The Pampa River is as sacred as the Ganges 
ஆன்மிகம்

கங்கையை போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடுவோம்!

ஆர்.ஜெயலட்சுமி

யப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை பம்பா நதிக்கும் அளித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சபரிமலைக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதும் இந்த பம்பா நதிதான். இமயத்தில் தோன்றி, காசி நகரத்தின் வழியாக பாயும் கங்கை நதிக்கு ஒப்பாக பக்தர்களின் பாவங்களைப் போக்கும் புண்ணிய நதியாக இந்த பம்பா நதி உள்ளது. தென்கங்கை, தட்சிண கங்கை என்று அழைக்கப்படும் பம்பா நதியின் கரையோரத்தில்தான் சாஸ்தாவான ஐயப்ப சுவாமி குழந்தை வடிவில் அவதரித்தார் என்று ஐயப்பனின் வரலாறு சொல்கிறது.

சீதா தேவியை ராவணன் கடத்திக்கொண்டு போன பிறகு ஸ்ரீ ராமனும் லட்சுமணனும் சீதா தேவியை தேடி தென்னகம் முழுவதும் காடு மலை என்று சுற்றி அலைந்தனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மதங்க முனிவரின் குடில் கண்ணில் தென்பட, அங்கு சென்றனர். அந்த நேரத்தில் முனிவர் குடிலில் இல்லை. சிவாலயங்களை தரிசிப்பதற்காக தீர்த்த யாத்திரை சென்றிருந்தார். அவருடைய பணிப்பெண் நீலி என்ற மலைவாழ் பெண்தான் ராம, லட்சுமணர்களை வரவேற்றாள்.

முனிவருக்கு பணிவிடை செய்து வந்த அப்பெண், தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்ற காரணத்தால் ஸ்ரீ ராமருக்கும் லட்சுமணனுக்கும் உணவளிக்க தயங்கினாள். நீலியின்  தயக்கத்தை போக்க விரும்பிய ஸ்ரீ ராமர், ‘இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட அனைவருமே சமமானவர்கள்தான். அன்புள்ளம் கொண்டவர்கள்தான் இவ்வுலகில் உயர்ந்தவர்கள்’ என்று சொல்லி, நீலியின் தயக்கத்தைப் போக்கினார்.

ஸ்ரீராமரின் அருளுரையை கேட்டு மகிழ்ச்சியுடன் பணிவன்புடன் அவர்கள் இருவருக்கும் உணவளித்து உபசரித்தாள் நீலி. அதனை அன்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமர் அவளைப் புனிதப்படுத்த விரும்பினார். அவளிடம், ‘உன்னை தாழ்ந்த குலத்தவள் என்று உதாசீனப்படுத்திய மக்கள் என்றென்றும் உன்னை போற்றி வணங்கும் அழியாப் புகழை உனக்கு அளிக்க விரும்புகிறேன். உனக்கு என்ன வேண்டும் கேள்’ என்று அன்புடன் கூறினார் ஸ்ரீ ராமர்.

அதற்கு நீலி, ‘எனக்கு மோட்சம் அளித்து இனிமேல் பிறப்பெடுக்காத நிலை வேண்டும்’ என்று கண்ணீர் மல்கக் கேட்டாள். அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய ஸ்ரீராமர், ‘அன்பால் உயர்ந்த உன்னை இந்த உலகம் போற்றி வணங்கும் நிலை உனக்கு வரும். இந்தப் பகுதிக்கு வரும் அனைவருமே உன்னைப் போற்றி வணங்கி புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன்’ என்று சொல்லி அவளுடைய பூரண விருப்பத்துடன் அவளை கங்கையை போல பொங்கிப் பெருகும் அழகான ஜீவநதியாக மாற்றினார். அந்த நதிதான் பம்பா நதியாகும்.

அதோடு, கங்கைக்கு நிகரான புண்ணிய நதியான பம்பா நதியிலேயே ஸ்ரீராமரும் லட்சுமணனும் மனம் குளிர நீராடி விட்டு, தன்னுடைய தந்தை தசரதனுக்கும் பிதுர் தர்ப்பணம் செய்தனர். ஸ்ரீராமர் போற்றி கொண்டாடிய காரணத்தினாலே பின்னர் பல முனிவர்களும் தற்போது ஐயப்ப பக்தர்களும் பம்பா நதியை போற்றி வணங்கி வருகின்றனர்.

பாகிஸ்தானின் மறைமுக எச்சரிக்கை... சாம்பியன்ஸ் ட்ராபி இந்தியாவில் நடைபெறவுள்ளதா?

அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT