பொதுவாகவே மாதத்தில் இருமுறை ஏகாதசி திதி வரும்போது (அமாவாசைக்கு அடுத்த 11ம் நாள், அதேபோல பௌர்ணமிக்கு அடுத்த 11ம் நாள்) விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கார்த்திகை மாதம் தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச ஏகாதசி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாக 'பவிஷ்யோத்தர' புராணத்தில் கூறப்படுகிறது. இதை ‘உத்பன்ன ஏகாதசி’ என்று அழைப்பர். இந்த விரதம் அனுசரிப்பவர் தனது பாவங்களிலிருந்து விடுபட்டு இறுதியாக மோட்சத்தை அடைவார் என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் இறந்த பிறகு நேராக மகாவிஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உத்பன்ன ஏகாதசி விரத பலன் 1000 பசுக்களை தானம் செய்வதை விடவும் மேலானது என்று நம்பப்படுகிறது.
முராசுரன் என்னும் அரக்கனை பகவான் மகாவிஷ்ணு வென்றதை உத்பன்ன ஏகாதசி கொண்டாடுகிறது. மேலும், இந்து புராணங்களின்படி ஏகாதசி மாதாவின் பிறப்பு உத்பன்ன ஏகாதசி அன்று நடந்தது. இந்த ஏகாதசி வட இந்திய மாநிலங்களில் வெகு சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. அவர்கள் இன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மஹாவிஷ்ணுவை தொழுகிறார்கள்.
புராணத்தின்படி முராசுரன் என்னும் அரக்கன் தேவர்களின் மேல் போர் தொடுத்து அவர்களை வென்று அவர்களை தேவலோகத்திலிருந்தே தூக்கி எறிந்தான். அவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு முறையிட்டபோது, அவர் ‘எண்ணற்ற அசுரர்களின் தலைகளை தனது சுதர்சன சக்கரத்தால் துண்டித்தவர் என்பதால் மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யும்படி’ கேட்டுக் கொள்கிறார்.
பகவான் மஹாவிஷ்ணு, ‘நிச்சயம் அந்த அரக்கனை ஒழித்து உங்களைக் காப்பேன்’ என்று உறுதியளித்தார். இதையறிந்த முராசுரன் மகாவிஷ்ணுவுடன் போருக்குத் தயாரானான். ஆயிரம் ஆண்டுகளாக இவர்களுக்குள் போர் நடைபெற்றது. முடிவில்லாமல் நடந்த இந்தப் போரில் சற்றே ஓய்வெடுக்க எண்ணிய மஹாவிஷ்ணு பத்ரிகாசிரமம் என்னும் இடத்தில் ஒரு குகையில் யோக நித்திரையில் ஆழ்ந்தார்.
அவர் உறக்கத்தில் இருப்பதாகக் கருதிய முராசுரன், அவரை அப்படியே அழித்து விட எண்ணி அந்த குகையில் நுழைகிறான். அதேசமயத்தில் மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு அழகான கன்னிப்பெண் வெளிப்பட்டாள். அவள் பலவிதமான ஆயுதங்களை தரித்தவளாகக் காணப்பட்டாள். அவள் விரைவாக முராசுரனை பலமாக அடித்து அவன் தலையை துண்டித்து அவனை யமலோகம் அனுப்பினாள்.
யோகநித்திரை கலைந்து எழுந்த மகாவிஷ்ணு அந்த கன்னியைப் பார்த்து வியந்தபோது, அந்தக் கன்னி, ‘இந்தக் கொடூரமானவனை ஒழிக்க நான் தங்கள் உடலிலிருந்து வெளிப்பட்டு அவன் தலையை துண்டித்தேன்’ என்றாள். அப்படி அந்தப் பெண் முராசுரனை வதைத்த தினம் ஒரு உத்பன்ன ஏகாதசி தினமாகும்.
மஹாவிஷ்ணு அந்தக் கன்னிக்கு வரமளிக்க விரும்பியபோது அவள், ‘இந்த உத்பன்ன ஏகாதசி தினத்தன்று விரதம் அனுசரித்து தங்களை தொழுபவர்களின் சகலவிதமான பாவங்களையும் நீக்கி, அவர்கள் சொர்க்கத்திற்கு போக வரமளியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டாள். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரமளிக்கிறார். அந்தக் கன்னியே ஏகாதசி மாதா என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறாள்.
இன்று (26.11.2024) உத்பன்ன ஏகாதசி தினமாகும். இன்றைய தினத்தில் விரதம் அனுசரித்து மஹாவிஷ்ணுவை வழிபட்டு, நாமும் சகல நன்மைகளையும் அடைவோம்.