கடவுள் பக்தியில் பல்வேறு புதிய வழிபாடுகள் தோன்றிய பிறகும், பாரம்பரிய வழிபாடுகள் என்றும் மறைவதில்லை. அவ்வகையில் தாய்லாந்தில் இருக்கும் சில வண்ண ஆலயங்களைத் தங்கள் பார்வைக்கு விருந்தாக்குகிறோம்.
உலகில் உள்ள மக்கள் அனைவரும் இறைவழிபாட்டில் அதிக நம்பிக்கை உள்ளவர்கள் தான். வழிபடும் விதம்தான் வேறானதே தவிர நம்பிக்கை ஒன்று தான். அவ்வகையில் தாய்லாந்தில் இருக்கும் வெள்ளைக் கோயில், கருப்புக் கோயில் மற்றும் சிவப்புக் கோயில் ஆகிய வண்ண ஆலயங்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனிச் சிறப்புகள் உள்ளன.
1. வெள்ளைக் கோயில்:
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள முயாங் மாவட்டத்தில் பா ஓ டான் சாய் எனுமிடத்தில் “வாட் ரோச் குன்” என்ற புத்தமதக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முழுவதும் வெண்மை நிறத்தில் காட்சி அளிப்பதால் வெள்ளைக் கோயில் என அழைக்கப்படுகிறது. மாஸ்டர் சலெர்ம்சாய் கோசிட்பிபாட் என்பவர் இக்கோயிலை உருவாக்கினார். வெள்ளைக் கோயிலின் சிறப்பான கட்டடக்கலையும், வெண்மை நிறமும் உலகம் முழுவதும் இருக்கும் மக்களை வெகுவாக கவர்கிறது. இந்தக் கோயிலில் நுழைவதற்கு முன் ஒரு சிறிய ஏரி மீது பாலம் போன்ற அமைப்பைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். இதன் இருபுறமும் நூற்றுக்கணக்கில் கைகளும், மனித தலைகளும் நடந்து செல்பவர்களை பிடித்து இழுப்பது போல காட்சி அளிக்கும். இங்கு செல்லும் போது தீய குணங்களும், பேராசைகளும் இல்லாமல் போகும். பாலத்தைக் கடந்த பின்பு அடுத்து வரும் கட்டடம் “சொர்க்கத்தின் வாசல்” என்று அழைக்கப்படுகிறது. இதன் உள்ளே புத்தரின் சிலையை நாம் கண்டு ரசிக்கலாம்.
2. கருப்புக் கோயில்:
தாய்லாந்தின் சியாங் ராய் எனுமிடத்தில் இருக்கும் பிளாக் ஹவுஸ், கோயில் போன்று காட்சி அளிப்பதால் கருப்புக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இதன் முகப்பில் புத்தர் சிலை இருந்தாலும், உள்ளே கோயில் வழிபாட்டுத் தலம் போன்ற அமைப்பு எதுவும் இல்லை. இது இறந்த உயிரினங்களின் தொகுப்பு போன்ற அருங்காட்சியகம் போல காணப்படுகிறது. இருப்பினும், தவண்டுச்சானி என்பவரால் உருவாக்கப்பட்ட இக்கோயிலை ஒருசிலர் ஆன்மீகத்தோடு பொருத்தி “நரகத்தின் வாசல்” என்று அழைக்கின்றனர். மகிழ்ச்சியை மறைத்து பயத்தை உருவாக்கும் இருள் சூழ்ந்த இடமாகும் இது.
3. சிவப்புக் கோயில்:
தாய்லாந்தின் வாட் சிலாங்கு எனுமிடத்தில் ஹூவா தானான் எனும் கடற்கரையின் உச்சியில் வாட் ரட்சதம்மரம் எனும் சிறிய கோயில் உள்ளது. இக்கோயில் செந்நிறமாக காட்சி அளிப்பதால் சிவப்புக் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் புத்தரின் நினைவிடம் என நம்பப்படுவதால், ஏராளமான பௌத்த பக்தர்கள் இங்கு வருகின்றனர். இங்கு செல்பவர்கள் நாகரிகமான ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகும். இந்தக் கோயிலின் கட்டடக் கலையை ரசிக்கவும், கடற்கரைக் காற்றை சுவாசிக்கவும் ஏராளமான பக்தர்கள் இங்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இங்குள்ள கட்டடம் 100 ஆண்டுகள் பழமையானது. கோயிலின் உள்ளே பெரிய மரச்சிற்பமும், புத்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிலைகளும் உள்ளன.