ஆன்மிகம்

அறியாமல் செய்த தவறுக்கு தண்டனை உண்டா?

மாலதி சந்திரசேகரன்

ரு நாள் யாதவ குலத்தைச் சேர்ந்த சாம்பனும் மற்ற இளம் சிறுவர்கள் சிலரும் விளையாட வனத்துக்குச் சென்றனர். அதிக  நேரம் விளையாடியதால் அவர்கள்  தாகத்துக்குள்ளானதால் குடிப்பதற்கு நீரைத் தேடினார்கள். அப்பொழுது அவர்கள் அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணற்றைக் கண்டு, நீருக்காக அந்தக் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தார்கள். அந்தக் கிணற்றுக்குள் ஒரு பெரிய ஓணான் இருப்பதைக் கண்டார்கள்.  அந்தப் பிராணி ஒரு பெரிய குன்றின் அளவு இருந்தது. சிறுவர்கள் அதன் மீது பரிதாபப்பட்டு, அதை வெளியே இழுக்க முயன்றார்கள். பெரிய பெரிய கயிறுகளைக் கொண்டு பலமுறை அதைக் காப்பாற்ற முயன்றும், முடியவில்லை. அதனால் அவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று கூறி, அவருடைய உதவியை நாடினார்கள்.

அவர்களுடன் அந்தக் கிணற்றுக்குச் சென்ற பகவான், தமது இடது கரத்தை நீளச் செய்து அந்த ஓணானைச் சுலபமாக வெளியேற்றினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கரம் பட்டதும் அந்தப் பிராணி உடனே ஒரு தேவராக மாறியது. பிறகு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "நீ யார்? இத்தகைய இழிவான ரூபத்தை எப்படிப் பெற்றாய்?" என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தேவர் கூறினார், "என் பெயர் நிருகராஜன். நான் இஷ்வாகுவின் மகனாக இருந்தேன். தான தருமங்களில் நான் புகழ் பெற்று விளங்கினேன். உண்மையில், நான் எண்ணற்ற பசுக்களை அநேக அந்தணர்களுக்குத் தானம் செய்துள்ளேன். ஆனால் ஒரு சமயம் அந்தண சிரேஷ்டரின் பசு ஒன்று, என்னுடைய பசு மந்தைக்குள் கலந்து விட்டது. இதையறியாத நான் அந்தப் பசுவை வேறொரு அந்தணருக்குத் தானம் செய்து விட்டேன். அந்தப் பசுவின் முதல் உரிமையாளர், அந்தப் பசுவை தானம் பெற்ற அந்தணர் எடுத்துச் செல்வதைக் கண்டு, அது தன்னுடையதென்று இரண்டாவது அந்தணருடன் விவாதிக்கத் துவங்கினார். சிறிது நேர விவாதத்துக்குப் பிறகு அவர்கள் என்னிடம் வந்தனர்.

நானும் அந்த ஒரு பசுவுக்குப் பதிலாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் பசுக்களைத் தருவதாகக் கூறினேன். அறியாமல் செய்த அந்தக் குற்றத்தை மன்னித்தருள வேண்டும் என்றும் அவர்களிடம் வேண்டினேன். அந்த இருவரில் ஒருவரும் எனது வேண்டுகோளை ஏற்கவில்லை. அதனால் அந்தக் கணக்குத் தீராமலேயே இருந்தது. சில காலத்துக்குப் பின் மரணமடைந்த நான், யம தூதர்களால் யமராஜனின் சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன். யமராஜனும் என்னிடம், பாவ பலன்கள் மற்றும் புண்ணிய பலன்கள் ஆகிய இவ்விரண்டில் எதை நான் முதலில் அனுபவிக்க விரும்புகிறேன் என்று கேட்டார். பாவப் பலன்களை அனுபவிக்க முடிவு செய்த நான், இந்த ஓணானின் உடலை ஏற்றேன்" என்றார் அந்தத் தேவர்.

நிருகராஜன் தனது கதையைக் கூறிவிட்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நமஸ்கரித்துக் கொண்டார். அப்பொழுது சுவர்க்க லோகத்திலிருந்து, ஒரு  விமானம் வந்தது. பகவானின் ஆக்ஞைப்படி அந்தத் தேவர் சுவர்க்கத்துக்குச் சென்றார். பிறகு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தனது சகாக்களுக்கும், பொது மக்களுக்கும் ஒரு அந்தணரின் உடைமையைத் திருடுவதிலுள்ள அபாயங்களை எடுத்துக் கூறிவிட்டு தனது அரண்மனை திரும்பினார்.

Meet Gitanjali Rao: The Young Scientist and Inventor Changing the World!

கோலாரம்மன் கோவிலில் மறைந்திருக்கும் மர்மங்கள்!

சருமத்தையும் அழகையும் மெருகேற்ற உதவும் நெய்!

உங்க கிட்ட வந்து பேச பலருக்கும் தயக்கமா? வாய் துர்நாற்றமா? போக்க 10 குறிப்புகள் இதோ!

தோரணங்கள் கட்டும் காரணங்கள் தெரியுமா பாஸ்?

SCROLL FOR NEXT