘நாங்கள் இருவரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆட்கள். எங்களை விட்டு விடு’ என்று கெஞ்சின. அனுமன் அதை கண்டுகொள்ளாமல், ‘யாருடா அந்தக் கிருஷ்ணன். பார்த்து விடுகிறேன்’ என்று துவாரகைக்கு வந்தார். கிருஷ்ணரிடம், ‘இந்த கருடன் தோட்டக் காவலான என்னிடம் அனுமதி பெறாமல் பூப்பறித்தான். அவனை நான் பிடித்து வைத்த வேளையில், இந்த சக்கரம் தேவையில்லாமல் தொந்தரவு செய்தது’ என்றார்.

இதற்கு மேலும் சோதிக்க விரும்பாத ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீராமனாக உருமாறி அனுமனுக்குக் காட்சி அளித்தார். ஸ்ரீ கிருஷ்ணரும், ஸ்ரீராமனும் ஒன்றே என்ற உண்மையை புரிந்து கொண்ட அனுமன், இருவரையும் மன்னித்து ஸ்ரீ கிருஷ்ணரை பணிந்து வணங்கினார். ஆணவம் அழிந்த கருடனும், சக்கரமும் தங்களின் பலம் கடவுளின் பலத்தின் முன் சாதாரணம் என்பதை உணர்ந்தனர்.

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT