அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் என்ற அழகிய கடற்கரை கோயில் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இந்தத் திருத்தலம், முருகப் பெருமானின் இரண்டாம் படைவீடு என்ற சிறப்பு பெற்றது. இத்தலத்தை திருச்சீரலைவாய் என்றும் கூறுவர். திருநெல்வேலியிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 45 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
தென்திசையில் மிகப் பழைமையான இந்தக் கோயில் 2500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த ஊரைப் பற்றிய குறிப்பு, தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் ஆகிய சங்க நூல்களில் காணப்படுகிறது. 2000 ஆன்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட புறநானூறு ‘வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில்’ என்று போற்றுகிறது. இதற்கு வெண்மையான நுரைகளையுடைய அலைகளை வீசும் திருச்செந்தூர் என்று பொருள். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், ‘சீர்கெழு செந்தில்’, சிறப்பின் மிக்க திருச்செந்தூர் என்று குறிப்பிடுகிறது. மேலும், அப்பரின் தேவாரம், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் ஆகியவற்றிலும் திருச்சீரலைவாய் என்ற பெயர் காணப்படுகிறது. திருச்சீரலைவாய் என்றால், தெய்வத்தன்மை பொருந்திய அழகிய கடல் முகத்துவாரம் என்று பொருள். அப்பரடிகள் இத்தலத்தைப் பாடியுள்ளார். செந்தில் ஆண்டவன் மீது பல திருப்புகழ்களை அருணகிரிநாதர் அருளியுள்ளார்.
சிவ பக்தனாகிய சூரபத்மன், ‘சிவபிரானின் மகனைத் தவிர தன்னை யாராலும் வெல்ல முடியாது’ என்ற வரத்தைப் பெற்றான். தேவர்களை, சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றினார் முருகப்பெருமான். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் ஆறு நாட்கள் நடந்த போரில், ஆறாம் நாளான சஷ்டியன்று மரமாக உருமாறிய சூரனை வதம் செய்யாமல் சேவற் கொடியாகவும், மயிலாகவும் மாற்றி ஆட்கொண்டார் குமரக் கடவுள். தனது தந்தையான சிவபெருமானை வழிபட முருகப் பெருமான் விரும்பியதால், மயன் இந்தக் கோயிலை உருவாக்கினார். சூரபத்மனை வெற்றி கொண்டதால் முருகப்பெருமான் ‘ஜெயந்திநாதர்’ என்று அழைக்கப்பட்டு, இந்தத் தலம், ‘ஜெயந்திபுரம்’ என்று பெயர் பெற்றது. காலப்போக்கில், இந்தப் பெயர் மாற்றம் பெற்று முருகர் செந்தில்நாதன் எனவும், திருத்தலம் திருச்செந்தூர் எனவும் பெயர் பெற்றது.
டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் கோயில் 1646 முதல் 1648 வரை இருந்தது. நாயக்க அரசரின் உத்தரவின்பேரில் வெளியேறிய டச்சுப் படையினர், தங்கத்தால் ஆனது என்று நினைத்து முருகன் சிலையை கவர்ந்து சென்றனர். கடலில் செல்லும்போது பெரும் புயல் தாக்க, கோயிலில் இருந்து முருகன் சிலையைக் களவாடி வந்ததால் இது நடந்தது என்று பயந்து முருகன் சிலையை கடலில் தூக்கி எறிந்தனர். சிலையை எறிந்தவுடன் மர்மமான முறையில் புயலும் மறைந்தது. கோயில் அர்ச்சகர் கனவில் முருகன் தோன்றி, தான் இருக்குமிடத்தை குறிப்பிட, சிலை கடலிலிருந்து மீட்கப்பட்டது.
தற்போது உள்ள கோயில் 17ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, 157 அடிகள் உயரம் கொண்ட இராஜகோபுரம் ஒன்பது தளங்களுடன் நிர்மாணிக்கப்பட்டது. முருகப்பெருமான் ஒரே திருமுகத்துடன் கடலைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பிரதான கோபுரம் மூலவர் சன்னிதிக்கு எதிரே கிழக்கு திசையில் இருக்க வேண்டும். ஆனால், அந்த திசையில் கடல் இருப்பதால், கோபுரம் மேற்கு திசையில் கட்டப்பட்டுள்ளது. செந்திலாதிபனுக்குப் பின்னால், முருகப்பெருமான் பூஜித்த லிங்கம் உள்ளது. கருவறையில் செந்தில் ஆண்டவனுடைய வலக்கரத்தில் தாமரை மலர் இருப்பதைக் காணலாம்.
லிங்கத்திற்கு முதல் தீபாராதனை நடந்த பின்னர். செந்தில் ஆண்டவனுக்கு தீபாராதனை நடக்கும். முருகன் சன்னிதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னிதி உள்ளது. வள்ளி, தெய்வயானைக்குத் தனித்தனி சன்னிதிகள். கோயிலின் இடது பக்கத்தில் கடற்கரையில் வள்ளி குகைக்கோயில் இருக்கிறது. கடற்கரையிலுள்ள 24 அடி ஆழத்தினைக் கொண்ட நாழிக்கிணறில் நீராடிய பின்னரே பக்தர்கள் கடலில் நீராடுவர். படை வீரர்களின் தாகத்தை தணிப்பதற்காக, முருகன் தனது வேலால் இந்தக் கிணற்றை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. இந்த நாழிக்கிணற்றின் தண்ணீர், உவர்ப்பின்றி, இனிப்பு சுவையுடன் உள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் செந்தில்வேலன். கட்டபொம்மன் பூஜை செய்த விக்கிரகங்களை கோயிலில் காணலாம். கோயிலின் உள்ளே, 120 அடி உயரமும், 60 அடி அகலமும், 124 தூண்களையும் கொண்டு சண்முக விலாச மண்டபம் அமைந்துள்ளது. 2004ம் வருடம் டிசம்பர் மாதம் சுனாமி தமிழ் நாட்டைத் தாக்கியபோது, திருச்செந்தூர் பேருந்து நிலையம், அதனருகில் உள்ள குடியிருப்புகளில் கடல் நீர் புகுந்தது. ஆனால், கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கோயிலில் கடல் நீர் புகவில்லை. வருணதேவன், ‘கோயில் எல்லையைத் தாண்ட மாட்டேன்’ என்று முருகப்பெருமானுக்கு அளித்த சத்திய வாக்கினால், கோயிலின் உட்புறம் கடல் நீர் புகவில்லை என்பது பக்தர்கள் நம்பிக்கை.
கந்தர் சஷ்டி விழா இந்தக் கோயிலில் விசேஷம். ‘தலையா, கடலலையா’ என்று தடுமாறும் வண்ணம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சமயத்தில் திருச்செந்தூர் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.